செங்கோட்டையை தனியாரிடம் கொடுக்க முயற்சிக்கிறதா மத்திய அரசு?
- எழுதியவர், மான்சி தாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
செங்கோட்டையை டால்மியாவுக்கு தத்துக்கொடுக்கும் அரசு அதற்காக ஆண்டுக்கு ஐந்து கோடி என்ற வீதத்தில் 25 கோடி ரூபாய் பணம் கொடுப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், ஐந்து ரூபாய்கூட கொடுக்கவில்லை என்கிறார் மத்திய அமைச்சர்.

பாரம்பரிய சின்னங்களை பராமரிக்கும் மத்திய அரசின் திட்டத்தின்படி டெல்லி செங்கோட்டை பராமரிப்பு பணி டால்மியா பாரத் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஏலமுறையில் அளிக்கப்பட்ட இந்தப் பராமரிப்பு பொறுப்பை மேற்கொள்ளும் டால்மியா நிறுவனம் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் என ஐந்து ஆண்டுக்கு மொத்தம் 25 கோடி ரூபாய் வழங்கும்.
பாரம்பரிய சின்னத்தைப் பராமரிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த ஒப்பந்தத்தில் பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அரசும், டால்மியாவும் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன.
மத்திய கலாசார துறை அமைச்சர் முகேஷ் ஷர்மாவிடம் இது தொடர்பாக பிபிசி பேசியது. அரசு செங்கோட்டையை பராமரிப்புக்காக தத்துக் கொடுத்திருப்பதன் பொருள், அதனை பராமரிக்க அரசிடம் பணம் இல்லை என்பதல்ல என்கிறார் அமைச்சர்.

பட மூலாதாரம், DalmiaBharat @Twitter
"2017ஆம் ஆண்டில் இந்திய அரசின் சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சகம், தொல்லியல் துறையுடன் இணைந்து, ''பாரம்பரிய தத்தெடுப்பு' - நமது பாரம்பரியம், நமது அடையாளம்' (Adopt a Heritage- Your Heritage Your Identity') என்ற திட்டத்தை தொடங்கியது" என்று சொல்கிறார் மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா. அதாவது இந்தத் திட்டத்தின்படி, எந்தவொரு பாரம்பரிய சின்னத்தையும் ஏல முறையில் தத்தெடுக்கலாம்.
"இதன் கீழ், தத்தெடுக்கும் நிறுவனங்கள் இந்த பாரம்பரிய சின்னங்களின் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும், பொதுவான வசதிகளை வழங்கும், வை-ஃபை சேவைகளை ஒழுங்குபடுத்தும், மாசில்லாமல் பாதுகாப்பதற்கும் பொறுப்பேற்றுக் கொள்ளும்."
இது 25 கோடி ரூபாய் ஒப்பந்தம் என்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
அமைச்சர் மகேஷ் ஷர்மா இந்த தகவல்களை மறுக்கிறார், "இந்த தகவலும், எண்ணிக்கையும் இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை, ஏனென்றால் இந்த ஒப்பந்தத்தில் பணம் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை, 25 கோடி ரூபாயை பற்றி எப்படி சொல்கிறார்கள்? 25 ரூபாய் என்ன, வெறும் ஐந்து ரூபாய் கூட அந்த நிறுவனத்திற்கு அரசு கொடுக்கப் போவதில்லை."
"இதற்கு முன்னர் இருந்தது போலவே தற்போதும் தொல்லியல் துறையே நுழைவுச்சீட்டு வழங்கும். சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள் அதிகரிக்கும், பாரம்பரிய சின்னம் சிறப்பாக பராமரிக்கப்படும் என்பதைத் தவிர வேறு எந்த மாறுதலும் ஏற்படாது" என்று மத்திய அமைச்சர் தெளிவுபடுத்துகிறார்.

