You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சேலம் 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் தொழில் வளர்ச்சிக்கு தேவை - ரஜினிகாந்த்
சேலம் 8 வழிச்சாலை மாதிரியான பெரிய திட்டங்கள் வந்தால் நாடு முன்னேறும், தொழில் வளரும், இருப்பினும் அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு தக்க இழப்பீடு வழங்கவேண்டும், முடிந்தவரையில் விவசாய நிலத்தை பாதிக்காமல் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரோட்டில் வழியில் கண்டெடுத்த 50,000 ரூபாய் பணத்தை காவல்துறையினரிடம் வழங்கிய 7 வயது சிறுவனை அவனது குடும்பத்தினருடன் ரஜினி இன்று அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து அவனுக்கு தங்கச் சங்கிலியை பரிசாக வழங்கியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், சிறுவனின் செயலை வெகுவாக பாராட்டினார், "பணத்திற்காக எதையும் செய்யத் துணியும் இன்றைய சமூகத்தில், கிடைத்த பணத்தை தன் பணம் இல்லை என்று திருப்பி கொடுத்த யாசினின் குணம் மிகப்பெரியது. யாசினின் பெற்றோருக்கு எனது வாழ்த்துக்கள்" என்று அவர் தெரிவித்தார்.
யாசின் போன்ற சிறுவர்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகம் என்று தெரிவித்த அவர், யாசினை தன் மகன் போல் கருதி அவரின் எதிர்கால படிப்பிற்கான உதவியை தான் செய்வதாகவும் உறுதியளித்தார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தன்னுடன் இணைந்தால் அது தனக்கு மகிழ்ச்சி என்றும், அவருக்கு தனது மனமார்ந்த நன்றிகள் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ரஜினிகாந்த்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் ஊழல் நிறைந்துள்ளது என்ற அமித்ஷாவின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அது அவருடைய கருத்து தான் அதில் எந்த கருத்தும் கூறுவதற்கில்லை என்று தெரிவித்தார்.
லோக் ஆயுக்தா குறித்து கேள்வியெழுப்பியதற்கு, சக்தி வாய்ந்த லோக் ஆயுக்தாவாக இருக்க வேண்டும் என்று அவர் பதிலளித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கத்தக்கது. பணம் மற்றும் நேரம் ஆகிய இரண்டும் மிச்சமாகும். பிற கட்சிகளும் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்