You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மீளமுடியாத நோயுள்ளவர்களின் 'கருணைக்கொலைக்கு' இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி
"வாழும் விருப்பம்" அற்ற நோயுற்றவர்கள் தங்களின் உயிரை கருணைக்கொலை மூலம் மாய்த்துக்கொள்வதற்கு இந்திய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டால், மீளமுடியாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பை துரிதப்படுவதற்கு அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையானது நிறுத்தப்படும் என்பதே இதற்கு பொருள்.
தற்போது அளிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பானது, மீளமுடியாத நோயுற்றவர்களின் கருணைக்கொலையை அனுமதிக்கிறதே தவிர, நல்ல செயல்பாட்டு நிலையிலுள்ளவர்களின் கருணைக்கொலையை அனுமதிக்கவில்லை.
கருணைக்கொலைக்கு பல ஆண்டுகளாக போராடும் தம்பதி
மும்பையை சேர்ந்த இரவாடி மற்றும் நாராயண் லவேட் தம்பதியினர் கடந்த பல தசாப்தகாலமாக கருணைக்கொலையை அனுமதிக்கக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பானது, மீளமுடியாத நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் கருணைக்கொலையை அனுமதிக்கிறதே தவிர, செயல்பாட்டு நிலையிலுள்ளவர்களின் கருணைக்கொலையை அனுமதிக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய நாராயண் லவேட், "ஒரு மனிதர் கௌரவத்துடன் தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்கு உரிமையுண்டு என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது ஒருவகையில் பார்க்கும்போது வெற்றியாகும். ஆனால், அந்த உரிமையை அமல்படுத்துவதற்கான செயல்முறை என்ன? ஒருவர் கருணைக்கொலைக்கு விண்ணப்பித்தால், அதுகுறித்து யார் முடிவெடுப்பார்? நீதிமன்றமா, அரசாங்கமா அல்லது நாட்டின் ஜனாதிபதியா?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
"வாழ்க்கையின் இறுதிக்கட்டத்திலுள்ள நோயாளிகளின் உரிமையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், 50 சதவீத வேலையே நிறைவுற்றுள்ளது, இன்னும் பாதி வேலை நிலுவையிலுள்ளது. செயல்பாட்டு நிலையிலுள்ளவர்களின் கருணைக்கொலையை பற்றி அவர்கள் யோசிக்க வேண்டும். ஒருவர் மோசமான நோயுற்ற நிலையை அடையும்வரை உரிமைக்காக காத்திருக்க வேண்டுமா என்ன? இது எனக்கு புரியவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.
"செயல்படும் நிலையிலுள்ளவர்களுக்கு இந்த உரிமை அளிக்கப்பட்டால் அவர்களின் உறவினர்கள் மற்றும் குழந்தைகள் அதை தவறாக பயன்படுத்துவார்கள் என்ற கவலை மக்களிடத்தில் உள்ளது. ஆனால், அக்கேள்வி எங்களுக்கு பொருத்தமானதல்ல. எங்களுக்கு வாரிசே கிடையாது. எங்களின் உடலை அறிவியல் ஆராய்ச்சிக்காக அளிக்க விரும்புகிறோம். அரசாங்கம் எங்களது சொத்தை எடுத்துக்கொள்ளலாம். நாங்கள் உயிரிழக்க விரும்பும் நிலையில், ஏன் எங்களை வாழ்வதற்கு வற்புறுத்துகிறார்கள்? மற்றவர்களின் கோரிக்கை குறித்து நீதிமன்றம் அப்புறம் தீர்மானிக்கட்டும். தற்போதைக்கு எங்களின் மனுவையானவது கருத்திற்கொள்ள வேண்டும்" என்று நாராயண் கூறினார்.
தற்போது 88 வயதாகும் நாராயண், கடந்த 1989 ஆம் ஆண்டு மாநில போக்குவரத்து கழகத்தின் அலுவலர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். அவரது மனைவியான இரவாடி பள்ளியொன்றின் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வுப்பெற்றவர். இருவருமே திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள போவதில்லை என்று ஒருமனதாக முடிவுசெய்தனர்.
கடந்த 1987 ஆம் ஆண்டு முதலே தாங்கள் கருணைக்கொலை செய்துகொள்ள விரும்புவதாகவும், அதற்காக இந்திய குடியரசு தலைவருக்கு வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
எனவே, மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் இதுகுறித்து அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லையென்றால் தன் குரவளையை நெரித்து கொன்றுவிடுமாறு தனது கணவருக்கு கடிதம் எழுதி வைத்துள்ள இரவாடி, நாராயண் அப்படி செய்தால் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு அவர்களது எண்ணம் நிறைவேறும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :