You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்
திருப்பூரில் 80 வயது முதியவர் முத்துசாமி மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் பனைமரம் முன்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டு தன் பேச்சை நிறுத்திக்கொண்டார் . தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை இனி பேசப் போவதில்லை என்பதே முதியவர் முத்துசாமி எடுத்துக்கொண்ட உறுதிமொழி.
நெரிசலான குடியிருப்பு பகுதிகள், குடியிருப்புகளுக்கு இணையான அளவில் பின்னலாடை நிறுவனங்கள் என எப்போதும் பரபரப்பான சூழலில் காணப்படும் திருப்பூர் மாநகரத்தில் கருவம்பாளையம் பகுதியில் உள்ள முதியவர் முத்துசாமியின் வீட்டின் முகப்பில் நுழையும்போதே அமைதியை உணர முடிகிறது.
முற்றத்தில் இருந்தே மூலிகை செடிகள், தமிழையும் பனையையும் குறித்த பதாகைகள் , தமிழை பற்றி தெரிந்து கொள்வதற்கெனவே நூற்றுக்கணக்கான புத்தகங்கள் என எந்நேரமும் தமிழ் குறித்த சிந்தனையுடனேயே வாழ்ந்து வருகிறார் முதியவர் முத்துசாமி.
சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் தமிழை ஆட்சி மொழியாக கொண்டுள்ளது. மலேசியா, மொரீசியஸ், கனடா போன்ற நாடுகள் தமிழை பண்பாட்டு மொழியாக ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்றைய தலைமுறை இடையே தமிழ்மொழி சரியாக சென்றடையவில்லை என்கிறார் தமிழ் ஆர்வலர் முத்துசாமி. தமிழின் சிறப்புகளை உணர்ந்த பிற நாடுகள் தமிழை படிக்க காட்டும் ஆர்வத்தை தமிழகத்தில் இன்றைய தலைமுறை காட்டுவதில்லை எனவும், அவர்களிடம் தமிழை பேசவும் எழுதவும் தடுமாற்றமே உள்ளது என்கிறார்.
கோரிக்கை நிறைவேறும் வரை பேசா நோன்பு
முதியவர் முத்துசாமி மெளனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அவரை சந்திக்க வருபவர்களிடம் அவரது மனைவி முத்துலட்சுமி போராட்டத்திற்கான காரணங்களை விளக்கி கூறுகிறார். முத்துசாமியின் இளமைக்காலம் முதலே தமிழுக்கான போராட்டங்களிலும், நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்று வருவதாகவும், மொழிப்போராட்டத்தில் பங்கேற்றது முதல் தமிழ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் ஒரு லட்சம் பனை மரங்களை நட்டுள்ளதாகவும் கூறுகிறார்.
இன்றைய தலைமுறையிடம் தமிழ் பேசவும் எழுதவும் தடுமாற்றம் உள்ள நிலையில் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி இல்லாமையே இதற்கு காரணம் என்கிறார். முத்துசாமியின் முக்கிய கோரிக்கையாக முத்துலட்சுமி கூறும்போது தமிழ் பேசுவது துவங்கி எழுதுவது வரை வீட்டில் இருந்து பெற்றோர்கள் குழந்தைகளிடம் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும், தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களையும், வரலாற்றுப் பதிவுகள் மற்றும் பண்பாட்டு ஓவியங்களை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க சொல்கிறார்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழி ஆகும்வரை யாரிடமும் பேசுவதில்லை என்ற உறுதிமொழியை முத்துசாமி எடுத்துள்ளார். கடந்த மாதம் 24 ஆம் தேதி பனை மரத்தின் முன்பு அவர் உறுதிமொழி எடுத்துக்கொண்டு இந்த பேசா நோன்பை மேற்கொண்டுள்ளார் என அவரது மனைவி கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்