You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காவிரி அமைப்புக்கு எவ்வளவு அதிகாரம் அளிக்கிறது மத்திய அரசின் வரைவறிக்கை?
காவிரி விவகாரத்தில், நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வரைவறிக்கை பல்வேறு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ள போதிலும், இன்னும் தெளிவான நிலை ஏற்படவில்லை.
கடந்த வாரம், உச்சநீதிமன்றம் அளித்த ஆணைக்கு இணங்க, காவிரி நீர் பங்கீடு குறித்த வரைவறிக்கையை சமர்ப்பித்தது மத்திய அரசு.
இந்த வரைவறிக்கையை நீர்பாசனத்துறை செயலாளர் யூ.பி சிங் சமர்பித்தார். இந்த அறிக்கையில், அமைக்கப்படவுள்ள காவிரி நீர் பங்கீட்டு குழு எவ்வாறு அமையும் என்பது குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு, நடுவர் மன்றம் அளித்த பரிந்துரைகளுக்கு ஏற்ற வகையிலேயே இந்த வரைவும் அமைந்துள்ளது. ஆனால் இந்த வரைவுத் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைக்கப்பட உள்ளவர்கள், காவிரி நதி நீருக்கான மேலாண்மை வாரியமா அல்லது குழுவா அல்லது அமைப்பா என்பது குறித்த எந்த பெயரையும் மத்திய அரசு அளிக்கவில்லை.
அதற்கு மாறாக, எவ்வாறு இதை அழைக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றமே முடிவு செய்யவேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
வரைவறிக்கை விவரம்:
- குழுவின் தலைவர், செயலாளர், இரண்டு முழுநேர உறுப்பினர்கள் மற்றும் இரண்டு பகுதிநேர உறுப்பினர்கள் என்று 6 பேரை மத்திய அரசு தேர்வு செய்து அளிக்கும்.
- மீதமுள்ள 4 பேரும் நீர் பங்கீட்டில் தொடர்புடைய நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகளாக செயல்படுவார்கள். அவர்களை அந்தந்த மாநிலங்களே தேர்வு செய்யும்.
- இந்த குழுவில் இடம்பெறும் அனைவருமே, நீர்பாசனம் அல்லது விவசாயம் ஆகிய துறைகளில் நிபுணர்களாகவோ, அது தொடர்புடைய அமைச்சகத்தில் பணியாற்றியவர்களாகவோ இருப்பார்கள்.
- இந்த குழு, 740 டி.எம்.சி தண்ணீரை பகிர்ந்தளிக்கும் பணியை ஒருங்கிணைப்பு முறையில் மேல்பார்வையிட்டு செயல்படுத்தும்.
- தண்ணீர் எவ்வளவு உள்ளது, எவ்வளவு திறக்கப்படவேண்டும், எவ்வாறு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பனவற்றை இந்த குழு முடிவு செய்யும்.
- இந்த குழுவின் செயல்பாடுகளுக்கு எதிராக எந்த மாநிலம் செயல்பட்டாலும், அது குறித்த தகவல்கள் மத்திய அரசிற்கு குழுவால் அனுப்பப்படும்.
- மத்திய அரசு, சம்மந்தப்பட்ட மாநிலத்திற்கு வழிமுறைகளை அளிக்கும். இதன்மூலம், மாநில அரசுகள் தன்னிச்சையாக செயல்படுதல் என்பது முடியாத நிலை ஏற்படுகிறது.
- மேலும் இந்த குழுவால் 10 நாட்களுக்கு ஒருமுறை, நீர் இருப்பு, நீர்மட்டம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கைகளாக மத்திய அரசிற்கு சமர்ப்பிக்கப்படும். இதுவும் இதற்கு முன்பு நடுவர் மன்றத்தில் அளிக்கப்பட்டிருந்த வழிமுறையே.
- உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு 15 ஆண்டுகள் செல்லும். இவைகளில் மாற்றம் செய்ய இயலாது.
சமர்ப்பிக்கப்பட்ட வரைவின் நகல், சம்மந்தப்பட்ட நான்கு மாநிலங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் மாறுதல் இருந்தால் இரண்டு நாட்களில் கூறுமாறு உச்சநீதிமன்றத்தால் மாநிலங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
வரும் புதன்கிழமை (16.05.18) மாநிலங்களின் கருத்துக்களை கேட்டறியவுள்ள உச்சநீதிமன்றம், அதைத்தொடர்ந்து, இந்த வரைவு அறிக்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசுக்கு உத்தரவுகளை அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்