நாளிதழல்களில் இன்று: குரங்கணி காட்டுத் தீ - ‘போடி வன ஊழியர் பணி இடைநீக்கம்’
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினத்தந்தி - 'குரங்கணி காட்டுத் தீ: போடி வன ஊழியர் பணி இடைநீக்கம்'

குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 11 பேர் பலியானதை தொடர்ந்து போடி வன ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.
"உயிர் தப்பியவர்களில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த பிரபு (வயது 30) என்பவரும் ஒருவர். இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் க.விலக்கு போலீசாரிடம் குரங்கணி மலையில் நடந்த சம்பவம் பற்றி வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குரங்கணி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீ விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த மலையேற்றப் பயிற்சிக்கு சென்றவர்கள் முறையாக அனுமதி பெறவில்லை என்றும், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் முதலில் கூறப்பட்டது. ஆனால் பிரபு அளித்துள்ள வாக்குமூலத்தில் வனத்துறை சோதனை சாவடியில் ஒரு நபருக்கு ரூ.200 வீதம் கட்டணம் செலுத்தியதாக கூறியுள்ளார். இந்நிலையில், போடி வனச்சரகத்தில் பணியாற்றும் வனவர் ஜெய்சிங் என்பவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்." என்று விவரிக்கிறது அந்த செய்தி.

தினமணி - 'தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு`

பட மூலாதாரம், Getty Images
இந்தியக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியக் கடல் பகுதியில் இலங்கை, குமரிக்கடல் மற்றும் மாலத்தீவுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது செவ்வாய்க்கிழமை காலை மாலத் தீவுக்கு கிழக்கே 290 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் செவ்வாய்க்கிழமை கூறியதாக விவரிக்கிறது அந்த செய்தி.

டெக்கான் க்ரானிக்கல் - 'சோனியா காந்தி அளித்த விருந்து'

பட மூலாதாரம், Getty Images
மாவோயிஸ்ட் தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்ட செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது டெக்கான் க்ரானிக்கல் நாளிதழ். அனைத்து நக்சல்களும் சீருடை அணிந்து இருந்தனர். நாங்கள் முதலில் அது மத்திய ரிசர்வ் படையின் மற்றொரு குழு என்றுதான் நினைத்தோம். ஆனால் சில நிமிடங்களுக்கு பின்தான் அவர்கள் மாவோயிஸ்ட் என்று புரிந்தது என்று மத்திய ரிசர்வ் படை அதிகாரி கூறியதாக விவரிக்கிறது அந்த செய்தி.
காங்கிரஸ் மற்றும் பாஜவு-க்கு எதிராக மூன்றாவது அணி குறித்து பேசப்பட்டு வரும் சூழ்நிலையில், செவ்வாய்க்கிழமை சோனியா காந்தி அளித்த இரவு விருந்தில் 20 கட்சிகள் கலந்துக் கொண்டதாக கூறுகிறது டெக்கான் க்ரானிக்கல் நாளிதழ். இந்த விருந்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சியை சேர்ந்த தேஜஷ்வியாதவ், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த ஒமர் அப்துல்லா, சி.பி.எம் எம்.பி சலீம் மற்றும் டி.கே. ரங்கராஜன், திமுகவை சேர்ந்த கனிமொழி உள்ளிட்ட 32 தலைவர்கள் கலந்துக் கொண்டதாக விவரிக்கிறது அந்த செய்தி.

தினமலர்

பட மூலாதாரம், Dinamalar

தி இந்து (ஆங்கிலம்) - `வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு'

பட மூலாதாரம், Getty Images
தி இந்து நாளிதழில் ஆதார் குறித்த செய்தி பிரதான இடத்தை பிடித்துள்ளது. ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை வங்கிக் கணக்கு, செல்போன் எண், உள்ளிட்ட பல்வேறு சேவைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்கிறது அச்செய்தி.
தனது பிறந்தநாளை ஏறத்தாழ நூறு ரவுடிகளுடன் சேர்ந்து அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடிய பினு பப்பச்சன், கொலை முயற்சி வழக்கு ஒன்றிலிருந்து விடுதலை ஆகி உள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளது தி இந்து நாளிதழ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












