You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவா: பணம் கொட்டும் டால்பின் சுற்றுலா- இயற்கையை காக்க ஒரு போராட்டம்
- எழுதியவர், காரா தேஜ்பால்
- பதவி, பிபிசிக்காக
சாப்போரா நதியை நோக்கி படகுகின் ஓட்டுநர் சாம் விரைவாகச் சென்றபோது, படகின் முன் பகுதியில் இருந்த பூஜா மித்ரா, படகை இறுகப் பிடித்துக்கொள்ளும்படி கூறினார். தண்ணீர் ஓட்டம் அதிகமாக இருந்தது, காற்றில் உப்பை சுவைத்தேன். கடற்கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் உள்ளே சென்றபோது, படகின் ஓட்டுநர் சாம் படகை நிறுத்திவிட்டு, ஒரு இடத்தை காண்பித்து சிரித்தார். அங்கு ஹம்ப்பேக் டால்பின்களை கண்டேன்.
டால்பின் தனது தலைக்கு மேலே இருக்கும் சுவாசிக்கும் துளையால் தண்ணீரை பீச்சியடித்தது. தொலைவில் இருந்தபடி டால்பினை பார்த்தோம். அதனைச் சுற்றி படகின் நகர்ந்து கொண்டிருந்தோம்.
இன்னும் தெற்கில் உள்ள சின்க்யூரிம் கடலில் டான்பின்களை பார்க்கும் அனுபவம் அருமையானது. சுற்றுலாப் பயணிகளை வெறும் 300 ரூபாய்க்கும் டால்பின்களை காண அழைத்துச் செல்ல டஜன் கணக்கான படகு நிறுவனங்கள் உள்ளன.
சுற்றுலாப் பயணிகளை அழைத்துக்கொண்டு படகுகள் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. டால்பின்களை கட்டாயம் காட்டுவதாகச் சுற்றுலா பயணிகளிடம் உறுதியளிக்கும் படகு நிறுவனங்கள், தினமும் காலை டால்பின்களை தேடி கடலுக்குள் செல்கின்றனர்.
கோவா கடல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக 2014-ம் ஆண்டு சின்க்யூரிம்மிற்கு வந்த பூஜா, கடல் விளங்குகள் சூழலியல் நிபுணர் திபானி வழிகாட்டுதலில் அடுத்த இரண்டு ஆண்டுகள் செயல்பட்டார்.
திபானியின் தலைமையில் செயல்பட்ட இக்குழுவினர், டால்பின்களை காண்பதற்கான வழிகாட்டு முறைகளைத் தயாரித்ததுடன், சுற்றுலாப் பயணிகளை டால்பின்களை நோக்கி அழைத்துச் செல்ல 40 படகு உரிமையாளர்களுக்குப் பயிற்சியும் அளித்தனர். பிறகு இக்குழுவினர் திடீர் சோதனை நடத்தியபோது, இவர்கள் உருவாக்கிய வழிகாட்டிகளை யாரும் பின்பற்றவில்லை என்பதைக் கண்டறிந்தனர்.
``கோவாவில் டால்பின் சுற்றுலா அதிகரித்தபோது, இதனை 'தண்ணிர் விளையாட்டு' என மாநில அரசு வகைப்படுத்தியது. 'டால்பினைகளை காணவில்லை என்றால், பணம் தர தேவையில்லை' என்ற முறையைப் படகு நிறுவனங்கள் ஊக்குவித்தன.
இதனால் டால்பின்களை கட்டாயம் காட்ட வேண்டும் என்ற அழுத்தம் படகு நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. இல்லையென்றால், அவர்களுக்கு பணம் கிடைக்காது. இந்தப் போட்டி முறை டால்பிகளுக்கு கெடுதலே ஏற்படுத்தியது'' என்கிறார் பூஜா.
கனவு குழு:
கோவாவில் காணப்படும் ஹம்ப்பேக் டால்பின்கள் அருகிவரும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடலில் வாழும் இவை, எப்போதாவது நதிக்கு வரும். ''வழக்கமாக 4-5 சிறிய டால்பின்களை பார்ப்போம். ஆனால், ஒரு நாள் 80 டால்பின்களை பார்த்தபோது ஆச்சர்யமடைந்தோம்'' என்கிறார் சந்துரு.
பெருங்கடல் சுற்றுலாவை நடத்தும் டெர்ரா கான்சியஸ் எனும் அமைப்புடன் இணைந்து செல்படுகிறார். இவர் மீனவ குடும்பத்தை சேர்ந்தவர். இரண்டு தலைமுறைக்கு முன்பு, இவர்கள் குடும்பம் மகாராஷ்டிராவில் இருந்து கோவாவிற்கு குடிபெயர்ந்தது. டெர்ரா கான்சியஸ் அமைப்பு, டால்பின்களை காண உருவாக்கப்பட்ட எல்லா வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படுகிறது. ''நாங்களும் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்கிறோம். ஆனால், மற்ற நிறுவனங்கள் செய்யும் சுற்றுலா மாடல் மிகவும் லாபகரமானது'' என்கிறார் சந்துரு.
இவர்களிடம் டால்பின் சுற்றுலா சென்றால், படகில் ஏறுவதற்கு முன்பு டாம்பின் சுற்றுலா பற்றி சுற்றுலாப் பயணிகள் முழுமையான விளக்கக் காட்சிகளை பார்க்க வேண்டும். டால்பின்களின் 50 மீட்டாருக்கு தொலைவிலே, படகு ஓட்டுநர்கள் படகை நிறுத்திவிடுவார்கள். டால்பின்களை காட்டுகிறார்களோ இல்லையோ படகு ஓட்டுநர்களுக்குக் கட்டாயம் வருமான கிடைக்கும்.
``முன்பு டால்பின்களை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால், இப்போது நாங்கள் செய்வது மகிழ்ச்சியைத் தருகிறது. டால்பின்களை பார்த்தவுடன் படகின் இஞ்சினை நிறுத்திவிடுவதால் பெட்ரோலும் மிச்சமாகிறது'' என்கிறார் சந்துரு.
தற்போது எங்களுடன் வந்து சிரித்துக்கொண்டிருக்கும் படகு ஓட்டுநர் சாமிடம் சொந்த படகு இல்லை. 13 வருடங்களாகக் கோவாவில் படகு ஓட்டுக்கெண்டிருக்கிறார். முன்பு பூஜா கூறிய வழிமுறைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தற்போது அதனைப் பின்பற்றுகிறார் சாம்.
''பூஜா கூறியதை ஏற்றுக்கொள்ளுமாறு, சந்துரு என்னைச் சமாதானப்படுத்தினார். அப்போது முதல், ஒவ்வொரு வாரமும், பூஜாவுடன் இணைந்து சுற்றுலா பயணிகளைக் கடலுக்குள் அழைத்துச் செல்கிறேன். இந்த வேலை எங்களை வயிற்றை நிரப்ப போதுமானதாக இருக்கிறது. டால்பின் சுற்றுலாவுக்கான வழிகாட்டிகளை நான் பின்பற்றுவதால், எனது தந்தை மிகவும் பெருமைப்படுகிறார்'' என்கிறார் சாம்.
டால்பின் போன்ற கடல் வாழ் உயிரினங்களுக்கு அவசரக் கால உதவி தேவைப்படும்போது, கோவா கடற்கரையில் ரோந்து பணியில் இருக்கும் உயிர் பாதுகாலவர்களும், டால்பின் காவல் குழுவினரும் முதலில் உதவிக்கு வருகிறார்கள். இந்த காவல் குழுவினர் ''மரைன் ஸ்ட்ராண்டிங் நெட்வொர்க்'' என அழைக்கப்படுகின்றனர்.
கோவா கடற்கரையின் ஆமை மற்றும் டால்பின்களின் இறப்பு குறித்து முக்கிய தகவல்களை இவர்கள் திரட்டி வருகின்றனர். எங்கேனும் இறந்த டால்பின்களை இக்குழுவினர் பார்த்தால், அதனை வாட்ஸ் அப் குழுவில் பதிவேற்றுகிறார்கள். கடந்த 11 மாதங்களில் 20 டால்பின்கல், 52 ஆமைகள் இங்கு இறந்ததை இவர்கள் கண்டறிந்துள்ளனர்.
கோவா ஒரு பல்லுயிர்ப்பெருக்கம் நிறைந்த பகுதி. ஆனால், இதன் இயற்கை வளம் நிலக்கரி சுரங்கங்களாலும், ரியல் எஸ்டேட் தொழிலாலும்,, முறைப்படுத்தப்படாத சுற்றுலாவாலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சந்துரு, சாம் போன்றவர்கள் கோவாவின் இயற்கை வளத்தைக் காப்பாற்ற உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்