நாளிதழ்களில் இன்று: கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ளும் பணி: அரசின் விதிகளை அரசே மீறுகிறதா?
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

பட மூலாதாரம், SEYLLOU
திருவள்ளூர் மாவட்டம் வழியாக பாய்ந்து செல்லும் கொசஸ்தலை ஆற்றில் தனியார் நிறுவனங்களின் மணல் கொள்ளையை தடுப்பதற்காக, தமிழக அரசின் பொதுப்பணித் துறையே நேரடியாக மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் அரசே அரசின் விதிகளை மீறுவதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, கொசஸ்தலை ஆற்றில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை மணல் அள்ளுவதற்கான அனுமதியை நிபந்தைகளோடு அளித்திருந்தார் மாவட்ட ஆட்சியர். அதன்படி கடந்த ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் மணல் அள்ளும் பணிகளின்போது அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பரப்பிலும், ஆழத்திலும், அளவிலும் மணல் தோண்டப்படுவதாகவும், இது சென்னையின் நீராதாரத்தையே பாதிக்கக்கூடும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து (தமிழ்)

பட மூலாதாரம், Getty Images
டீசல், பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக தி இந்து (தமிழ்)செய்தி வெளியிட்டுள்ளது.
பெட்ரோல், டீசலை தினந்தினம் விலை நிர்ணயம் செய்வதை நிறுத்தி விலை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், காப்பீட்டுத் தொகை உயர்வு, சுங்கச்சாவடிகள் மூடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி

பட மூலாதாரம், Getty Images
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,000 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு நாட்டிலிருந்து தப்பியோடிய தொழிலதிபர் நிரவ் மோதி மீது சட்டதிற்கு புறம்பாக ஆறு பாஸ்போர்ட்டுகளை வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
நிரவ் மோதியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து ஆய்வு செய்த மத்திய உளவுத்துறை அவர் ஆறு பாஸ்போர்ட்டுகளை வைத்திருந்ததாகவும், அவற்றில் நான்கை அவர் நீண்ட காலமாக பயன்படுத்தவில்லை என்று தெரியவந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனவே, சட்டத்திற்கு புறம்பான வகையில் ஆறு பாஸ்போர்ட்டுகளை வைத்துள்ள நிரவ் மோதியின் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து (ஆங்கிலம்)

பட மூலாதாரம், Getty Images
டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கான விடயம் குறித்து அனைத்து தரப்பினரும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்ததாக தி இந்து (ஆங்கிலம்) செய்தி வெளியிட்டுள்ளது.
அதிகளவிலான நிதியும், வளங்களும் தேர்தல் பணிகளுக்கான வீணாவதை தடுக்கவும் இந்த திட்டம் உதவுமென்று பிரதமர் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