பட மூலாதாரம், adoptaheritage.in
செங்கோட்டையில் டால்மியா என்ன செய்யும்?
இந்த பாரம்பரிய நினைவுச் சின்னத்தை பராமரிக்கும் பொறுப்பு டால்மியா குழுவிடம் செல்வது கவலை ஏற்படுத்துவதாக சிலர் கூறுகின்றனர்.
அது பற்றி விளக்கமளிக்கும் மகேஷ் ஷர்மா "நிறுவனத்தின் எந்தப் பகுதியையும் தொடக்கூட முடியாது, செங்கோட்டை முன்பு போலவே தொல்லியல் துறையிடமே இருக்கும். எதிர்காலத்தில் தற்போதைய ஒப்பந்தத்தின் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதாவது பொருளாதார நன்மை கிடைத்தால், அந்தத் தொகை ஒரு தனி கணக்கில் வைக்கப்பட்டு, அது கட்டட பராமரிப்புக்காக செலவழிக்கப்படும்."
டெல்லி செங்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருக்கும் கண்டிகோட்டை இரண்டையும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தத்தெடுத்திருப்பதாக டால்மியா பாரத் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு முன்முயற்சிகளின் கீழ் (CSR Initiatives) கழிவறைகள், குடிநீர், மின்சாரம் போன்றவற்றை கொடுப்பது, பராமரிப்பது போன்றவற்றிற்கு ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் செலவாகும்.
பிபிசியிடம் பேசிய டால்மியா நிறுவன செய்தித் தொடர்பாளர் பூஜா மல்ஹோத்ரா, "செங்கோட்டை மற்றும் கண்டிகோட்டை இரண்டும் ஐந்தாண்டுகளுக்கு தத்தெடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இந்த முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமே எங்கள் பணி" என்று கூறுகிறார்.
"இந்த பணிகள் அனைத்தும் சி.எஸ்.ஆர் முன்முயற்சிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுபவை" என்று பூஜா மல்ஹோத்ரா தெரிவித்தார்.

சி.எஸ்.ஆர் என்றால் என்ன?
இந்த தத்தெடுப்பு ஒப்பந்தத்தில் பணம் தொடர்பாக கூறப்படும் செய்திகளில் உண்மை ஏதும் இல்லை என நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. "நிறுவனம் அரசுக்கோ அல்லது அரசு நிறுவனத்திற்கோ பணம் கொடுப்பதாக சொல்பவை அனைத்தும் பொய்யான தகவல்கள். இந்த ஒப்பந்தத்தில் பணம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்கிறார் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்.
பெரு நிறுவனங்கள் சமூகம், சமூக நலன்களை மேம்படுத்தும் செயல்களிலும், மக்கள் சேவையிலும் ஈடுபடுகின்றன. அதற்கான நிதி, நிறுவனங்களின் பட்ஜெட்டிலேயே ஒதுக்கப்படுகிறது.
பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு முன்முயற்சிகள் பற்றி கூறுகிறார் அந்த துறையில் நிபுணரான அபினவ். "எந்தவொரு நிறுவனமும் லாபம் ஈட்டும் நோக்கத்திலேயே செயல்படும். சமூகத்தின் வளங்களை பயன்படுத்தியே நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன."
"எனவே தனக்கு லாபத்தை கொடுத்த சமூகத்திற்கு அதிலிருந்து ஒரு பகுதியை நிறுவனம் திருப்பி செலவிட வேண்டும் என்று அரசின் சட்டங்கள் கூறுகின்றன. அரசு விதிமுறைகளின்படி, நிறுவனத்தின் கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி லாபத்தின் 2 சதவிகிதம் சமுதாய மேம்பாட்டுக்காக செலவிடப்படவேண்டும்."
"வரலாற்று மற்றும் பண்பாட்டு பாரம்பரியங்களும், தொன்மங்களும் சமூகத்தின் ஒரு பகுதியாகும். பெரு நிறுவனங்கள் எதாவது ஒரு விதத்தில் சி.எஸ்.ஆர் மூலம் சமூக வேலைகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால் அவை வரலாற்று பாரம்பரிய சின்னங்கள் தொடர்பான சேவைகள் என்றநிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் சேவைக்கு அரசிடம் இருந்து அனுமதி தேவை, ஆனால் பெருநிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு முன்முயற்சிகளில் ஈடுபடும்போது, அரசுக்கும், நிறுவனத்திற்கும் இடையில் பணப் பரிமாற்றம் எதுவும் இருக்காது."

