விஜய் சேதுபதியையும், சிம்புவையும் நண்பர்களாக்கிய இயக்குநர் மணி ரத்னம்
தமிழ் சினிமா உலகம் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் பல முன்னிலை நடிகர்கள்

காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கும் படம் செக்கச் சிவந்த வானம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
செக்கச் சிவந்த வானம் படத்தின் சூட்டிங் இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கியது. அதில் சிம்பு, அரவிந்த் சாமி ஆகியோருடைய தனி தனி காட்சிகளை படமாக்கினார் மணிரத்னம்.
அதன் பின் வேலைநிறுத்தம் தொடங்கியதால், இந்தப் படத்தின் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது செக்கச் சிவந்த வானம் படத்தின் சூட்டிங்கை வேகமாக நடத்தி வருகிறார் மணி ரத்னம்.
இதில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி மற்றும் அருண் விஜய் ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்படுகிறது. அந்த காட்சிகளில் ஒற்றுமையாக நடிப்பதை போல நேரிலும் அனைவரும் நண்பர்கள் ஆகியுள்ளனர்.
இதனால் செக்க சிவந்த வானம் படத்தின் சூட்டிங் ஸ்பாட் உற்சாகமாக இருப்பதாக கூறப்படுகிறது. சூட்டிங்க் வேலைகள் மும்முரமாக நடந்து வருவதால் விரைவில் செக்க சிவந்த வானம் படத்தின் சூட்டிங் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
திரைப்படமாகும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை

பொது நல வழக்குகள் தொடர்ந்ததன் மூலம் பிரபலமானவர் டிராஃபிக் ராமசாமி. இவர் ஏராளமான பொது நல வழக்குகளை தொடர்ந்து அதில் வெற்றிக்கண்டுள்ளார்.
மேலும். பொது இடங்களில் குறிப்பாக சாலையோரம் வைக்கப்படும் அரசியல் கட்சிகளின் பேனர்களை ஒற்றை ஆளாக சென்று கிழிப்பார்.
இவரின் வாழ்கையை மையமாக வைத்து டிராஃபிக் ராமசாமி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. அதில் டிராஃபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ சந்திர சேகர் நடித்துள்ளார்.
மேலும் விஜய் ஆண்டனி, குஷ்பூ, ரோஹினி, சீமான் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்றும் அதை சஸ்பன்ஸாக வைத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
டிராஃபிக் ராமசாமி படத்தை எஸ்.ஏ சந்திர சேகரிடம் உதவி இயக்குநராக வேலை செய்த விக்கி என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த படத்தை பற்றி சந்திர சேகர் கூறும்போது, டிராபிக் ராமசாமியின் வாழ்கையில் நடந்த சம்பவங்களை வைத்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது.
சர்சைக்கள் கொண்ட கதைதான் என்பதை மறுக்க முடியாது. மேலும் டிராஃபிக் ராம்சாமி படத்திற்காக எந்த மிரட்டல் வந்தாலும் தனக்கு பயமில்லை என்றும் எஸ்.ஏ சந்திர சேகர் கூறினார்.
சூட்டிங் வேலைகள் முடிந்து போஸ்ட் புரடெக்ஷன் வேலைகள் நடைப்பெற்று வருகிறது. அந்த பணிகள் முடித்து இந்த மாத இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
வெற்றிபெறுமா கோலிசோடா 2

கோலிசோடா, விக்ரம் நடிப்பில் வெளியான பத்து எண்றதுக்குள்ள, கடுகு போன்ற படங்களை இயக்கியவர் விஜய் மில்டன். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக மாறியவர்களில் இவரும் ஒருவர்.
இவர் தற்போது கோலி சோடா படத்தின் 2வது பாகத்தை இயக்கியுள்ளார். இதில் பிரபல இல்லாத பல நடிகர்களை வைத்து படமாக்கியுள்ளார். அதற்கு காரணம் கதையின் மீது இருக்கும் நம்பிக்கையும், அதன் தேவையும் மட்டுமே என்று கூறியுள்ளார்.
கோலி சோடா 2 படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து ரிலீஸூக்கு தயாராக இருக்கிறது. அதிலும் மார்ச் மாதமே படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் வேலைநிறுத்தம் காரணமாக வெளியாகவில்லை. இந்த நிலையில் வரும் 18ம் தேதி கோலி சோடா 2 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், முதல் பாகம்போலவே வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனை இயக்கும் ராஜேஷ்

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படன்களை இயக்கியவர் எம். ராஜேஷ்.
இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார். காமெடி வகையில் எடுக்கப்படவிருக்கும் அந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
அதற்கான முதல்கட்ட வேலைகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்திற்கு இன்று பூஜை போட்டுள்ளனர்.
எளிய முறையில் நடந்த பூஜையில் சிவகார்த்திகேயன், இயக்குநர் எம். ராஜேஷ் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மேலும் சிவகார்த்திகேயன் தற்போது "இன்று நேற்று நாளை" படத்தின் இயக்குநர் ரவிகுமார் இயக்கும் சையின்ஸ் பிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தின் சூட்டிங் முடிந்த பிறகு எம். ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதற்குள் தன்னுடைய படத்திற்கான திரைக்கதையை இறுதி செய்யும் வேலையில் ராஜேஷ் ஈடுபடவுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












