நாளிதழ்களில் இன்று: அதிருப்தியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்: முதல்வர் குமாரசாமிக்கு தலைவலி

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமலர்:

கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்துவருகிறது. கடந்த 6-ம் தேதி காங்கிரசின் 14, ம.ஜ.தவின் 9, பகுஜன் சமாஜின் 1, சுயேச்சை 1 என 25 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில், அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸார் ஒரு புறமும், செல்வாக்கு மிகுந்த துறை கிடைக்காததால் பிற கூட்டணி கட்சியினர் மறு புறமும் நெருக்கடி தருவதால் முதல்வர் குமாரசாமிக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது என்றும், பதவி கிடைக்காத முன்னாள் அமைச்சர்கள் பாடீல், சதீஷ் ஜார்கி ஹோலி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி:

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைக்காவிரி பகுதியில் பெய்த பலத்த மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோரத்தில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முக்கிய அணையான கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துவருகிறது என்கிறது தினத்தந்தி செய்தி.

தினமணி:

உத்தரபிரதேச கல்வி வாரியம் நடத்திய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில், 93.5 சதவீத மதிப்பெண் பெற்று, 7-வது இடம் பிடித்த அலோக் மிஸ்ரா என்ற மாணவருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கினார். ஆனால், கையெழுத்து பொருந்தவில்லை என்று கூறி, காசோலை திரும்பி வந்து விட்டது. அத்துடன், மாணவரின் தந்தைக்கு வங்கி அபராதமும் விதித்தது என தினமணி செய்து வெளியிட்டுள்ளது.

தி இந்து (தமிழ்)

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் வழக்கில் சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையும் அடையாளம் குறிப்பிடப்படாத அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குட்கா ஊழல் வழக்கில் அடையாளம் தெரியாத கலால் வரித்துறை, தமிழக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி, அரசு அதிகாரிகள், தனிநபர்கள் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதுபோலவே, தற்போது அமலாக்கத்துறையும் அடையாளம் குறிப்பிடப்படாத அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது என்கிறது தி இந்து (தமிழ்) செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: