பொன். மாணிக்கவேலுக்கு அரசு ஒத்துழைக்கவில்லையா?: முதலமைச்சர் விளக்கம்
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதில்லையென அந்தப் பிரிவின் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவையில் மறுத்திருக்கிறார்.

பட மூலாதாரம், DIPR
சில நாட்களுக்கு முன்பாக உயர்நீதிமன்றத்தில் ஒரு விசாரணையின்போது ஆஜரான பொன்.மாணிக்கவேல், தமிழக அரசின் மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமியும் கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக அரசு போதிய ஒத்துழைப்புத் தருவதில்லை, இந்தப் பிரிவில் உள்ள அதிகாரிகள் பொன்.மாணிக்கவேலிடம் தெரிவிக்காமல் இடமாற்றம் செய்யப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதிலளித்தார். பொன்.மாணிக்கவேல் கேட்ட அளவுக்கு காவல்துறையினர் அந்தப் பிரிவுக்கு அளிக்கப்பட்டதோடு, திருச்சி அலுவலகத்திற்கு சுமார் 35 லட்ச ரூபாய் செலவில் போதிய வசதிகள் செய்துதரப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் அயல் பணயில் உள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளரை தூத்துக்குடிக்கு திருப்பி அனுப்பும்படி கேட்டபோது, அதற்கு பொன்.மாணிக்கவேல் மறுத்துவிட்டதாகவும் முதல்வர் கூறினார்.
காவல்துறை உயர் அதிகாரிகள் பல்வேறு வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் பொன்.மாணிக்கவேல் பெரும்பாலும் கலந்துகொள்வதில்லை என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையும் அதன் வரம்புக்குட்பட்டு உதவி வருவதாகத் தெரிவித்தார்.
பொன்.மாணிக்கவேல் ஐந்தரை ஆண்டுகாலமாக இதே துறையில் இருப்பதாகவும் நீண்ட நாட்கள் அதே துறையில் இருந்தால் அவரை பணியிட மாற்றம் செய்ய அரசு விரும்பியதாகவும் தெரிவித்தார். இருந்தபோதும், நீதிமன்றம் ஆணையிட்டதால் தொடர்ந்து அவர் அதே பிரிவில் பணியாற்றுவதாகவும் கூறிய முதலமைச்சர், அந்தப் பிரிவினர் கேட்ட எல்லா வசதிகளையும் செய்து தருவதாகத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், NOAH SEELAM/AFP/Getty Images
முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள சிலைகள் களவுபோவதைத் தடுக்கும் பிரிவான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜியாக பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து செயல்பட வேண்டுமென சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அது தொடர்பான வழக்கு சில நாட்களுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் ஆஜரான பொன்.மாணிக்கவேல், தமிழக அரசின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.
சிலைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான அறைகள் கட்டப்படவில்லையென்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகளை அரசு தனக்கு தெரியாமலும் நீதிமன்றத்தில் அனுமதி பெறாமலும் பணியிட மாற்றம் செய்வதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை எனவும் பொன்.மாணிக்கவேல் நீதி மன்றத்தில் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில்தான் முதலமைச்சர் இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
முதலமைச்சரின் குற்றச்சாட்டுகள் குறித்து பொன்.மாணிக்கவேலின் கருத்தை அறிய முயன்றபோது, பிபிசியின் தொலைபேசி அழைப்புகளுக்கும் குறுஞ்செய்திக்கும் அவர் பதிலளிக்கவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள கோவில் சிலைகள் திருடுபோவதைத் தடுக்கவும், திருடுபோன சிலைகளை மீட்கவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு என ஒரு தனிப் பிரிவு தமிழக காவல்துறையில் 1983ல் உருவாக்கப்பட்டது.
இந்தத் துறையின் டி.ஐ.ஜியாக பொன். மாணிக்கவேல் 2012ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். 2015இல் ஐ.ஜி பதவி உயர்வு பெற்ற பின்னரும் இதே துறையில் அவர் தொடர்ந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் அந்தப் பணியில் நீடித்த நிலையில், இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைவராக பொன். மாணிக்கவேல் நீடிக்க வேண்டுமென்றும் அவருக்குத் தேவையான வசதிகளை அரசு செய்துதர வேண்டுமென்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












