கர்நாடக முதலமைச்சரானார் பி.எஸ்.எடியூரப்பா; தர்ணா போராட்டத்தில் காங்கிரஸ்

கர்நாடக முதலமைச்சரானார் பி.எஸ் எடியூரப்பா

பட மூலாதாரம், Reuters

கர்நாடகா மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பி.எஸ் எடியூரப்பா பதவி ஏற்றார். பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் வாஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி நட்டா, பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எடியூரப்பாவுடன் மற்ற அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையின் முன் பா.ஜ.க தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பா.ஜ.க தொண்டர்கள் கொண்டாட்டத்தில்

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியதையடுத்து இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்நிலையில், எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கர்நாடக சட்டப்பேரவை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோரும் இந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா

பட மூலாதாரம், MUGILAN CHANDRAKUMAR

படக்குறிப்பு, சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா
காங்கிரஸ் கட்சியினர் தர்ணா

அரசியலமைப்புக்கு எதிராக பா.ஜ.க செயல்படுகிறதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

"பா.ஜ.க வெற்றியை கொண்டாடும் அதெவேளையில், ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்காக இந்தியா துயரப்படுகிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல்

பட மூலாதாரம், TWITTER@RAHUL GANDHI

"நான் எடியூரப்பாவின் இடத்தில் இருந்திருந்தால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை, முதல்வராக பதவியேற்று இருக்க மாட்டேன்" என முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் கூறியுள்ளார்.

பா.சி

பட மூலாதாரம், [email protected]

கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் மே 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 104 தொகுதிகளில் பாஜக வென்றது. காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம் (மதச்சார்பற்றது) 37 இடங்களிலும் வென்றுள்ளன.

கடந்த 15-ம் தேதி எடியூரப்பா, கர்நாடகாவில் ஆட்சி அமைக்க கோரி கடிதம் தந்ததையடுத்து, கர்நாடக முதல்வராக பதவியேற்று ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு அழைப்பு விடுத்தார் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா.

பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: