ஆதார் மூலம் கசியும் ரகசியங்கள் - கவலையில் இந்திய மக்கள்
- எழுதியவர், ஜூபைர் அஹமத்
- பதவி, பிபிசி
இந்தியாவில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களில் 96 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தங்கள் தகவல்களின் ரகசியம் பாதுகாக்கப்படுகிறதா என்று கவலையடைந்துள்ளனர். அவர்களின் தரவுகளை அரசு என்ன செய்கிறது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகின்றனர்.

பட மூலாதாரம், Huw Evans picture agency
இது, அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஐ.டி.சைட் (IDSite) எடுத்த கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டவை. வங்கி மற்றும் பொது விநியோக நடைமுறைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்பதை ஒப்புக்கொள்வதாக 87 சதவிகித மக்கள் கூறியதாகவும் இந்த சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
'மிகவும் விரிவான ஆய்வு'
மத்திய அரசின் ஆதார் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கியுள்ளது. தற்போதைய இந்த ஆய்வு, 2017 நவம்பர் முதல் 2018 பிப்ரவரி காலகட்டத்திற்குள் நடத்தப்பட்டது.
ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களில் 21 மாவட்டங்களை சேர்ந்த 3000 குடும்பங்களை தொடர்பு கொண்டு நட்த்தப்பட்ட இந்த ஆய்வு மிகவும் விரிவானது.
12 இலக்க எண் கொண்ட ஆதார் அடையாள எண்ணை இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் பெறலாம்.
இந்த திட்டத்திற்காக மக்களிடம் இருந்து பெறப்படும் தரவுகள் கசிவதாக தகவல்கள் வெளியானதால், ஆதார் திட்டம் சர்ச்சைக்குரியதாகிவிட்டது. அரசாங்க முகமைகள், மக்களை கண்காணிப்பதற்காக ஆதார் தரவுகளை பயன்படுத்த முடியும் என்ற அச்சத்தை பலர் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆதார் திட்டதிற்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தங்களின் தனியுரிமை மீதான தாக்குதல் என்று இந்தத் திட்டத்தை எதிர்த்துள்ளனர். குடிமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளையும் பிற சேவைகளையும் பயன்படுத்த ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆய்வின் அறிக்கையை வெளியிட்ட ரொனால்ட் ஆபிரகாம், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பலர், தனியுரிமை மீறல்கள் நடைபெறுவதாக கூறுவதை ஒப்புக் கொள்கிறார். ஆனால் தங்களுடைய தனியுரிமை பற்றிய கேள்வியை அவர்கள் ஆதாருக்கு மட்டுமல்ல, பிற வேறுவிதமான தரவு அமைப்புகளுக்கும் பொருந்தும் என்று சொல்வதையும் குறிப்பிடுகிறார்.
"யுஐடிஏஐ சேவையகத்திலிருந்து (சர்வர்) தரவு சட்டவிரோதமாக திருடப்படவில்லை, மாறாக பிற சேவையகங்களிலிருந்து திருடப்பட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் திட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசின் முகமை ஆகும்.
நான்கு முக்கிய முடிவுகள்
- மக்களின் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்க வலுவான ஒரு சட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என்று கோரும் இந்தியர் ரோனட் ஆபிரகாம், தனிப்பட்ட தகவல்களும், பிற தரவுகளும் கசிவதை தடுக்கும் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை அமைப்பை இந்திய அரசு உருவாக்கவேண்டும் என்று கூறுகிறார்.
- தரவுகளை சார்ந்தே அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் ஆதார் திட்டம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை பற்றி தெளிவாக தெரிந்துக் கொள்வதுதான் இந்த கணக்கெடுப்பின் நோக்கம் என்று சொல்கிறார் கணக்கெடுப்பில் கண்டறிந்ததில் நான்கு முக்கியமான விஷயங்கள் குறிப்பிடத்தக்கவை என்று ஆப்ரஹாம் கூறுகிறார்.
- ஆதார் தகவல் விரிவாக இருந்தாலும், தரவுகளின் தரத்தை மேம்படுத்துவது அவசியம். ஆதார் தொடர்பான தவறுகள் கிட்டத்தட்ட 9 சதவிகித அளவுக்கு இருக்கின்றன. இது பொது விநியோக முறையில் இருப்பதைவிட 1.5 சதவிகிதம் அதிகம்.
- ஆதார் தொடர்பான தவறுகளினால், பொது விநியோக முறையில் பொருட்கள் வழங்குவது மறுக்கப்படுவதால் ஏற்படும் சிக்கல்கள் அதிகரித்துள்ளன. ஆனால் ஆதார் அட்டை அல்லாத காரணங்களால் ஏற்படும் பிரச்சனைகளுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவே.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 96 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் அந்தரங்க உரிமை பற்றிய முக்கியத்துவத்தை அறிந்தவர்கள். அரசு தங்கள் தரவுகளை என்ன செய்யும் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். ஆனால் அதில் 87 சதவிகிதத்தினர் கட்டாய ஆதார் இணைப்பை ஏற்றுக்கொண்டனர்.
வங்கி கணக்குகள் தொடங்குவதற்கு டிஜிட்டல் பதிப்புகளை விட அனலாக் பதிப்பு (ஒரு காகித அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது) அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. 65 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் வங்கி கணக்குகளை தொடங்க ஆதார் அட்டையைப் பயன்படுத்தி உள்ளனர்.
IDSite என்பது இந்தியா உட்பட பல நாடுகளில் பணிபுரியும் ஒரு அமெரிக்க நிறுவனமாகும். தரவுகளிலிருந்து பெறும் தகவல்களைப் பயன்படுத்தி முடிவுகளை எடுக்க இந்த ஆய்வுகள் அரசாங்கங்களுக்கு உதவலாம். இந்த நிறுவனத்தின் தற்போதைய ஆதார் தொடர்பான கணக்கெடுப்பு, ஓமிதியார் நெட்வொர்க்கின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.
இந்திய அரசுக்கும் இந்த சமீபத்திய அறிக்கைக்கும் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைப்பாளர்கள் கூறுகின்றனர். இந்திய அரசின் UIDAI உடன் தங்கள் ஆய்வின் முடிவுகளை பகிர்ந்து கொண்டதாக கூறும் ஆபிரகாம், இந்த அறிக்கை தொடர்பாக என்ன செய்யலாம் என்பது அரசின் விருப்பம் என்று கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












