வரலாறு காணாத வெப்பம் - தென் கொரியாவில் வசிக்கும் தமிழர்களின் நிலை என்ன?

கொரிய பிராந்தியத்தில், கடந்த 111 வருடங்களில் முதன்முறையாக வெப்பநிலையானது கிட்டத்தட்ட 40 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.

இதுவரை இந்த உயர் வெப்பத்தின் காரணமாக பத்து தென் கொரியர்கள் இறந்துள்ளதாகக் கொரிய ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

தமிழர்களின் நிலை

இந்தியாவிலிருந்து தென்கொரியாவின் பல்வேறு பகுதிகளில் பலவருடங்களாக வசித்து வரும் இந்தியர்களிடம் எப்படி இந்த உயர் வெப்பத்தைச் சமாளிக்கிறார்கள் என்பது பற்றியும், வெப்பம் தொடர்பான அவர்களின் அனுபவம் பற்றியும் பிபிசி தமிழ் கேட்டது.

நான் கொரியாவுக்கு முதன் முதலாக வந்த காலங்களில் என்னதான் கோடைக்காலமாக இருந்தாலும் இரவு நேரங்களில் எப்பொழுதும் போல குளிர ஆரம்பித்துவிடும் அதனால் எதாவது பருத்தி ஆடை அணிந்து வெளியில் செல்வேன். ஆனால் தற்போழுது அந்த நிலை முற்றிலுமாக மாறி இரவிலும் வெப்பக்காற்று வீசுவதை உணரமுடிகிறது. என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக தென்கொரிய நண்பர்களும் அவர்கள் வாழ்வில் இப்படி ஒரு அதிவெப்பத்தை பார்த்ததே இல்லை என்றுதான் என்னிடம் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள் என்கிறார் பொறியியல் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் தமிழகத்தைச் சார்ந்த முனைவர் ரத்னசிங்.

மேலும் அவர், "தென்கொரியா நாட்டைப் பொறுத்தவரை இயற்கையை அதிகம் பேணிக்காப்பர்கள். நான் சிலநேரங்களில் அலுவலகம் செல்லும் வழி எங்கும் எந்நேரமும் மரங்களை பராமரிப்பதை நான் நன்கு கவனிப்பேன். மேலும் இந்நாடு மலைகளாலும் அடர்த்தியான காடுகளாலும் சூழப்பட்ட ஒரு நாடு. அப்படி இருக்கும் ஒரு நாட்டிலேயே இப்படி ஒரு காலநிலை மாற்றம் என்றால் மரங்களோ மலைகளோ இல்லாத நாடுகளின் நிலை பிற்காலத்தில் எப்படி இருக்கும்?" என்று வினவுகிறார்.

கடும் குளிரும், அனல் வெயிலும்

கொரியாவில் வழக்கமாக கடும்குளிரின் காரணமாக மக்கள் இறப்பார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இந்த வருடம்தான் அதிவெப்பத்தின் காரணமாக மக்கள் இறந்திருக்கிறார்கள் அதுவும் இதுவரை பத்து பேர் என்பது வருத்தமளிக்கிறது என்கிறார் கொரிய விண்வெளி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த காயத்ரி கிருஷ்ணன்.

"நான் அதிவெப்பத்தின் தாக்கத்தைப் பற்றி என் இந்திய நண்பர்களிடத்தில் விவரித்தால் "நம்ம ஊருல இல்லாத வெயிலா" என என்னிடம் நகைப்பார்கள். அது உண்மைதான் ஆனால் கடும் குளிரில் இருந்து விட்டு அதி வெப்பத்தைச் சமாளிப்பது சிரமமாக இருக்கிறது" என்கிறார்.

அரசின் முயற்சிகள்

தென்கொரிய அரசு அதிகரித்துவரும் வெப்பம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னாலான முயற்சிகள் எடுத்து வருவதாக கூறுகிறார் கச்சோன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் முனைவர் சரண்.

அவர், "செல்போன்களில் விழிப்புணர்வு குறுஞ்செய்தி மற்றும் விழிப்புணர்வு பலகை மூலம் மக்களுக்குத் உரிய தகவல்களைத் தெரியப்படுத்துகிறது அரசு. அதுமட்டுமில்லாது ரயில் நிலையம், பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் குளிர்சாதன வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. தற்சமயம் ஆறுகளின் கரைகளுக்கு அருகில் செயற்கை நீச்சல் குளம் அமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது" என்கிறார்.

உலகளாவிய முயற்சிகள்

அதிகரித்துவரும் வெப்பம் உலகளாவிய பிரச்சனை என்கிறார் கொரிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பேராசிரியராக பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் ஜஸ்டின் ராஜ்.

கடந்த 2006 ம் ஆண்டு வரை 378.21 பிபிஎம் ஆக இருந்த கரியமில வாயுப அளவு தற்பொழுது 407.77 பிபிஎம் வரை உயர்ந்துள்ளது. இது எல்லாமேதான் அதிவெப்பத்திற்கு காரணம் எனக் கூறலாம். தற்போழுது நாம் எந்த அளவு எரிபொருளைப் பயன்படுத்துகிறோமோ அதே அளவு நாம் மரங்களையும் நடவேண்டும். என்னைப் பொறுத்தவரை இந்த விசயத்தில் தென்கொரிய அரசு மற்ற நாடுகளைக் காட்டிலும் மக்களைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு இருக்கிறது அதுவே நல்லது என்கிறார் அவர்.

தென்கொரியாவில் நிலவி வரும் தற்போதைய வராலாறு காணாத வெப்பநிலை பாதிப்பை கருத்தில் கொண்டு நேற்று அதிபர் முன் ஜே இன் தலைமையில் அமைச்சரவை கூடியது. அதில் அவர், "கடந்த சில நாட்களாக நம் நாட்டில் வரலாறு காணாத அளவு வெப்பநிலை அதிகரித்துள்ளது, மக்கள் இறப்பும் நடந்துள்ளது. இதை உடனடியாக இயற்கை பேரிடராக அறிவித்து துரித நடவடிக்கை எடுக்குமாறு நான் உத்தரவிடுகிறேன்" என்றார்.

பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்கவும், உணவு மற்றும் தொற்று நோய்களை எதிர்கொள்வதற்கும் துரித நடவடிக்கைகள் எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :