செய்தித்தாள்களில் இன்று: "3 ஆண்டுகளில் தாயகம் திரும்பிய 3 ஆயிரம் இலங்கை தமிழர்கள்"

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி - "3 ஆண்டுகளில் தாயகம் திரும்பிய 3 ஆயிரம் இலங்கை தமிழர்கள்"

கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் தமிழகத்திலுள்ள பல முகாம்களில் தங்கியிருந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 1984ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இன வன்முறைகளைத் தொடர்ந்து 3.04 இலட்சம் பேர் அகதிகளாக தமிழகத்திற்கு வந்தனர். இலங்கையில், போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதிலிருந்து பலர் இலங்கைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தற்போது தமிழத்தின் 24 மாவட்டங்களிலுள்ள 107 முகாம்களில் 61 ஆயிரத்து 422 அகதிகள் வசித்து வருவதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - "இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் இன்னும் மின்சார வசதி கிடைக்கவில்லை"

இந்தியாவிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி கிடைத்துவிட்டதாக பிரதமர் மோதி அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கிட்டதட்ட 5,000 கிராமங்களுக்கு இன்னமும் மின்சார வசதி கிடைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், தற்போது மின்சாரம் கிடைத்துள்ளதாக கூறப்படும் பெரும்பாலான கிராமங்களில் 1-4 மணிநேரமே மின்சாரம் வழங்கப்படுவதும் தெரியவந்துள்ளது. விரைவில் பிரதமரிடம் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த அறிக்கையில், அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 1,044 கிராமங்களிலும், ஒரிசாவில் 666 மற்றும் பீகாரில் 533 கிராமங்களிலும் மின்சார வசதி ஏற்படுத்தப்படாதது தெரியவந்துள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி - தினத்தந்தி - "நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலா?"

நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளுடனான தேசிய சட்ட ஆணையம் ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கி நடைபெற்று வருவதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்தும் பிரச்சனை தொடர்பாக தேசிய சட்ட ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டதற்கு பல்வேறு கட்சிகள் கடிதம் மூலம் பதிலளித்திருந்தன. இந்நிலையில், நேற்று தொடங்கிய கூட்டத்தில் 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகள் பங்கேற்றதாகவும் அதில் பெரும்பாலான கட்சிகள் இந்த முறையில் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அந்த செய்தி்யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :