You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்களானதை அறிவிக்கும் 'பூப்படைதல் நிகழ்ச்சி' சிறுமிகளுக்கு பிடித்துள்ளதா? #BBCShe
- எழுதியவர், தீப்தி பத்தினி
- பதவி, பிபிசி தெலுங்கு
எனக்கு முதன் முறையாக மாதவிடாய் ஏற்பட்டபோது, அதை என் பெற்றோர் ஊருக்கே அறிவித்து, வெளியில் செல்ல விடாமல் தடுத்து, சில நாட்கள் என்னை குளிக்கக்கூட அனுமதிக்க மாட்டார்கள் என்பதை எண்ணிப் பயந்தேன்.
ஆனால் அவர்கள் அப்படி எதையும் செய்யாமல், எனக்கு உண்டான உடலியல் மாற்றங்களைப் புரிந்துகொண்டு எனக்குத் தேவையான ஊட்டம் மிக்க உணவுகளை வழங்கினார்கள்.
என் தோழிகள் பலருக்கும் அப்படி அனுபவம் இல்லை. அவர்கள் பூப்படைந்ததைக் கொண்டாடும் 'பூப்புனித நன்னீராட்டு' விழா அவர்கள் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டது. நானே அப்படி சில நிகழ்ச்சிகளுக்கு சென்றுள்ளேன். அவர்கள் 5-11 நாட்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. பின்பு அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும்.
விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்துக்கு #BBCShe குழு சென்றிருந்தபோது மாதவிடாய் தங்கள் வாழ்வில் உண்டாக்கிய தாக்கம் பற்றி அங்கிருந்த மாணவிகள் நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.
"ஒரு பெண்ணுக்கு முதல் முறையாக மாதவிடாய் உண்டாகும்போது அதைக் கொண்டாடுபவர்கள், பின்பு ஏற்படும் மாதவிடாயை ஏன் தீட்டாகப் பார்க்கிறார்கள்," என்று கேள்வி எழுப்புகிறார் அங்கு படிக்கும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவி.
வெவ்வேறு சமூக-பொருளாதார பின்னணி உடைய, வேறுபட்ட வயத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் இவ்வாறான பிரச்சனை உள்ளது.
தற்போது 22 வயதாகும் ஸ்வப்னா இப்போது இரண்டு குழந்தைகளுக்கு தாய். அவருக்கு 15 வயதில் முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டு ஆறு மாதங்களுக்குள் அவரது உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார்.
"எனக்கு என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளும் முன்னரே எனக்கு திருமணம் நடந்தது. 16 வயதில் முதல் குழந்தை பிறந்தது. பாதியிலேயே நின்று போன என் கனவுகளை நான் தொடர விரும்புகிறேன்," என்கிறார் அவர்.
தற்போது பெண்கள் பூப்பெய்தும் வயது 12-13 என்றாகியுள்ளதால், இந்த நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாமல் சிறுமிகளின் உடல் நலத்தில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
'மஹிளா ஏக்சன்' எனும் பெண்களுக்கான தொண்டு நிறுவனத்தை நடத்தும் ஸ்வர்ண குமாரி, "தங்கள் பெண் குழந்தைகளுக்கு தங்கள் உடல் நலம் குறித்த விழிப்புணர்வை உண்டாக்காமல், இத்தகைய கொண்டாட்டங்களில் ஈடுபடுவதன்மூலம் எல்லை கடந்து நடந்துகொள்கின்றனர்," என்கிறார்.
காயத்ரி எனும் 12 வயது சிறுமி மீனவர் சமூகத்தை சேர்ந்தவர். இன்னும் அவருக்கு தனது முதல் மாதவிடாய் ஏற்படவில்லையென்றாலும், இப்போதே கவலைகள் அவருக்கு தொற்றிக்கொண்டுள்ளன.
"பூப்படைந்தபின் நான் அண்டை வீட்டுக்கெல்லாம் சென்று விளையாட முடியாது என்பதை நினைத்துக் கவலைப்படுகிறேன். என் அக்காவுக்கு என்ன ஆனது என்பதை நான் பார்த்துள்ளேன். தனியாக வெளியில் செல்லும்போது பையன்கள் அவளை கிண்டல் செய்வார்கள் என்பதால் நான் அல்லது என் அண்ணண் துணையுடன்தான் அவள் வெளியில் செல்கிறாள்," என்கிறார் காயத்ரி.
மது என்பவர் 16 வயது பெண் ஒருவரின் தந்தை. அவருக்கு தன் மகள் பூப்பெய்தியபோது விருப்பம் இல்லாவிட்டாலும் தனது தாயார் வலியுறுத்தியதன்பேரில் அந்த நிகழ்ச்சியை நடத்தியதாக கூறுகிறார். "இதுகுறித்து நான் என் மகளுடன் பேசினேன். தனது உடலில் இயற்கையாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அதை நினைத்து வெட்கப்படக் கூடாது என்றும் நான் என் மகளிடம் கூறினேன்," என்கிறார் மது.
இதை மது என்னிடம் விவரித்துக்கொண்டிருந்தபோது, மதுவின் மகள் அருகில் உள்ள மைதானத்தில் பேட்மிட்டன் விளையாடிக்கொண்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு பெற்றோர் எவ்வளவு செலவிடுகின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ள எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. பூப்படைதல் நிகழ்ச்சிகளின் படம் எடுக்க மட்டும் சுமார் இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை செலவிட வசதி படைத்த பெற்றோர் தயங்குவதில்லை என்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு ஈடாக இவற்றில் அலங்காரம் செய்யப்படுகின்றன என்றும் ஐதராபாத்தில் பெரிய நிகழ்ச்சிகளில் படமெடுக்கும் புகைப்படக் கலைஞர் என்னிடம் கூறினார்.
நடுதர வர்க்கத்தை சேர்ந்த 19 வயதாகும் கௌரி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தான் பூப்பெய்தியபோது பெருமைக்காக அவரது தந்தை ஆடம்பரமாக நடத்திய நிகழ்ச்சிக்கு வாங்கப்பட்ட கடனை இன்னும் திரும்ப செலுத்தி வருவதாக கூறினார்.
"இந்த மாதிரியான நிகழ்ச்சிகள்தான் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை சுமையாக நினைக்க தூண்டுகின்றன," என்று கூறும் மருத்துவர் சீதா ரத்னம், "இப்போதைய தேவை சிறுமிகளுக்கு கல்வியும் ஊட்டச்சத்தும் வழங்குவதுதான்," என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்