நீட் தேர்வுக்கு துப்பட்டாவை கழற்றியது பாலியல் துன்புறுத்தலுக்கு சமம்: விஜயதரணி

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு எழுதச் சென்ற பெண்களின் துப்பட்டாவை கழற்றிய நடைமுறை பாலியல் துன்புறுத்தலுக்குச் சமம் என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த நீட் தேர்வை எழுத வந்த பல பெண்களிடம் தேர்வு எழுதுவதற்கு துப்பட்டா அணியாமல்தான் செல்லவேண்டும் என்று தேர்வு மையத்தில் இருந்த பாதுகாவலர்கள் கூறியதை அடுத்து, பல மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் துப்பட்டாவை கழற்றிக் கொடுத்துச் சென்றனர். சிலர் தேர்வுமையத்தின் வெளியில் வைத்துவிட்டுப் போகவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர். இந்த சம்பவம் கண்டனத்திற்கு உரியது என்கிறார் விஜயதரணி.
சிரமத்தை சந்தித்த பெண்கள்
''ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வளர்ப்பு முறை வேறுபடும். வெளியில் போகும்போது துப்பட்டா அணிந்துதான் செல்லவேண்டும் என பல பெற்றோர்கள் கூறுவதை இன்றும் நம்மால் பார்க்க முடிகிறது. தேர்வு எழுதுவதற்காக மேல் துணியை கழற்றிவிட்டுத் தான் போக வேண்டும் என்று வலியுறுத்துவது, அந்தப் பழக்கம் இல்லாத பெண்களிடம் மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்,''என்றார் விஜயதாரணி.
'சிபிஎஸ்இ கலைக்கப்படவேண்டும்'
மேலும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்ற கோரிக்கை மாறி, தற்போது நீட் தேர்வை எங்கள் மாநிலத்திலாவது நடத்துங்கள் என்று கோரும் நிலைக்கு நம்மை மத்தியில் ஆளும் பாஜக தள்ளியுள்ளது என்றார் விஜயதரணி.
வினாத்தாள் அமைப்பது, தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுப்பது, தேர்வை நடத்துவது என பல கோளாறுகளுடன் செயல்பட்ட சிபிஎஸ்இ நிர்வாக கமிட்டியை உடனடியாக மாற்றவேண்டும். அத்தோடு தேர்வு நடத்தும் பொறுப்பை சிபிஎஸ்இயிடம் இருந்து திரும்பப்பெறவேண்டும் என்றார் விஜயதரணி.
''அமெரிக்காவில் உள்ள மருத்துவப் பல்கலைகழங்களில் சேர யுஎஸ்எம்எல்ஈ (USMLE)என்ற தேர்வை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தனியார் மையங்களில் எழுதுகிறார்கள். அங்கெல்லாம் கூட துப்பட்டா அணியக்கூடாது, மூக்குத்தி அணியக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. அந்த தேர்வு வினாக்களும் தேர்ந்த மருத்துவரை உருவாக்கும் நோக்கத்தோடு வடிவமைக்கப்படுகிறவைதான். சர்வதேசத் தேர்வுகளைக் கூட ஒரு தமிழ் மாணவன் அவனது சொந்த ஊரில் எழுத முடியும் என்ற நிலையில், இந்திய அளவில் நடைபெறும் தேர்வை, ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு சென்று எழுதவேண்டும் என்ற கட்டாயம் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி அல்லாமல் வேறில்லை,'' என்றார் விஜயதரணி.

