You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர். கே.. நகர் ஃபார்முலாவை மட்டுமே நம்புகிறாரா தினகரன்?
- எழுதியவர், ஆழி செந்தில்நாதன்
- பதவி, செயற்பாட்டாளர்
தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ, டிடிவி தினகரன் தனக்கான தனிக்குடும்பத்தை ஆரம்பித்திருக்கிறார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற புதிய பெயருடன் ஜெயலலிதாவின் உருவத்தாங்கியக் கொடியுடன், ஏற்கனவே வென்றெடுத்த சின்னமான குக்கரின் விசிலுடன், மதுரை மேலூரில் அமர்க்களமாகத் தன் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் தினகரன்.
தற்காலிகமானதா தினகரன் கட்சி?
இது தமிழக அரசியலில் என்ன விளைவை ஏற்படுத்தும்? தினகரனே கூறியபடி, அனைவரும் எதிர்ப்பார்க்கும் வகையில், இந்தத் தனிக்குடும்பம் தற்காலிகமானது என்பதுதான் உண்மை.
பழனிச்சாமி-பன்னீர்செல்வம் அணியின் பதவிக்காலம் முடியும்போது அல்லது முடித்துவைக்கப்படும்போது, ஒன்று தினகரன் கட்சியில் பெரும்பாலான அதிமுகவினர் இணைவார்கள் அல்லது அதிமுகவே மீண்டும் தினகரன் வசம் வரும் என்பதே எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
சசிகலாவின் மீள்வருகை நிகழும்போது, இந்த இடைக்காலத்து ஆட்டங்கள் எல்லாம் கனவாக முடிந்துபோயிருக்கும் என்றும் அதிமுக மீண்டும் ஒரே அணியாக எழுந்து நிற்கும் என்றும் பழைய ஜானகி vs ஜெயலலிதா காலத்துச் சண்டைகளை பார்த்தவர்கள் நம்புகிறார்கள்.
இந்தப் பொதுவான நம்பிக்கை நம்பத்தகுந்ததுதானா? வரலாறு என்ன குட்டையா, அதில் மீண்டும் மீண்டும் ஒரேயிடத்தில் சுற்றிவர? - இப்படியெல்லாம் கேள்வி எழுப்பிப் பார்த்தால், தினகரனின் இன்றைய நகர்வு குறித்து வேறு விதமாகவும் நாம் யோசிக்கலாம்.
தினகரன் தனிக்கட்சித் தொடங்கியது தவிர்க்கவியலாத ஒரு நிகழ்வு. உள்ளாட்சித் தேர்தலோ சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலோ நடந்தால் தனக்கு தனி அடையாளம் தேவைப்படும் என்பதை உணர்ந்தே தினகரன் இந்த முடிவை எடுத்திருக்கிறார். ஆனால், அடுத்து வரவுள்ள ஏதோ ஒரு தேர்தலுக்குள் தினகரன் அணியும் பழனி- பன்னீர் அணியும் ஏதோ ஒரு அண்டர்ஸ்டேண்டிங்குக்கு ஏன் வர முடியாதாம்? பாஜகவின் அழுத்தம் மட்டுமே காரணமா? - இன்று இந்த கேள்வி எழாமல் இல்லை.
திரண்ட கூட்டமா அல்லது திரட்டப்பட்டக் கூட்டமா?
மேலூரில் திரண்ட கூட்டம் குறித்து தினகரன் எதிர்ப்பாளர்கள் என்ன கருதினாலும், அது திரண்ட கூட்டமா அல்லது திரட்டப்பட்டக் கூட்டமா என்று கேள்விகள் எழுப்பப்பட்டாலும், தினகரன் மீது மக்களிடையே ஆதரவு இருக்கிறது என்பதில் மறுப்பில்லை. அதிமுகவை புதைகுழிக்குள் தள்ளிய பழனி-பன்னீர் அணியிடமிருந்து அக்கட்சியை மீட்டவராக தினகரன் ஹீரோவாக தோற்றமளிக்கிறார்.
பாஜகவின் நெருக்கடிக்கு பயப்படாதவராக, ரொம்பவும் அசால்ட்டாக மீடியாவை எதிர்கொள்பவராக அவர் ஸ்கோர் செய்கிறார். எந்த சசிகலாவை தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கம் வெறுத்ததோ அதே நடுத்தர வர்க்கம் தினகரனைக் கொண்டாடுகிறது. தினகரனின் தலைமைத்துவத் திறன்கள் பற்றி எதிர்க்கட்சிகளும் மீடியாவும்கூட மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.
