ரஜினி வருகையை ஒட்டி வழிநெடுக பேனர்கள்; வாகன நெரிசல்

ரஜினி கலந்துகொண்ட கூட்டத்திற்காக, அவர் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் மிகப் பெரிய அளவில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சென்னையில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டதாக, மாநகராட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள அதே நாளில், இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
திங்கட்கிழமையன்று ரஜினிகாந்த் கலந்துகொள்ளும் கூட்டம் நடக்கும் கல்லூரி சென்னையை அடுத்துள்ள வேலப்பன் சாவடியில் அமைந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் மாலை நான்கு மணியளவில் ரஜினி கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது.
இதனால், அவரை வரவேற்ற சென்னை கோயம்பேட்டிலிருந்து வேலப்பன்சாவடி செல்லும் வழியெங்கும் ரசிகர்கள் கொடிகளுடனும் மேள தாளங்களுடனும் காத்திருந்தனர். இதனால், கோயம்பேடு பாலத்திலிருந்து வேலப்பன் சாவடியில் உள்ள பாலம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எங்கெல்லாம் ரசிகர்கள் திரண்டு நின்றார்களோ, அங்கெல்லாம் வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்ல வேண்டியிருந்தது.
சென்னையில் ஃப்ளக்ஸ் பேனர்கள் வைக்க பல்வேறு விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அந்தச் சாலை எங்கும் இரு புறங்களிலும் ரஜினியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலையின் நடுவில் உள்ள தூண்களிலும் பேனர்களும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.
இந்த நிலையில்தான், எம்.ஜி.ஆர். கல்லூரியில் பேச்சைத் துவங்கிய ரஜினி, இப்படி பேனர்கள் வைக்கப்பட்டதற்கு வருத்தத்தைத் தெரிவித்தார். "தயவுசெய்து இதுபோல வருங்காலத்தில் செய்ய வேண்டாம். இடைஞ்சலாக இருந்திருந்தால் மக்கள் மன்னிக்கனும்" என்றும் கூறினார்.

சென்னையில் அனுமதியின்றி பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு கடந்த மாதம் 28 ஆம் தேதி புகார் கடிதம் அளித்திருந்தார். ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி சென்னையின் பல பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றக் கோரி காவல் துறைக்கு அளித்த புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இதனை தானாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டார்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது சென்னை நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களும் அகற்றிவிட்டதாகவும் இது பற்றிய அறிக்கை நாளை தாக்கல்செய்யப்படும் என்றும் கூறினார்.
இந்த நிலையில்தான் பெரும் எண்ணிக்கையில் ரஜினியின் வருகைக்காக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதர செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












