கணவரிடம் சொல்லாமல் கருத்தடை செய்துகொண்ட பெண் #HerChoice
நவீன இந்தியப் பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவர்களது உண்மைக் கதைகளை, பிபிசியின் சிறப்புத் தொடரான #HerChoice-இல் படியுங்கள், அவளது வார்த்தைகளில்...

இதுக்கு முன்னாடி கூட என் கணவர்கிட்ட நான் பொய் சொல்லியிருக்கேன். அதுக்கு அப்புறம் அதுல இருக்குற நல்லது, கெட்டத பத்தி தெரிஞ்சிகிட்டேன்.
ஆனா, இந்த முறை எதோ தெரியாத ஒண்ணுல விழுந்துட்டா மாதிரி ஓர் உணர்வு வந்துச்சு.
அந்தப் பிரச்சனை வேறு மாதிரியானதா இருந்துச்சு. என் கணவர் மது குடிச்சி அதுல பணத்த வீணடிக்குறத நிறுத்தி பணத்த சேமிக்க நான் விரும்பினேன்.
அதனால, நான் வாங்குற சம்பளத்தவிட குறைவான சம்பளத்த வாங்குற மாதிரி அவருகிட்ட சொன்னேன்.
நான் பொய் சொல்றத அவர் கண்டுபிடிச்சிட்டாருன்னா எனக்கு பயங்கரமான அடி காத்திருக்குன்னு எனக்கு தெரியும்.
இத தொடர்ந்து வீங்குன கண்ணும், தொடர்ந்து வலிக்கும் அடிவயிறும், என்னோட முதுகுல தழும்புகளும் ஏற்படும்ணு எனக்கு நல்லாவே தெரியும்.
இப்படியெல்லாம் நடக்கும்னும் தெரிஞ்சிருந்தாலும், நான் நிரந்திர வைப்பா வங்கியில் போட்டு வச்சிருக்குற பணத்த அவரால எடுக்கமுடியாதுன்னு ஒரு நம்பிக்க எனக்கு இருந்துச்சு.
என் மேடம் சொன்னதுனாலதான் அப்படி செஞ்சேன். இல்லனா, என்ன மாதிரியான பட்டிக்காட்டு பொண்ணுக்கு வங்கியில கணக்கு தொடங்கி, அதுல பணத்த போட தெரிஞ்சிருக்குமா?
மேடம் எல்லாத்தையும் விளக்கினதுனாலதான் இன்னைக்கும் நான் ஒரு முடிவு எடுத்துருக்கேன். இருந்தாலும் எனக்கு பதற்றமாவே இருந்துச்சு.
இந்த முறை என்னோட உடம்புதான் பணயம் வைக்கப்பட்டுச்சு. இந்த ஆபரேஷன் நடக்கும்போது பெண்கள் இறந்து போறதுக்கு வாய்ப்பு இருக்குதுனு நான் கேள்விப்பட்டிருக்கேன்.

என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் சாவது போலதான் இருந்துச்சு. எனக்கு 22 வயசுதான் ஆச்சு, ஆனா பாக்குறதுக்கு 40 வயசு பொண்ணு மாதிரி இருந்தேன்.
என்னோட உடம்பு ஒல்லியாவும், உயிரற்றும் இருந்துச்சு. அதாவது, கிட்டத்தட்ட ஒரு எலும்புக்கூடு மாதிரி இருந்துச்சு.
என்னோட கண்ண சுத்தி கருவளையம் இருந்ததோட, எப்போதும் சோர்வா இருக்கறதுனால என் வயசுக்கான கலை இழந்து என் முகம் காணப்பட்டுச்சு.
நான் நடக்கும்போது, என்னோட முதுகுல கூன் விழுந்தா மாதிரி இருந்துச்சு. இதெல்லாம், வெளிய பாத்தா தெரியுற என் பிரச்னையோட அறிகுறிகள்.
அதோட ரொம்ப அதிகமா என்னோட மனசு உடைஞ்சு போயிருக்கு. ஆனா, அந்த வலிகளோட எதிரொலிப்பு கண்ணீரா மட்டுமே இருந்தது.
ஆரம்பத்துல, இதெல்லாம் நியாயமில்லைன்னு எனக்கு புரியல. எனக்கு 15 வயசுல கல்யாணம் ஆச்சு; அப்புறம் நாங்க நகரத்துக்கு வந்தோம்.
என் கணவர் வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்ததும், டைனிங் டேபிளில் சாப்பாடும், படுக்கையில நானும் அவருக்கு தேவை.
வேறும் தேவை அவ்வளவுதான். அவரு என்ன வெறும் உடம்பா மட்டும்தான் பாத்தாரு. என் உணர்வுகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கல.
ஆனா நானும் அவர்கிட்ட எதையும் எதிர்பாக்கல. என் அம்மா எனக்கு எல்லாத்தையும் முன்னாடியே சொல்லிருக்காங்க. எல்லாம் தெரிஞ்சும்தான் நான் இந்த கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்டேன்.
எனக்கு முதலில் பெண் குழந்தை பொறந்துச்சு. அப்புறம் எனக்கு முதல் அடி கெடச்சுது. அவரு முதல்வாட்டி மதுபானம் குடிச்சாரு. எல்லா கோபத்தையும் படுக்கையில காட்டினாரு.
பிறகு எனக்கு இரண்டாவது பெண் குழந்தை பொறந்துச்சு. அப்புறம் அவரு வேலைக்கு போறத நிறுத்திட்டாரு.

அப்போ நான் வேலைக்கு போக ஆரம்பிச்சேன். பிறகு எனக்கு மூன்றாவதும் பெண் குழந்தை பொறந்துச்சு. அப்புறமும் இது எல்லாமே தொடர்ந்துச்சு.
அவரு என்ன அடிச்சாரு, நான் சேத்து வெச்ச காசுல மது வாங்கி குடிச்சாரு, படுக்கையில என் உடம்ப மட்டும் அனுபவிச்சாரு.
ஆனா நான் அமைதியாவே இருந்தேன். இதுதான் பல பெண்களோட நிலைமைன்னு என் அம்மா முன்னாடியே என்கிட்ட சொல்லிருக்காங்க. என் நான்காவது குழந்தைய நான் சுமக்கும்போது எனக்கு இருவது வயசு.
உயிரே இல்லாத என் உடம்பு வீங்கிப்போய் இருந்தத பாத்த என் மேடம், அதாவது நான் வேலை செய்யும் வீட்டின் முதலாளியம்மா ரொம்ப கோபமாகிட்டாங்க. ''உன்னால இன்னொரு குழந்தையை பெத்து எடுக்க முடியுமா? உன் உடம்பு அதுக்கு ஒத்துழைக்குமா?'' என்று கேட்டாங்க.
''அதெல்லாம் பாத்துக்கலாம். நீங்க கவலைப்படாதீங்க'' என்று நான் அவங்ககிட்ட சொன்னேன்.
ஒரு மாடர்ன் பெண்மணிக்கு என் வாழ்க்கை எப்படி புரியும்ன்னு நான் எனக்குள்ளயே நெனச்சுகிட்டேன்.
ஓர் ஆண் குழந்தைய பெத்தெடுக்குறவரைக்கும் என்ன மாதிரி பொண்ணுங்க தொடர்ந்து கர்ப்பமாகுறத பொறுத்துகிட்டுதான் ஆகணும்.
வங்கிக் கணக்கு தொடங்கி பணத்தை சேமிக்க அவங்க அறிவுரை சொன்னாங்க அவ்வளவுதான். ஆனா, குடும்ப சுமைகள் பத்தியும், சமூக அழுத்தங்கள் பத்தியும் அவங்களுக்கு விளக்குறது ரொம்பவே கஷ்டம்.
அதனாலதான் எல்லாமே அமைதியா நடக்கணும்ன்னு என் உள் மனசு சொல்லிச்சு. நான் கர்ப்பமாகியிருப்பது யாருக்கும் தெரியக்கூடாது.
எனக்கு ஒரு மகன் பிறந்தா எல்லாமே சரி ஆகிடும்ன்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. தினம் தினம் அவரு என்ன அடிக்குறது, மது குடிக்குறது, படுக்கையில என்ன பாடாய் படுத்துவது எல்லாமே மாறிடும் என்று தோணிச்சு.
இந்த வாட்டி நான் நெனச்சா மாதிரியே எனக்கு ஆண் குழந்தை பிறந்துச்சு! நான் படுத்திருந்த ஹாஸ்பிடல் படுக்கை பக்கத்துல நர்ஸ் வந்து இந்த செய்திய சொன்னதும், எனக்கு அழுகையே வந்துடுச்சு.
ஒன்பது மாசமா பலவீனமான என் கர்பப்பையில என் குழந்தைய சுமந்த வலி, 10 மணிநேர சிகிச்சையில அடைந்த சோர்வு எல்லாமே அந்த பிஞ்சு முகத்த பார்த்த நொடியில மறஞ்சு போயிடுச்சு.
ஆனா அதுக்கு அப்புறமும், எதுவுமே மாறல. அந்த கொடுமைகளெல்லாம் மீண்டும் தொடர்ந்துச்சு. நான் என்னதான் தப்பு செஞ்சேன்?
நான் இப்போ ஓர் ஆண் பிள்ளையையும் பெத்தெடுத்துருக்கேன். ஆனா கொடுமை படுத்துறது என் கணவரோட பழக்கமாவே மாறிடுச்சுன்னு அப்போதான் எனக்கு புரிஞ்சுது.
என் உடம்பு ரொம்பவே சோர்ந்து போயிடுச்சு. மறுபடியும் கர்பமாகிடுவேனோ என்ற பயத்துலயே நான் வாழ்ந்தேன். ஒரு நாள் என் மேடம், கலையிழந்த என் முகத்த பார்த்து ''உன் வாழ்க்கையில ஒரு விஷயத்த உன்னால மாத்த முடிஞ்சா, நீ எத மாத்தணும்ன்னு விரும்புவ?'' என்று கேட்டாங்க.
எனக்கு சிரிப்புதான் வந்துச்சு. எனக்கு என்ன வேணும்னு நான் இதுவரைக்கும் நினைச்சதில்ல; யாரும் என்ன கேட்டதும் இல்ல. ஆனா இந்த வாட்டி நான் யோசிக்க ஆரம்பிச்சேன். ஒரு வாரம் கழிச்சு, 'நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் கண்டுபுடிச்சுட்டேன்னு' என் மேடம்கிட்ட சொன்னேன்.
ஆனா அவங்க கேட்டதையே மறந்துருப்பாங்க போல; இருந்தாலும் அவங்க மறந்தா மாதிரி காட்டிக்கல.
"நான் மீண்டும் கர்பமாகக் கூடாதுன்னு நினைக்குறேன்; ஆனா, என் கணவர எப்படி தடுக்குறதுன்னு எனக்கு தெரியல.
நான்கு குழந்தைங்கள வளர்க்கும் அளவுக்கு நம்மகிட்ட காசு இல்லைன்னு பல வாட்டி நான் அவர்கிட்ட சொல்லிருக்கேன்.
ஆனா அவரால ஆசைகள கண்ட்ரோல் பண்ண முடியல. என் உடம்பு ரொம்ப பலவீனமானத அவரு பொருட்படுத்தல. குழந்தைங்கள வளர்க்கும் பொறுப்பும் அவருக்கு இல்ல என்பதால அத பத்தியும் அவரு கவலை படல".
ஒருநாள், மேடம் என்ன கருத்தடை பண்ணிக்க சொன்னாங்க. இது மட்டும்தான் உன் கையில இருக்குன்னு சொன்னாங்க.
ராத்திரி அவரு படுக்கையில செய்வத உன்னால தடுக்க முடியலைனாலும் நீ கர்பமாகாம இருப்பதையாவது இது தடுக்கும் என்று சொன்னாங்க.

இத பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. நிறைய நாட்கள் ஓடி போச்சு. எனக்குள்ள பல கேள்விகளும் எழுந்துச்சு. அந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி களைச்சு போன என் மேடம், ஒரு கிளினிக்கின் முகவரிய என்கிட்ட கொடுத்தாங்க.
என்ன மாதிரியே பல பெண்கள அங்க பாத்தேன். இது சீக்கிரமாவும் எளிமையாவும் செய்யக்கூடிய ஆபரேஷன்னும், ஆனா இதுல ஏதாவது தப்பா நடந்தா, உயிருக்கே ஆபத்துன்னும் அவங்க என்கிட்ட சொன்னாங்க. இத பத்தி நான் பல மாசங்கள் யோசிச்சேன்.
இறுதியா, என் கணவர் மற்றும் குழந்தைங்ககிட்ட நான் பொய் சொல்லிட்டு கிளினிக்குக்கு போனப்போ இந்த பயம் எனக்கு தலைகேறிச்சு.
ஆனா நான் ரொம்ப சோர்வா இருந்தேன். எனக்கு பயமும் விரக்தியும் அதிகமாச்சு. இதுல நிறைய ரிஸ்க் இருந்தாலும், என் வாழ்க்கையின் ஒரு பகுதியாவது என் கண்ட்ரோலில் இருக்கும்ன்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு.
அப்புறம் எனக்கு ஆபரேஷன் நடந்துச்சு. நான் பொய் சொல்லல. நான் அதுல இருந்து மீண்டு வர சில நாட்கள் ஆச்சு. நான் ரொம்ப பலவீனமாகிட்டேன்; வலியில துடிச்சேன்.
ஆனா இப்போ எல்லாமே சரி ஆகிடுச்சு. பத்து வருஷம் ஓடி போச்சு. இப்போ எனக்கு 32 வயசு. ஆனா அதுக்கு அப்புறம் நான் கர்பமாகல.
என் கணவரும் இத பெருசா எடுத்துக்கல. மதுபானம் குடிப்பது, என்ன அடிப்பது, என்கூட படுக்கையில சுகம் காண்பது இதுதான் என் கணவரோட வாழ்க்கை. இத விட்டா அவருக்கு வேற எதுவும் பெருசா தெரியாது.
எனக்கு என்ன தேவையோ அத நானே செஞ்சுக்குறேன். வீட்டு வேலைகள் செஞ்சு என் குழந்தைங்கள படிக்க வெக்குறேன்.
என் கணவரவிட்டு நான் போகமாட்டேன்; என் அம்மா எனக்கு எல்லாத்தையும் விளக்கிருக்காங்க. அதுமட்டும் இல்லாம என் கணவரையும் என்னால மாத்த முடியாது. அதனால இது எல்லாமே எனக்கு பழகி போச்சு.
அவரு என்ன வேண்டாம்ன்னு நினைச்சாலும் என்னால என்ன பாத்துக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. என் ஆபரேஷன் தான் என் வாழ்வின் ரகசியம்.
நான் அதுக்காக பெருமைப்படுறேன். என் வாழ்க்கையில எனக்காக, எனக்காக மட்டும், என்னால ஒரு முடிவாவது எடுக்கமுடிஞ்சுத நினைச்சு சந்தோஷப்படுறேன்.
(பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யாவால் பகிரப்பட்ட வட இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணியின் உண்மைக் கதை இது. அந்தப் பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது).
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