வெளிமாநிலத்தில் தேர்வு மையங்களை அமைத்தது, ஒரு சில மையங்களில் தேர்வு மையத்தில் வினாத்தாள்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் அளிக்கப்பட்ட சம்பவம், வினாத்தாள் அளிக்க ஏற்பட்ட தாமதம் என மாணவர்கள் ஒவ்வொருவரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என அரசியல் கட்சியினர் கோரி வருகின்றனர்.
நீட் விலக்கு கோரிக்கை முடிந்ததா?
நீட் தேர்வு எழுதுவதற்காக மகனை கேரளா அழைத்துச்சென்ற தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் எர்ணாகுளத்தில் மாரடைப்பால் இறந்த சம்பவத்தை கண்டித்துள்ள தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு ஒவ்வொரு ஆண்டும் நரபலி கேட்கும் நீட் தேர்வை உடனே முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழக மாணவர்களுக்கு எவ்வித நலனும் கிடைத்து விடக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாகவும் அதற்கு அதிமுக அரசு ஆதரவு அளிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் ஸ்டாலின். 'நீட் தேர்வுக்காக கடந்த ஆண்டு அனிதாவின் உயிரைப் பறிகொடுத்த நாம் இந்த ஆண்டு கிருஷ்ணசாமியின் உயிரை பறிகொடுத்துள்ளோம். நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கேட்பதற்குப் பதிலாக ஆட்சியாளர்கள் மத்திய அரசின் தலையாட்டி பொம்மைகளாக செயல்பட்டால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது,'' என்றும் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் கருத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஷேர் செய்துள்ளனர்.
'நீட் தேர்வு என்பதே மோசடி'
அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிப்பதற்கான தேர்வுதான் நீட் என்று அறிமுகப்படுத்தப்பட்டாலும், தேர்வு நடத்தும் விதம் எந்த அளவுக்கு அந்த தேர்வு தேவையற்றது என்பதை உணர்த்துவதாக அமைந்துவிட்டது என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்சிஸ்ட்)யைச் சேர்ந்த கனகராஜ்.

''அனைவருக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருந்தால்தான் ஒரே மாதிரியான தேர்வை எதிர்கொள்ளமுடியும். இந்தியா முழுவதும் வெவ்வேறு முறையான பாடத்திட்டங்களை அனுமதித்துவிட்டு, எவ்வாறு சமமான தேர்வை நடத்தமுடியும்? காசு உள்ளவர்கள் தனியார் மையங்களில் படித்து எழுதுவதற்கும், காசு இல்லாதவர்கள் தேர்வை எதிர்கொள்ள சிரமப்படுவதற்கும் வித்தியாசங்கள் இல்லையா?காசு இருப்பவன் படிப்பான், இல்லாதவனுக்கு எதுவும் இல்லை என்ற தலைவிதி தத்துவத்தை மத்திய அரசு திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது. இது ஒரு மோசடி'' என்கிறார் கனகராஜ்.
நீட் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ தேர்வை தாமதாக நடத்தியது குற்றம் இல்லை; ஆனால் ஒரு சில மாணவர்கள் இரண்டு அல்லது ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்தது எவ்வாறு தவறாகும்? என்று கேள்வி எழுப்பிய கனகராஜ், ''எந்த ஆய்வின் அடிப்படையில் நீட் என்ற தேர்வுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன? நீட் தேர்வின் இலக்கு சமமான வாய்ப்பை தரவேண்டும் என்பதாக இருந்தால், முதலில் எல்லா மாணவர்களுக்கும் தேர்வு மையங்களை எளிதாக அணுகும் இடங்களில்தானே அமைத்திருக்கவேண்டும். ஒரு மாணவர் பல ஆயிரம் கிலோமீட்டர் சென்று தேர்வெழுதவேண்டும், ஒருவர் தனது மாவட்டத்திலேயே எழுதலாம் என்பது என்ன விதிமுறை?,'' என்று கூறிய அவர் தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையற்ற ஒன்று என்றும் மாநில அரசு தனது மாணவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கத் தவறுகிறது என்றும் கூறினார்.
''தலையாட்டிபொம்மையான தமிழக அரசு''

தமிழக மாணவர்கள் நீட் தேர்வை தமிழகத்திலேயே எழுத அனுமதிக்காமல், வெளி மாநிலத்தில் எழுத அனுப்பியதன் விளைவுதான் கிருஷ்ணசாமியின் இழப்பு என்று கூறியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், ''தமிழகத்திலேயே நீட் தேர்வை எழுத அனுமதி கொடுத்திருந்தால் அலைச்சலும், மன உளைச்சலும் இல்லாமல் இருந்திருக்கும்; இதுபோன்ற உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம். மத்திய அரசு எதைச் செய்தாலும், சொன்னாலும், தமிழக அரசு தலையாட்டி பொம்மையாக சம்மதம் தெரிவிக்கிறேதே தவிர, தமிழகத்தினுடைய உரிமையை கேட்கிற தைரியம் தமிழக அரசுக்கு கிடையாது,'' என்று கூறியுள்ளார் அவர்.
ஆனால் இந்தத் தலைவர்களும் கட்சிகளும், நீட் தேர்வே வேண்டாம் என்ற தமிழகத்தின் அடிப்படைக் கோரிக்கையை வெல்ல எவ்விதமான அணுகுமுறையைக் கடைபிடிக்கப் போகிறார்கள் என்பது காலப்போக்கிலேயே தெரியும்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












