நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு: வைகோ நடை பயணத்தில் தொண்டர் தீக்குளிப்பு
ம. தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதுரையில் நடைபயணத்தைத் துவங்குவதற்கு சற்று முன் தொண்டர் ஒருவர் தீக்குளித்தார்.

அவர் ஆபத்தான நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தேனி பொட்டிபுரத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதுரையில் இருந்து நடைபயணம் ஒன்றை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று துவங்கினார்.
தேனி மாவட்டம் கம்பம் வரைசெல்லவிருக்கும் இந்த நடைபயணத்தை தி.மு.கவின் செயல்தலைவர் ஸ்டாலின் துவக்கிவைத்தார்.
இதற்குப் பிறகு நியூட்ரினோ எதிர்ப்புக்கூட்டம் ஒன்று மதுரை பழங்காநத்ததில் நடைபெற்றது. இதில் வைகோ மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
அதற்குப் பிறகு, மற்ற தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரணி இணை அமைப்பாளர் ரவி என்பவர், பொதுக்கூட்ட மேடையிலிருந்து 25 அடி தூரத்தில் நின்றபடி, தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
உடல் முழுவதும் எரிந்து காயங்கள் ஏற்பட்ட நிலையில் இருந்த அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி வைகோ கூறினார்.
இதையடுத்து தலைவர்களின் வாழ்த்துப் பேச்சுகள் நிறுத்தப்பட்டன. இது குறித்து மேடையில் பேசிய வைகோ, தொண்டர்கள் யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று கூறி கண்ணீர்விட்டு கதறியழுதார். "அந்தத் தம்பியைக் காப்பாற்று என இயற்கைத் தாயைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார் வைகோ.
அதன் பிறகு அவர், வைகோ தன் நடைபயணத்தைத் துவங்கினார். தற்போது ஆபத்தான நிலையில் ரவி சிகிச்சை பெற்றுவருகிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












