உலகப்பார்வை: அமெரிக்க சுதந்திர தேவி சிலை மீது ஏறிய பெண்

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

சுதந்திர தேவி சிலை மீது ஏறிய பெண்

அமெரிக்காவில் லிபர்டி தீவில் உள்ள நியூயார்க் துறைமுகத்தில் இருக்கும் சுதந்திர தேவி சிலை தளத்தின் மீது பெண் ஒருவர் ஏறியதையடுத்து, சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அப்பெண்ணிடம் மூன்று மணி நேரம் பேசி சமாதானப்படுத்தி அவரை ஏணி மூலம் கீழே இறங்க வைத்த காவல்துறையினர், தற்போது அவரை விசாரித்து வருகின்றனர்.

இதனை நேரில் பாரத்த பலரும், அதனை படம் மற்றும் வீடியோ பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.

அந்தப்பெண் இவ்வாறு செய்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

மகனின் மருந்தை விற்க முயற்சித்த தாய்க்கு சிறை

ரஷ்யாவில் ஆறு வயது மகனுக்கான மருந்தை விற்க முயற்சி செய்த தாய்க்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உடல்நிலை சரியில்லாத அவரது மகனுக்கு ஒரு குறிப்பிட்ட மருந்து இனி தேவையில்லை என்று அதனை ஆன்லைனில் விற்க முயற்சித்துள்ளார் எகடெரினா கொன்னோவா. இதனை கண்டுபிடித்த போலீஸார் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்துள்ள தொண்டு நிறுவனங்கள், இது தொடர்பான சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

முன்னதாக கடந்தாண்டு, புற்றுநோயால் உயிரிழந்த தன் கணவரின் எஞ்சி இருந்த மருந்துகளை விற்க முயற்சித்த பெண் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற செயலாக்க மையங்கள்

ஐரோப்பிய ஒன்றியம் தென் ஆஃபிரிக்காவில் குடியேற்ற செயலாக்க மையங்களை உருவாக்கும் திட்டம், ஆஃபிரிக்க நாடுகள் முன்னெடுத்தால் மட்டுமே நடைபெறும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், இவ்வாறான மையங்களை தொடங்க ஆஃபிரிக்க நாடுகள் சில காரணங்களால் கவலை கொள்வதாகவும், நைஜீரியாவில் பேசிய மெக்ரோன் கூறினார்.

இதுவரை இத்தகைய மையங்களை நடத்த எந்த ஆஃபிரிக்க நாடும் முன்வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு

கென்யாவில் கடந்த மே மாதம் அணை உடைந்து, 47 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக, இரண்டு பண்ணை மேலாளர்கள் மற்றும் பல அரசு அதிகாரிகளை கைது செய்யும்படி அந்நாட்டு அரசு வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்.

தகுதியில்லாத சில நபர்களால் அந்த அணை கட்டப்பட்டதாகவும், சுற்றுச்சூழல் விதிகளை மீறி அதனை கட்டியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: