தொழில்நுட்ப வளர்ச்சி வேகமும், புரளிகளும் சில கொலைகளும்

பட மூலாதாரம், Reuters
(சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் காரணமாக சிலர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். சிலர் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அது குறித்து பேசுகிறது இந்த கட்டுரை. இந்த கட்டுரையின் ஆசிரியர் கல்வியாளர் ஷிவ் விஸ்வநாதன்.)
கும்பல் மனநிலை - இது சமூக அறிவியலின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. ஸ்திரதன்மை உடைய, சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் ஒரு நாட்டில் ஒழுங்கற்ற கும்பலின் மனநிலை குறித்து விவாதிப்பதே தேவையற்றதாக பிறகு மாறிவிட்டது.
ஃப்ரெஞ்ச் புரட்சியில் கலந்து கொண்டவர்கள் குறித்து விவாதிக்கும் போதோ அல்லது கு குலுக்ஸ் க்ளான் போன்ற இனவாத கும்பல் குறித்து விவாதிக்கும் போதோ இந்த கும்பல் மனநிலை குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கிறது.
இப்போது கதாநாயகர்கள்
இன்றைய சமகால வரலாற்றில், மற்றவர்களை தாக்கும் இந்த ஒழுங்கற்ற கும்பலுக்கு கதாநாய அந்தஸ்து கிடைத்துவிடுகிறது.
இரண்டு விதங்களில் இந்த ஒழுங்கற்ற கும்பல் நாயகத்தன்மையோடு கொண்டாடபடுவதாக பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பெரும்பான்மைவாத ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படும் இந்த கும்பல், அரசின் நீட்டிக்கப்பட்ட ஒரு காவல்படையாக உணவு முதல் உடை வரை அனைத்தையும் கட்டுபடுத்துகிறது.
இந்த கும்பல் தங்களை சட்டபூர்வமாக காட்டிக் கொள்வதையும், வன்முறை அத்தியாவசியமானது என்று அவர்கள் கருதுவதையும் நாம் காணலாம்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அஃப்ரசுல் கான் மற்றும் தாத்ரி பகுதியை சேர்ந்த் அக்லக் வழக்குகளில் இவர்கள் எப்படி எதிர்வினையாற்றினார்கள் என்று நினைவுகூர்ந்தால் புரியும். அதுபோல, உனாவ், கத்துவா வழக்குகளில் இதே கும்பல் எப்படி எதிர்வினையாற்றியது என்று பாருங்கள். அவர்கள் தங்களை வரலாற்றின் நடுவராக, அறநெறிகளை காக்கும் இணை அரசாக கருதி கொண்டார்கள்.

இந்த படுகொலை கும்பல் ஒரு சர்வாதிகார அரசின் அங்கமாக, நீட்சியாக ஆனது. பொதுத் தளத்தில் நியாயமான உரையாடலை விரும்பும் சிவில் சமூகத்தை இந்த கும்பல் பதலீடு செய்கிறது.
அண்மையில் குழந்தை கடத்தல் தொடர்பாக எழுந்த வதந்திகளின் போது இந்த கும்பல் வேறு விதமாக அவதாரம் எடுத்தது. ஆழ்ந்த கவலையின் காரணமாக வன்முறையை கையில் எடுத்ததாக கூறியது.
மாறி வரும் சமூகத்தில் குழந்தை கடத்தல் என்பது ஆழமான அச்சத்தை தரக் கூடியது. குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளின் போது இந்த கும்பல் செய்த கொலையானது வேறு விதமான இலக்கணங்களை கொண்டிருந்தது. அதிகாரத்தினால் இந்த கும்பல் வன்முறையினில் ஈடுபடவில்லை, பதற்றத்தினால் ஈடுபட்டது.
இந்த சம்பவத்தில், அவர்களது நோக்கம் ஏற்கெனவே விளிம்பு நிலை மக்களாக இருக்கும் சிறுபான்மையினரை தாக்குவது அல்ல. வெளியில் இருந்து வந்தவர்களை, இந்த சமூகத்துடன் பொருந்தாதவர்களை தாக்குவதுதான் அவர்களது நோக்கம்.
டிஜிட்டல் வைரஸ்
இந்த இரண்டு விஷயங்களிலும், பொதுவான வைரஸ், டிஜிட்டல் தொழில் நுட்பம்தான்.
இந்த டிஜிட்டல் தொழில் நுட்பம் கிசுகிசுப்புகளையும், வதந்திகளையும் வேகமாக பரப்பியது.
முன்பு வாய்வழியாக பரவும் கிசுகிசுப்புகளில் அபாயம் குறைவாக இருந்தது. அதற்கான சில வரம்புகள் இருந்தன. அவ்வாறான எதுவும் இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் இல்லை.
சிறு நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை இந்த டிஜிட்டல் தொழில் நுட்பம் ஊடுருவி உள்ளது. அந்த தொழில் நுட்பம் வதந்திகளையும் துரிதமாக எடுத்து செல்கிறது. அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அடிப்படையற்ற வதந்திகள்
அனைத்து நிகழ்வுகளிலும், வதந்திகள் ஆதாரமற்றவையாகதான் உள்ளன. குழந்தையை கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தில் மூன்று பேர் திரிபுராவில் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டனர்.
சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய ஒரு தகவல் ஒருவரை கட்டையால், கிரிக்கெட் மட்டையாலும் அடித்துக் கொல்ல காரணமாக ஆகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் வாட்ஸ் அப்பில் பரவிய ஒரு புரளி இந்தி பேசும் ஒருவரை மோசமாக தாக்க காரணமாக அமைந்திருக்கிறது. இது போல, அகர்தாலாவில் குழந்தை கடத்துபவர்கள் என சந்தேகித்து ஒருவரை மிக மோசமாக தாக்கி இருக்கிறார்கள். அதற்கு மூலகாரணம் புரளி. அந்த புரளிகளைத் தாங்கி சென்றது சமூக ஊடகம்.

பட மூலாதாரம், Getty Images
குடிபெயர்வு
குடிபெயர்வு குறித்த அச்சம் மக்களிடம் இருக்கிறது. எங்கிருந்தோ அதிக அளவில் வரும் வெளி மாநிலத்து மக்கள், சொந்த மண்ணிலேயே தங்களை அந்நியர்கள் ஆக்கிவிடுவார்களோ என்று சிலர் அஞ்சுகிறார்கள். அதுவும், இது போன்ற தாக்குதல்களுக்கு காரணமாக அமைகிறது.
ஆனால், பிழைப்புக்காக வாழ்வாதாரத்திற்காக வெளி மாவட்டத்திலிருந்து அல்லது வெளி மாநிலத்திலிருந்து வருபவர்கள் விளிம்புநிலை மக்கள். ஆனால், தவறாக அவர்கள்தான் அஞ்சதக்கவர்களாக கருதப்படுகிறார்கள்.
அவர்கள்தான் புரளிகளால் ஏற்படும் வன்முறைக்கு இலக்காகிறார்கள்.
புரளிகளால் மோசமான தாக்குதலுக்கு உள்ளான 33 வயது சுகந்த சக்ரவர்தியின் கதை மிகவும் வித்தியாசமானது. இவர் அகர்தாலாவில் ஊராரால் மோசமாகத் தாக்கப்பட்டார்.
இதில் விசித்திரம் என்னவென்றால் புரளிகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்ய அரசால் நியமிக்கப்பட்டவர் அவர்.
தொழில் நுட்பத்தின் வளர்ச்சியைப் பயன்படுத்தும் எந்தவொரு பகுத்தறிவும் அற்ற இந்த கும்பல் மாறிவரும் சமூகத்தில் அபாயமாக மாறி வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












