You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யானை தந்தங்கள் மீதான வர்த்தகத் தடை சீனாவில் அமல்
உலகின் மிகப் பெரிய யானைத் தந்தங்கள் சந்தைகளுள் ஒன்றாக விளங்கும் சீனாவில், புதிதாக பிறந்துள்ள 2018ம் ஆண்டு முதல் யானை தந்தங்கள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் மீதான வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் குறைந்து வரும் யானைகளின் எண்ணிக்கையை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் இந்த நடவடிக்கை ஒரு பெரிய தொடக்கம் என்று பாராட்டப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 30,000 ஆப்பிரிக்க யானைகள் கொல்லப்படுவதாக வன விலங்கு பிரச்சாரகர்கள் நம்புகின்றனர்.
கடந்த ஆண்டு யானை தந்தங்களின் விலை 65 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டதாக சீன அரச ஊடகமான சின்குவா தெரிவித்துள்ளது.
சீனாவுக்குள் நுழையும் யானை தந்தங்களை பறிமுதல் செய்வதிலும் 80 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் சின்குவா குறிப்பிட்டுள்ளது.
இத்தடையானது கடந்தாண்டு அறிவிக்கப்பட்டு, 2017ஆம் ஆண்டின் கடைசி நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
யானை தந்தங்கள் வர்த்தகத்தோடு தொடர்புடைய 67 அதிகாரப்பூர்வ தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதமே மூடப்பட்டுவிட்டதாகவும், மீதமிருந்த 105 கடைகள் ஞாயிற்றுக்கிழமையன்று மூடப்பட்டதாகவும் சின்குவா குறிப்பிட்டுள்ளது.
"இப்போதிலிருந்து யானை தந்த விற்பனையாளர்கள் தாங்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் என்று கூறினால்… அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதுடன் வேண்டுமென்றே சட்டத்தை மீறுகிறார்கள் என்று அர்த்தம்" என சீனாவின் வனத்துறை அமைச்சர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"உலகின் மிகப்பெரிய யானைத் தந்தங்கள் சந்தையின் கதவுகள் மூடப்படுவதை காண்பது மகிழ்ச்சியளிப்பதாக" உலக வனவிலங்கு நிதியம் (WWF) தெரிவித்துள்ளது.
"இது ஆப்பிரிக்காவில் யானை பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஒரு பெரும் ஊக்கமாக இருக்க கூடிய ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்" என்று உலக வனவிலங்கு நிதியத்தின் ஆப்பிரிக்க இயக்குனர் ஃப்ரெட் குமாஹ் ஒரு வலைப்பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இது "யானை வேட்டையாடுவதைக் குறைக்கும் மிகப்பெரிய ஒற்றை நடவடிக்கை" என்று வைல்ட்ஏய்ட் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் நைட்ஸ் தெரிவித்தார்.
"தற்போது வர்த்தகரீதியான யானை தந்தங்கள் விற்பனையை சீனா தடை செய்துள்ளதால், இனி யானைகள் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் 2018ம் ஆண்டை தொடங்கலாம்" என்று அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், இந்த புதிய சட்டமானது யானை தந்தங்களின் வர்த்தக மையமாக கருதப்படும் ஹாங்காங்குக்கு பொருந்தாது என்ற கவலை நிலவுகிறது.
இந்நிலையில், தனது பிராந்தியத்திற்கென தனித்த தடை சட்டத்தை கொண்டு வருவதற்கு ஹாங்காங் முயற்சித்து வருகிறது.
அழிந்து வரும் நிலையிலுள்ள காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கான சர்வதேச வர்த்தக உடன்படிக்கையின் கீழ், 1975 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட யானை தந்தங்களின் விற்பனைக்கு சீனா ஏற்கனவே தடை விதித்துள்ளது.
ஆனால், யானை தந்தங்கள் சார்ந்த மற்ற பொருட்களை வெளிப்படையாக விற்பதற்கு அனுமதிக்கப்பட்டதால் யானை தந்தங்களுக்கான தேவை சட்டவிரோதமான வழியில் பூர்த்தி செய்யப்படுவதாக நீண்டகாலமாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
யானை தந்தங்கள் மீதான சர்வதேச தடை கடந்த 1990ம் ஆண்டே அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :