You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குழந்தையை விற்றதாக அன்னை தெரசா அறக்கட்டளை ஊழியர் கைது
பிறந்து பதினான்கு நாட்களே ஆன குழந்தையை விற்றார் என்ற குற்றச்சாட்டில் அன்னை தெரசா அறக்கட்டளையை சேர்ந்த ஊழியர் ஒருவரை ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதே கருணை இல்லத்தை சேர்ந்த மேலும் இரண்டு பெண்களை காவல்துறை விசாரித்து வருகிறது.
குழந்தைகள் நல குழுமம் அளித்த புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது.
என்ன நடந்தது?
திருமணமாகாமல் கர்ப்பமான பெண்களுக்காக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி கருணை இல்லங்களை நடத்தி வருகிறது.
குழந்தை தத்தெடுப்பு சட்டத்தில் மாற்றம் வந்ததை தொடர்ந்து மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி குழந்தைகளை தத்து கொடுப்பதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்திவிட்டது.
இந்தியாவில் தத்தெடுப்பு சட்டம் கடுமையாக மாறியதை அடுத்து குழந்தைகள் இல்லாத பெற்றோர் சட்டத்திற்கு புறம்பான வழியில் குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கி வருகின்றனர்.
பிபிசி இந்தியை சேர்ந்த நிரஜ் சின்ஹாவிடம் பேசிய காவல் துறை உயரதிகாரி, "மேலும் சில குழந்தைகள் இந்த கருணை இல்லத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பான வழியில் விற்கப்பட்டு இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்" என்றார்.
ஜார்கண்டின் தலைநகர் ராஞ்சியில் அமைந்துள்ள இந்த கருணை இல்லத்தில் இருந்து ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிபிசியிடம் பேசிய குழந்தைகள் நல குழுமத்தின் தலைவர் ரூபா குமாரி, "உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு இந்த குழந்தையை ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். இது தொடர்பாக இப்போது விசாரித்து வருகிறோம்." என்றார்.
இது தொடர்பாக மேலும் விளக்கிய அவர், "கர்ப்பமடைந்த இளம் பெண் ஒருவர் மார்ச் 19 ஆம் தேதி அந்த கருணை இல்லத்திற்கு வந்திருக்கிறார். அவருக்கு பிறந்த ஆண் குழந்தையை மே 14 ஆம் தேதி ஒரு தம்பதிக்கு விற்றுள்ளனர்." என்றார்.
பல குழந்தைகள் விற்பனை
மேலும் பல நகரங்களில் இதுபோல ரூபாய் 50,000 - 70,000 ஆகிய தொகைக்கு குழந்தைகள் விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்கிறார் அவர்.
ராஞ்சியில் உள்ள இந்த கருணை இல்லத்தில் இருந்த 13 கர்ப்பமடைந்த பெண்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இது போன்ற கருணை இல்லங்களில் உள்ள பெண்கள் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும்போது அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதி தொடர்பாக கருத்து பெற பிபிசி பல முறை மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டியை தொடர்பு கொண்டது
அன்னை தெரஸா, 1950 ஆம் ஆண்டு மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி அறக்கட்டளையை தொடங்கினார். இதில் உலகெங்கும் 3000 கன்னியாஸ்திரிகள் தொண்டாற்றுகின்றனர். இந்த அறக்கட்டளை மூலமாக தொழுநோயாளிகளுக்கான சிறப்பு மையம், பள்ளிகள், இலவச உணவு மையங்கள் மற்றும் நல்வாழ்வு மையங்களை தொடங்கினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்