ஆனால் தினகரன் குறித்த நேர்மறையான சித்திரத்தில் தற்போது கறை படிந்திருக்கிறது. எது தினகரனுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்திருக்கிறதோ அதுவே - அந்த ஆர் கே நகர் வெற்றியே - அவருக்கு எதிரான விமர்சனமாகவும் மாறத் தொடங்கியுள்ளது. அந்த வெற்றி தினகரனின் மற்றொரு முகத்தையும் மக்களிடையே வெளிப்படுத்திவிட்டது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிற விஷயத்தில் அந்தத் தொகுதியினர் தற்காலிகமாக அது குறித்து மகிழ்ந்திருக்கலாம். ஆனால் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்ததாம் என்கிற அதே கேள்வி அதன் பிறகு தினகரனுக்கு எதிராக எழுப்பப்பட்டது. அந்தக் கேள்வித்திரையில் சசிகலாவின் முகம் மீண்டும் தோன்றி சங்கடப்படுத்துகிறது.
ஹீரோவான தினகரன்
பழனிச்சாமி அரசின் மிகமோசமான நிர்வாகமும் துரோகத்தனமும் பாஜகவைப் பார்த்து அவர்கள் அஞ்சி நடுங்குவதும்தான் இன்று தினகரனை ஹீரோவாக காட்ட உதவுகிறது. இல்லையென்றால், மக்கள் இரு அணிகளிடமிருந்தும் விலகி நிற்கவே விரும்புவார்கள்.
ஆனால், தினகரனின் அரசியலை நாம் வேறு பல கோணங்களிலிருந்தும் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் அரசியல் வெளி "காணாமல் போவது" என்பது இன்றைய காலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கே உதவும். பாஜகவும் சித்தாந்த அடிப்படை கைகூடாத இடங்களில் அரசியல் கொள்முதலில் ஈடுபடும் கட்சி என்பதால் - திரிபுராவில் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினரையும் விலைக்குவாங்கியதைப் போல - தமிழ்நாட்டில் அதிமுகவை அப்படியே விலைக்குவாங்கிவிடலாம் என்றே நினைத்தது.
பா.ஜ.கவின் திட்டத்தை முறியடித்த தினகரன்
நல்லவேளையாக தினகரனின் கலகம் பாஜகவின் அந்தத் திட்டத்தை முறியடித்துவிட்டது. சசிகலா அதிமுகவில் நீடிக்கவேக்கூடாது என்று பாஜக முடிவுசெய்திருந்தது. இடமளித்திருந்தால் சின்னம்மாவும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்திருப்பார் என்றாலும் பாஜக சசிகலாவின் தலைமையை ஒழிக்க நினைத்தற்கு மிகப்பெரிய காரணம், அப்போதுதான் அக்கட்சியை கரைக்கவோ அழிக்கவோ முடியும் என்பதுதான்.
ஆனால், பசி கொண்ட பாஜக அதிமுகவை விழுங்க நினைத்தபோது, அதில் பெரிய முள்ளாக இருந்தவர் தினகரன். இந்த வகையில் தமிழ்நாட்டில் பாஜகவின் பிளான்-ஏவை முறியடித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பாஜகவின் நன்மதிப்பு குறைந்திருக்கிறது. இந்நிலையில், இனி, பழனி-பன்னீர் அணி பாஜகவோடு கைகோர்ப்பது கடினமே. கைகோர்த்தால் அது தற்கொலையே.
பாஜகவின் அனைத்திந்திய அரசியல் எதிர்காலம் சட்டென்று அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில்தான், தினகரன் தனது கட்சியை ஆரம்பித்திருக்கிறார். இப்போதைக்கு அதிமுகவில் ஒங்கப் போகிற ஒரே கையாக தினகரன் கையாகத்தான் இருக்கும். ஆக, அதிமுகவை காப்பாற்றுகிற பணியில் தினகரன் வெற்றிபெறுகிறார் என்பதாகவே இன்றைய நிகழ்வுகளை மதிப்பிட வேண்டியிருக்கிறது.
ஆனால் இது மக்களுக்கு எத்தகைய நன்மைகளைப் புரியும்? இங்கேதான் இதுவரை தான் எந்த மாதிரியான தலைவர் அல்லது அரசியல்வாதி என்பதை தினகரன் நிரூபிக்கவில்லை. தமிழக மக்களின் முக்கியமான பிரச்சினைகளில் தீவிரமாக தலைகொடுக்காமல், மீடியாவையும் முன்னாள் சகாக்களையும் சமாளித்துவிட்டாலே போதும், ஆர் கே நகர் ஃபார்முலாவை நம்பினால் போதும் என்று தினகரன் நினைக்கிறாரோ என்றும் தோன்றுகிறது.
ஒருவேளை அப்படி அவர் நினைத்தால், தமிழகம் இன்று எதிர்கொள்ளும் பல சிக்கல்களை மனத்தில் வைத்துப் பார்க்கையில், அது தினகரனின் அரசியலை அவரது கட்சிக்குள்ளேயே முடக்கிவிட்டும். வெளியே அவரது தாக்கம் என்று எதுவும் இருக்காது. அப்படி நடந்தால், ஒருவேளை பழனி-பன்னீர் கூட்டணியை அவர் ஜெயித்தாலும்கூட, எதிர்காலத்தில் அவர் ஸ்டாலினோடு போட்டிபோட மாட்டார். ரஜினி, கமலோடுதான் போட்டிபோடுவார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்