You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
#GroundReport: தீயில் கருகிய காதல் ஜோடியின் 100-ஆவது நாள் மண வாழ்க்கை
விவேக் - திவ்யா. புது மணத்தம்பதிகள் தங்கள் 100-ஆவது நாளை விமர்சையாக கொண்டாட தேர்ந்தெடுத்த அந்த நாட்கள், அவர்களது வாழ்வின் கடைசி நாட்கள் எனத் தெரியாமல் போய்விட்டதே என கதறி அழுகிறது ஒரு கிராமம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் கவுந்தப்பாடி. விவேக் - திவ்யாவின் சொந்த ஊர். அவர்களுக்கு ஏற்பட்ட முடிவை இன்னும் நம்ப முடியாமல் அதிர்ந்து போயிருப்பதை அங்கு நாம் சென்று பார்த்தபோது முழுமையாக உணர முடிந்தது.
தனது தம்பி விவேக் மற்றும் அவரது காதல் மனைவியின் திருமணத்தின் 100ஆம் நாள் நிகழ்வை விசேஷமாக கொண்டாடும் பொருட்டு அவர்களின் விருப்பத்திற்கிணங்க தேனி மாவட்டத்திற்கு வழியனுப்பி வைத்ததாக சொல்லும் விவேக்கின் சகோதரர் வெள்ளிங்கிரி, கடைசிப் பயணம் எனத் தெரியாமல் அனுப்பிவிட்டோமே, அதை தாங்க முடியவில்லை என்று பதறுகிறார்.
தேனி மாவட்டம் குரங்கிணி மலைப்பகுதியில், மலையேற்றக் குழுவில் ஈடுபட்டிருந்தபோது, காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் இவர்களும் உண்டு.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காதல் மணம் புரிந்து கொண்டவர்கள் விவேக் - திவ்யா. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இவர்களின் திருமணம் சிறிய எதிர்ப்புக்கு மத்தியில் நடந்தேறியது.
`மனைவியை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல வந்தவர்'
திருமணம் முடிந்த பத்து நாட்களில் மனைவியை பிரிந்து வெளிநாடு சென்ற விவேக், தனது ஆசை மனைவியையும் அழைத்தும் செல்லும் பொருட்டு , கிராமத்தின் திருவிழாவிற்கு வந்திருக்கிறார். வந்த இடத்தில் தங்களின் திருமணத்தின் நூறாம் நாளை சிறப்பாக கொண்டாட பெற்றவர்களை ஒப்புக்கொள்ளவைத்து தேனி , குரங்கினி மலைப்பகுதிக்கு மலையேற்றத்திக்காக சென்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
"எனது பெற்றோரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை என வேதனை மறுபுறம் என்னை இன்னும் வாட்டியெடுக்கிறது. மலையேற்றமோ, செல்ஃபி போட்டோக்களோ தயவு செய்து ஒதுக்கித் தள்ளுங்கள் , ஒரு லைக் கிடைக்கும் என்பதற்காக தனது உயிரை இன்னும் எத்தனை பேர் இழப்பார்களோ. தங்களை போல இன்னும் எத்தனை குடும்பங்கள் துடிக்கிறதோ" என கதறி அழுகிறார் வெள்ளிங்கிரி.
இவ்வாறு இருக்க விவேக்கின் தாயாரோ, "எப்போதும் என்னைச் சுற்றிச் சுற்றி வருவானே என் மகன். அவனை இழந்த வலி தாங்க முடியலையே" என கதறி அழுவது சுற்றியிருப்போரை உருக வைக்கிறது.
அவரின் தந்தையோ, இடிந்து போன நிலையில் பேசும் நிலையில் இல்லை என்பதையும் கண்ணீருடன் வெளிப்படுத்தினார்.
விவேக்கின் மனைவி திவ்யா இதற்கு முன்பே மலையேற்றத்தில் ஈடுபட்டவர். இருந்தாலும் விதி விளையாடிவிட்டது என்கின்றனர் உறவினர்கள்.
விவேக்கையும், அவருடன் பலியான தமிழ் செல்வனை பற்றியும் குணநலன்கள் பற்றியும் உணர்ச்சிபட்டு பேசி வருத்தப்படும் அதே வேளையில் வனத்துறையினர் ஏன் முறையான பாதுகாப்பில்லாமல் சென்ற இவர்களை அனுமதித்தனர் என்ற கேள்வியையும் முன் வைக்கின்றனர் இவர்களின் உறவினர்கள்.
`திருவிழா கொண்டாட வந்தவர் தீயில் கருகினார்'
அடுத்த தெருவில் தங்களின் ஒரே மகனை பறிகொடுத்த துக்கத்தில் தவிக்கின்றனர் தமிழ் செல்வனின் குடும்பத்தினர்.
தமிழ் செல்வனை பற்றிய நிகழ்வுகளை நம்மிடம்அவரது பெரியப்பா சரவணன் பகிர்ந்து கொண்டார். தனது தம்பி முறையான நெசவுத் தொழிலாளி தங்கராஜின் ஒரே மகன் தமிழ் செல்வன். குடும்ப சூழல் காரணமாக தமிழ் செல்வன் தனது படிப்பை EEE டிப்ளோமாவோடு நிறுத்திக்கொண்டார். படிப்பை முடித்து சென்னை தனியார் நிறுவனத்தில் கடந்த ஆறு வருடங்களாக வேலை செய்தார். ஊர் திருவிழாவை கொண்டாட வந்த இடத்தில் நண்பர்களுடன் இணைந்து தேனி சென்றுள்ளார்.
தீ, புகைக்கு இரையாகி அவர் மறைந்தது தாங்க முடியாத துக்கத்தை தருகிறது என்றும் ஒரே மகனை இழந்து தனியாக நிற்கும் கும்பத்தின் நிலை இனி எவ்வாறு இருக்கும் என்ற எண்ணமே மனதில் பயத்தை தருகிறது என்கிறார். இன்றைய இளைஞர்கள் சாகசங்களில் ஈடுபடுவது நல்லதாக இருந்தாலும், பாதுகாப்பற்ற வழிகளில் செல்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றும் ஆதங்கப்படுகிறார்.
இப்பகுதியை சேர்ந்த மனோகரன் ,தங்களால் இந்த இழப்பை தாங்க இயலவில்லை என கூறினார். அடுத்தடுத்த தெருக்களில் இவ்வாறான மரணங்கள் நிகழ்வது அதிர்ச்சி என்றாலும் இறந்தவர்களின் மரணம் வெகுவாக இப்பகுதி மக்களை பாதித்து விட்டது என்றும் கூறினார்.
`இறப்பிலும் பிரியாத நட்பு'
தமிழ் செல்வன் ,விவேக் இருவரும் இணை பிரியாமல் வளர்ந்ததைப் போல சேர்ந்தே இறந்து விட்டனர். "பள்ளிப் படிப்பிலும் நட்பிலும், கடைசி வரை நட்பு நிலைக்கும் என்ற வார்த்தைக்கு இவர்களின் நட்பு அமைந்து விட்டது" என்கிறார் மனோகரன்.
படிப்பு மட்டும் முக்கியமல்ல, பாதுகாப்பும் , விழிப்புணர்வும் உள்ளடக்கிய முறையான வகையில் இன்றைய சமுதாயத்திற்கு கற்றுத் தரப்படவேண்டும், ஆயிரம் இருந்தாலும் பாதுகாப்பற்ற பயணம் வாழ்க்கையை முடித்து விட்டதே என கிராம மக்களுடன் சேர்ந்து அவரும் அங்கலாய்த்தார்.
குறிப்பாக மாணவ சமுதாயம் உட்பட , தகவல், தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு பணியில் உள்ளவர்கள் பலரும் இன்று செல்ஃபி எடுப்பதற்காகவும், பொழுது போக்கிற்காகவும் ஏறும் முறையற்ற , பாதுகாப்பற்ற வகையிலான மலையேற்றம் , இன்று பல்வேறு பக்கங்களிலும் பயத்துடன் கண்ணீரையும் வரவழைத்து விட்டது.
இயற்கையை மேம்படுத்தல், இயற்கையோடு இணைதல், என பல்வேறு காரணங்களை வலியுறுத்தி இன்று நிகழும் ஒரு நிகழ்வாகப் பேசப்பட்டாலும் , இயற்கை குறித்த ஆர்வம், இயற்கையோடு இணைய வேண்டும் என்னும் நோக்கம் சரியானதாக இருப்பினும், அதில் உள்ள இடர்பாடுகள் குறித்து அறியாமல் இவ்வாறான சிக்கலில் மாட்டிகொள்வதும் கவலைக்குரியது என்றும் இதுபற்றி பலரும் அறியாமல் உள்ளது வேதனை அளிக்கிறது என்றும் கூறுகின்றனர் கவுந்தப்பாடி கிராம மக்கள்.
பல இளம் உயிர்கள் கருகிப் போய்விட்டன. இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளப் போகிறோமா? பாதுகாப்பிலும், விதிமுறைகளிலும் அலட்சியம் காட்டுவதை நிறுத்தப் போகிறோமா? என்ற கேள்வியை முன்வைக்கும் இந்த கிராம மக்கள், மற்ற எல்லா சம்பவங்களைப் போல, இதையும் காலப் போக்கில் மறந்துவிட்டால், இதுபோன்ற சோகங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்று மனம் பதைக்கிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்