பட மூலாதாரம், AFP/Getty Images
பண பரிமாற்றம் எதுவும் இந்த தத்தெடுப்பு திட்டத்தில் இல்லை என்றாலும், இதற்கான செலவுகள் எவ்வளவு என்ற மதிப்பீட்டை நிறுவனம் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். எந்தவொரு சேவையிலும் ஈடுபடும்போது அதற்கான செலவினங்களை மதிப்பிடுவதும் நிறுவனத்தின் வழக்கம்தான். அதைத்தான் 25 கோடி என்று மதிப்பிட்டிருப்பார்கள், அதுதான் வதந்திகளின் அடிப்படையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பதினேழாவது நூற்றாண்டில் முகலாய அரசர் ஷாஜகானால் கட்டப்பட்டது டெல்லி செங்கோட்டை.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது முதல் சுதந்திர தினமான ஆகஸ்டு 15ஆம் தேதியன்று ஆண்டுதோறும் செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்படுகிறது.
வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபிப் இந்த விவகாரம் செங்கோட்டையை டால்மியா நிறுவனத்திற்கு தத்து கொடுத்தது பற்றி என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்வோம்.
"இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) மற்றும் ஆஹா கான் டிரஸ்ட் ஆகியவை மிகவும் சிறப்பாக செயல்பட்டதற்கான அனுபவங்கள் ஏதுமில்லை. இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் செங்கோட்டை வந்ததும், பழைய நீரூற்றுகள் உடைக்கப்பட்டு, புதியவை நிறுவப்பட்டன. ஷாஜஹானின் காலத்து பளிங்குத் திரையை இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை பணியாளர்கள் உடைக்கும் புகைப்படம் இருக்கிறது. இருப்பினும், இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையை விட சிறந்த பயிற்சி பெற்ற அமைப்பு வேறு எதுவும் இல்லை".
"ஆஹா கான் அறக்கட்டளையிடம் ஹுமாயூன் கல்லறை மற்றும் பிற கட்டடங்கள் வந்ததும், அவை சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றன. ஆனால் அந்த நினைவுச்சின்னங்கள் வரலாற்று சிறப்பை இழந்துவிட்டன. அவர்கள் தங்கள் சொந்த வரைபடங்களைக் பயன்படுத்துகின்றனர். அவர்கள் உபயோகிக்கும் (கொத்து) கலவையில் உள்ள வேதியியல் பொருட்களைப் பற்றி எங்களிடம் கூறுவதில்லை. அவர்களின் செயல்பாடுகளில் திருப்தியில்லை".

பட மூலாதாரம், Getty Images
"மேலும் வேறு பாரம்பரிய நினைவுச்சின்னங்களை ஆஹா கான் அறக்கட்டளையிடம் ஒப்படைப்பதில்லை என்று காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அரசு மீண்டும் பழைய நடைமுறைகளை மேற்கொண்டது".
"இதுபோன்ற சிமெண்ட் நிறுவனங்களுக்கும் (பாரத் டால்மியாவைப் போன்றவை) தொல்லியல், சுற்றுலா அல்லது கலை வேலைகள் எதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்த நிறுவனங்கள் நினைவுச்சின்னங்களின் வரலாற்றுத்தன்மையை பாதுகாக்குமா அல்லது மக்கள் கூட்டத்தை ஈர்ப்பதற்கான அம்சங்களை அறிமுகப்படுத்துமா? இதுதான் சிக்கல். கட்டடங்களை ஒப்படைத்தவுடன், ஐந்து ஆண்டுகளுக்கு நிறுவனங்களுக்கான அதிகாரம் உறுதிப்படுத்துகின்றன".
"ஆஹா கான் அறக்கட்டளை பாரம்பரிய சின்னங்களின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டதும், அதற்கு அரசின் உயர்மட்டத்தில் இருந்த நெருக்கமான தொடர்பு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை பணியாளர்களின் வேலையை கடினமாக்கிவிட்டது".
"அதே நிலைமைதான் இங்கும் நடக்கும். பொதுவாக நினைவுச்சின்னங்களில் தொடர்ந்து மராமத்து மற்றும் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பராமரிப்பு பணிகளுக்கு வேதியியல் ஆய்வகங்கள் தேவைப்படும். அவை அமைக்கப்படுமா? சிறப்பு திறன் கொண்ட பணியாளர்கள் நியமிக்கப்படுவார்களா? அவர்களுக்கு தொல்லியல் தொடர்பான பயிற்சி அளிக்கப்படுமா? இதற்கான பதிலை யார் சொல்வார்கள்"?

பட மூலாதாரம், Getty Images
"உதாரணமாக தாஜ்மஹாலில் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதை மாற்றுவதற்கு அவர்கள் என்ன செய்வார்கள்? விலை உயர்ந்த கற்களுக்கு மாற்றாக கண்ணாடியை பயன்படுத்தினால் அது சரியானதாக இருக்குமா? இதுபோன்ற விஷயங்கள் மட்டுமல்ல, நுணுக்கமான பல விஷயங்களும் இருக்கின்றன".
"புதிய கழிப்பறைகளை கட்டுவது அல்லது பழையவற்றை பராமரிப்பது போன்ற விஷயங்கள் மட்டுமே இதில் உள்ளது என்றால் அந்தப் பணியை ஆஹா கான் அறக்கட்டளையிடமே ஒப்படைக்கப்படலாம்" என்று சொல்கிறார் வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபிப்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












