கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு 7 ஆண்டுகள் சிறை

பீகாரின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு 4வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய லாலுவின் வழக்கறிஞர் பிரபத் குமார், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் இந்த சிறை தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கு முன் வழங்கப்பட்ட சிறை தண்டனையும், தற்போது விதிக்கப்பட்டுள்ள தண்டனையும் அவர் ஏககாலத்தில் அனுபவிப்பார் என்று கூறினார்.

எனினும், மொத்தமாக அவர் 60 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் வழக்கறிஞர் பிரபத் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தில் 1990களில், லாலு முதலமைச்சராக இருந்த போது கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அப்போது பீகார் மாநிலம் பிரிக்கப்படவில்லை.

டிசம்பர் 1995 முதல் 1996ஆம் ஆண்டு வரை, அரசின் தும்கா கருவூலத்தில் இருந்து 3.13 கோடி ரூபாய் கையாடல் செய்தது தொடர்பான வழக்கில்தான் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

லாலுவுடன், குற்றஞ்சாட்டபட்ட 18 பேருக்கும் வெவ்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகனாத் மிஸ்ராவை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

முதல் கால்நடை தீவன வழக்கில் 2013ஆம் ஆண்டுதீர்ப்பளித்த நீதிமன்றம், லாலுவுக்கு 5 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு இருந்தது.

இதுவரை கால்நடை ஊழல் தொடர்பான மூன்று வழக்குகளில், லாலுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அவரது வழக்கறிஞர் பிரபத் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள தும்கா கருவூல ஊழல் வழக்கு 22 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கடந்த 2000ஆம் ஆண்டு இது தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. வழக்கு விசாரணை பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வர, இதில் சம்பந்தப்பட்ட 14 பேர் உயிரிழந்தனர். மக்கள் வரிப்பணத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக இவர்கள் மீது சிபிஐ குற்றஞ்சாட்டி இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :