''தண்ணீர் திறக்காவிட்டால் விவசாயிகளின் தற்கொலை அதிகரிக்கும்''

''தண்ணீர் திறந்துவிடு இல்லையேல் விவசாயிகள் மாண்டு போவார்கள்''

பட மூலாதாரம், Getty Images

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள புள்ளம்பாடியில் 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல் பயிருக்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புள்ளம்பாடி பகுதியில் நடப்பு சம்பா சாகுபடியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரப்பளவில் நெல்பயிர் பயிரிடப்பட்டுள்ளது. பயிரில் கதிர் வந்த தருவாயில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் காய்ந்து கருகும் நிலை உருவாகியுள்ளது. அதனால், அதை காப்பாற்ற புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழக ஆளுநர், தமிழக முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நேரில் மனு கொடுத்தும் நடவடிக்கைகள் எடுக்காத நிலையில் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அனைத்து விவசாய சங்கத்தினர்கள் ஒருங்கிணைந்து புள்ளம்பாடி காமராஜர் சிலை அருகே மிகப் பெரிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

''தண்ணீர் திறந்துவிடு இல்லையேல் விவசாயிகள் மாண்டு போவார்கள்''

பட மூலாதாரம், Getty Images

திருச்சி காவிரி மேலணையான முக்கொம்பு பகுதியிலிருந்து புள்ளம்பாடி வாய்க்கால் உற்பத்தி ஆகிறது. இந்த புள்ளம்பாடி வாய்க்கால் மண்ணச்சநல்லூர், சமயபுரம், பெருவளநல்லூர் வழியாக சுமார் 60 கிலோமீட்டர் தூரம் கடந்து புள்ளம்பாடி பகுதியிலிருந்து பாசன வாய்க்காலாக மாறுகிறது. இங்கிருந்து கோவண்டாகுறிச்சி, ஆலம்பாக்கம், விரகாலூர், ஆலம்பாடி மேட்டுத் தெரு, கண்டிராதித்தம், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் வரை பாசன நீர் செல்கிறது.

விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு, விவசாயிகள் போராட்டம்

இந்த புள்ளம்பாடி பகுதியில், சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் சாகுபடி புள்ளம்பாடி வாய்க்கால் நீரை மட்டுமே நம்பி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள விளைநிலம் புள்ளம்பாடி வாய்க்கால் நேரடி நீர்ப்பாசனம் பெரும் நிலங்களாகும். இந்த நிலங்களில் போர்வெல் அமைக்க முடியாது, காரணம் சுமார் 500 அடி ஆழத்திற்கு மேல் போர்வெல் அமைத்தால் சிறிதளவு உப்புத் தண்ணீர் மட்டுமே கிடைக்கும். இதனால்தான் இப்பகுதியில் விவசாயிகள் போர்வெல் அமைக்கவில்லை. 

''தண்ணீர் திறந்துவிடாவிட்டால் விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும்''
படக்குறிப்பு, புள்ளம்பாடியில் குவிக்கப்பட்டிருக்கும் போலீசார்

"கடனாளியாக உள்ளோம்"

இதுகுறித்து கருத்து தெரிவித்த விவசாய சங்க தலைவர் சகாதேவன், ''புள்ளம்பாடியில் கருகும் பயிரைக் காப்பாற்ற தமிழக ஆளுநர், தமிழக முதல்வர், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடத்தில் நேரிடையாக விவசாயிகள் மனு கொடுத்திருந்தனர். ஆனால், தண்ணீர் திறந்துவிட யாரும் முன்வரவில்லை. கடந்தாண்டு இந்த பகுதி வறண்ட பூமியாக இருந்தது. தற்போது தண்ணீர் வந்ததால் நெல் பயிரிட்டு அறுவடைக்கு தயார் நிலைக்கு இருக்கும்போது தண்ணீர் இல்லாமல் அனைத்து நெல் பயிர்களும் கருகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் கையில் இருந்த மொத்த பணத்தையும் செலவு செய்து கடனாளியாக இருந்து வருகிறோம்.

இதே போன்று கடந்த 1995ஆம் ஆண்டு மற்றும் 2002ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில், கருகிய நிலையில் இருந்த நெல் பயிரைக் காப்பாற்ற தமிழக அரசு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விவசாயிகளை காப்பற்றியது. இந்த முறையும் அதே போன்று எங்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் கூடி பேசி முடிவெடுத்திருந்தோம். அதன் அடிப்படையில் இன்று பத்துற்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளை ஒன்று திரட்டி தமிழக அரசின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதற்கும் அரசு செவி சாய்க்காவிட்டால் புள்ளம்பாடி பகுதியில் விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என்று எச்சரித்தார் அவர்.

''தண்ணீர் திறந்துவிடாவிட்டால் விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும்''

பட மூலாதாரம், Getty Images

இங்குள்ள பயிர்கள் கடந்த 15 நாட்களாக தண்ணீர் இல்லாததால் கருகிவிட்டது. ஒருவேளை இந்த பகுதிக்கு அரசு தண்ணீர் திறந்துவிட்டால் அது வந்து சேரவே இரண்டு நாட்களாகிவிடும். தண்ணீர் குறைந்தது 10 நாட்கள் தொடர்ந்து வந்தால் அனைத்து நெல் பயிர்களையும் குறைந்தளவு நஷ்டம் எற்படும் என்ற நிலையில் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் காத்துகிடக்கிறார்கள் விவசாயிகள்.

போராட்டம் தற்காலிகமாக முடிவு

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேசிய வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜீலு, வரும் ஞாயிற்றுகிழமைக்குள் தண்ணீர் புள்ளம்பாடி பாசன வாய்க்காலுக்கு வந்துவிடும் என உறுதி அளித்ததையடுத்து விவசாயிகள் போராட்டத்தை தற்காலிமாக முடிவுக்கு கொண்டு வந்தனர்.

அதேசமயம், தண்ணீர் திறக்கப்படாவிட்டால் வரும் 5 ஆம் தேதி மீண்டும் லால்குடியில் மிகப்பெரியளவில் சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :