You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒவ்வொரு வீட்டின் முன்பும் சமாதி: ஆந்திராவில் ஓர் ஆச்சரிய கிராமம்
- எழுதியவர், ஷியாம் மோகன்
- பதவி, பிபிசிக்காக
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அய்யாகொண்டா கிராமத்தில், ஒவ்வொரு வீட்டின் முன்பும் சமாதி உள்ளது. நாம் இந்த கிராமத்திற்கு சென்றபோது, கிராமத்திற்குள் கல்லறை உள்ளதா அல்லது கல்லறைக்குள் கிராமம் உள்ளதா என்பதை புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், இங்கு கல்லறைதான் எல்லாம். மக்களின் வாழ்வில் அவை கலந்திருக்கின்றன.
மலை மீது அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் மொத்தம் 150 குடும்பங்கள் உள்ளன. மலடாசரி எனும் சமூகத்தை சேர்ந்த மக்கள் இங்கு வசிக்கின்றனர்.
இங்கு தனியாக சுடுகாடு இல்லாத நிலையில், இறந்தவர்களின் உடலை தங்களது வீட்டுக்கு வெளியிலேயே புதைக்கின்றனர்.
தண்ணீரை சுமந்துக்கொண்டு இந்த சமாதி வழியாக பெண்கள் செல்கிறார்கள். சமாதிக்கு அருகே சிறுவர்கள் விளையாடுகிறார்கள். பள்ளி மற்றும் கோயிலுக்கு எதிரே கூட சமாதிகள் உள்ளன.
இந்த சமாதிகள் தங்களது முன்னோர்களுடையது என கிராம மக்கள் கூறுகின்றனர். சமாதிகளுக்கு தினமும் பூசை செய்து படையலும் வைக்கின்றனர்.
வீட்டில் சமையக்கப்பட்ட உணவுகளை முதலில் சமாதிக்கு வைத்தபிறகே மக்கள் உண்ணுகின்றனர்.
சமாதியின் கதை
இந்த நடைமுறையின் பின்னால் உள்ள கதையை விளக்கிய ஊராட்சி தலைவர் சீனிவாசலு, ''ஆன்மீகவாதி நல்லா ரெட்டியும் மற்றும் அவரது சீடர் மாலா தாசரி சின்டாலா முனிசாமியும் இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தங்கள் உழைப்பையும் செல்வத்தையும் அளித்தார்கள். அவர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கிராமவாசிகள் அவர்களுக்கு ஒரு கோயில் கட்டி வணங்குகின்றனர். இதேபோல், தங்கள் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக வீடுகளுக்கு முன்னால் சமாதிகளை அமைத்து வருகின்றனர்'' என்கிறார்.
இங்கு பின்பற்றப்படும் நடைமுறை, சமாதிகளை வழிபடுவதுடனும், உணவளிப்பதுடனும் நின்றுவிடவில்லை. ஏதேனும் புதிய பொருட்கள் வாங்கினால் கூட சமாதி முன்பு வைத்தபிறகே உபயோகிக்கின்றனர்.
மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றிய மூடநம்பிக்கைகளை அகற்றுவது மிகவும் கடினம். குழந்தைகளுக்கு கல்வியளித்தால், எதிர்காலத்தில் அவர்கள் மாற்றத்தைக் கொண்டுவருவார்கள் என்று கூறுகிறார் சீனிவாசலு.
குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு கிராமத்தின் மற்றொரு முக்கிய கவலை. இங்கு அங்கன்வாடி மையம் கட்டவும், மலைச் சரிவுகளில் வீடு கட்ட இடம் ஒதுக்குமாறும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் எனவும் அவர் கூறுகிறார்.
பிற மூடநம்பிக்கைகள்
தங்களது கிராமத்தினரை மட்டும் திருமணம் செய்துக்கொள்வது போன்ற வேறுபல மூட நம்பிக்கைகளும் இங்கு உள்ளன.
விவசாயமே இந்த கிராமவாசிகளின் பிரதான தொழில். வெங்காயம், வேர்க்கடலை மற்றும் மிளகாய் ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர்.
கிராமவாசிகள் தங்கள் ரேஷன், ஓய்வூதியம் மற்றும் தினசரி தேவைகளைப் பெற சமவெளியில் இருக்கும் காஞ்சிஹள்ளி பகுதிக்குச் செல்ல வேண்டும்.
சுடுகாடு கட்ட அரசு நிலம் ஒதுக்குவதே, இந்த மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கான வழி என ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் காஜா நவாப் கூறுகிறார்.
''பல தலைமுறைகளாக நாங்கள் இதனை பின்பற்றி வருகிறோம். இதனை நிறுத்துவது எங்களுக்கு தீங்காக மாறலாம். எதிர்காலத்தில் சமாதி கட்ட இடம் இல்லாதது கவலையை ஏற்படுத்துகிறது'' என ஊர்த் தலைவர் ரங்கசாமி கூறுகிறார்.
இந்த கிராமத்தை உள்ளடக்கிய கர்னூல் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி. பிட்டா ரேணுகா, கிராம மக்களின் இந்த பழக்கத்தைப் பற்றி பிபிசி மூலமே தான் முதன்முதலில் அறிவதாகக் கூறுகிறார். கிராம மக்களுக்கு தேவையான உதவி வழங்கப்படும் என உறுதியளித்த அவர், கிராமத்தின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்