தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு: அரசு செயல்படவில்லையா?

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்

டைம்ஸ் ஆஃப் இந்தியா- 'தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு'

2016- 17 நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 0.86 சதவீதம் குறைந்துள்ளது என டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி கூறுகிறது.

அதற்கு முந்தைய நிதியாண்டில் 8.79 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம், 2016-17ல் 7.93 சதவீதமாக வீழ்ந்துள்ளதாக நித்தி ஆயோக் (முந்தைய திட்டக் கமிஷன்) வெளியிட்ட தரவுகள் குறிப்பிடுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. உற்பத்தி துறையின் வளர்ச்சி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல நிறுவனங்கள் தமிழகத்தை விடுத்து மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த பிறகு, தமிழக அரசு முறையாக செயல்படாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று பொருளாதார வல்லுனர் வெங்கடேஷ் அத்ரேயா கூறியதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் விவரிக்கப்பட்டுள்ளது.

தினமலர் வெளியிட்டுள்ள கார்டூன்

தினமணி - 'காவிரி விவகாரத்தில் பிரதமரை சந்திக்க முடிவு'

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆறுவார காலத்திற்குள் காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு சந்திக்க உள்ளதாக தினமணி நாளிதழ் முதல் பக்கத்தில் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க தலைமை செயலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளோடு விவசாய சங்கங்களும் பங்கேற்றதாகவும், இதில் ஒருமனதாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் இச்செய்தி விவரிக்கிறது.

தி இந்து (ஆங்கிலம்) - 'ஏழை மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும்'

இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக ஏழை மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் இருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்ததாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய கனடா வணிக கூட்டத்தில் பேசிய ட்ரூடோ, பொருளாதார வளர்ச்சி எல்லா தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், பன்முகத்தன்மையுடன் இருப்பது புதிய சிந்தனைகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகை செய்யும் என்றதோடு, கனடா நாட்டிற்கு டொரொன்டோ போன்று, இந்தியாவுக்கு பல கலாசாரங்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை பெற்றுள்ளது பெங்களூரு என்றும் ட்ரூடோ கூறியதாக அச்செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :