You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகப் பார்வை: கால்பந்தில் தோற்றாலும் ரஷ்யா கொண்டாடப்படுவது ஏன்?
கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
கால்பந்தில் தோற்றாலும் ரஷ்யா கொண்டாடப்படுவது ஏன்?
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், நேற்று நடந்த நான்காவது காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவும், குரேஷியாவும் மோதின.
இந்த ஆட்டத்தில் இரண்டு அணிகளும் இரண்டு கோல் அடிக்க, 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
இதை தொடர்ந்து ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில், பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என ரஷ்யாவை குரேஷியா வீழ்த்தியது.
காலிறுதியில் வெற்றி பெற்ற குரேஷியா, அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
உலக அளவில் கால்பந்து பட்டியலில் 70வது இடத்தில் இருக்கும் ரஷ்யா, இந்த உலகப்கோப்பையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தரவரிசைவில் கீழே இருந்தாலும், காலிறுதி வரை ரஷ்யா முன்னேறியது.
தற்போது காலிறுதியில் தோற்று வெளியேறிய போதிலும், ரஷ்ய அணியின் சாதனைகளை ரஷ்ய கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஷ்ய கால்பந்து வீரர்களை 'ஹீரோக்கள்' என அந்நாட்டின் அதிபர் புதின் கூறியுள்ளார்.
தெற்கு சூடானில் அதிகார பகிர்வுக்கு ஒப்புதல்
தெற்கு சூடான் நாட்டில் போராளிகளுடன், அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள அந்நாட்டின் அரசு ஒப்புக்கொண்டுள்ளது என சூடான் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். உகாண்டாவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, போராளி குழு தலைவரான ரிக் மச்சாரை மீண்டும் நாட்டின் துணை தலைவராக நியமிக்க தெற்கு சூடான் அதிபர் சால்வா கிர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடுவதாகக் கூறி ரிக் மச்சாரை, 2013-ம் ஆண்டு பதவியில் இருந்து அகற்றினார் அதிபர் சால்வா. இதை தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். நிரந்தர அமைதிக்கு இரு தரப்பில் இருந்தும் கடந்த வாரம் கையெழுத்திடப்பட்டது.
போதைப் பொருள் வன்முறைகளைத் தடுக்க திட்டம்
மெக்ஸிகோ அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள ஆன்டரஸ் மனுவேல் லோபஸ் ஓபரடார், நாட்டில் அதிகரித்து வரும் போதைப் பொருள் வன்முறைகளைத் தடுப்பதற்காக ஒரு பரந்த அளவிலான திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளார். நாட்டில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களிடம் கருத்துகளும் கேட்கப்பட உள்ளது.
ஜப்பானில் கடும் மழை
ஜப்பானின் மேற்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக குறைந்தது 50 பேர் பலியாகியுள்ளனர். டஜன் கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
வியாழக்கிழமை முதல் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஹிரோஷிமா பிரதேசத்தில் பலரும் இறந்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :