"ஓராண்டு எடப்பாடி ஆட்சி - எம்.எல்.ஏக்களுக்கு கூவத்தூர்; மக்களுக்கு நரகம்"

    • எழுதியவர், எஸ்.எஸ். சிவசங்கர்
    • பதவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.

(இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)

எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக முதலமைச்சராக பதவியேற்று ஓராண்டாகி விட்டது. அவர் முதல்வர் ஆனார் என்பது எப்படி மர்மமோ, அப்படியே இந்த ஆட்சி எப்படி தொடர்கிறது என்பதும் மர்மமாகவே இருக்கிறது.

இந்த ஆட்சி அமையக் காரணமான முன்னாள் முதல்வர் 'இரும்பு மங்கை' ஜெயலலிதாவின் மரணமும் மர்மம். அடுத்து எடப்பாடி முதல்வர் ஆகக் காரணமாக இருந்த 'சொத்துக் குவிப்பு வழக்கு' தீர்ப்பு திடீரென வந்தததும் மர்மம்.

தமிழக வரலாற்றில் இப்படி ஓர் ஆட்சிக் காலம் இருந்திருக்காது. கழுத்தை நெறிக்கும் நிதிப் பிரச்சினைகளோடு அரசாங்கம். அரசு ஊழியர்களின் ஒவ்வொரு பிரிவும் திடீரென போராட்டத்தில் குதிக்கும் நிலை. மக்களின் அன்றாட வாழ்விற்கான பிரச்சினைகள் தீர்க்க அரசு முன் வராத நிலை. அரசின் அன்றாட நடவடிக்கைகளுக்கு நீதிமன்றங்கள் வழிகாட்டும் சூழல். சட்டம் ஒழுங்கு தறிகெட்டு நிற்கும் அபாயம்.

ஆட்சிக்கு தேவையான மெஜாரிட்டி இல்லாத நிலையில் இருக்கும் மாநில அரசை காத்து நிற்கும் மத்திய அரசு. அதை வைத்து, தன் திட்டங்களை மத்திய அரசு திணிப்பதை எதிர்க்க இயலாத நிலையில், முதுகெலும்பு இல்லாமல் நிற்கும் மாநில அரசு. மக்கள் பிரச்சினைகளை திசை திருப்ப, மதப் பிரச்சினையை கையிலெடுக்கும் பா.ஜ.க.

கண்டிக்க ஆள் இல்லாமல், காமெடி வசன ஹீரோக்களாக அமைச்சர் பெருமக்கள். இப்படியாக, இருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் மக்களுக்கு புண்ணியம் இல்லாத ஓர் அரசாக நீடித்துவருகிறது 'எடப்பாடி அரசு'.

இந்த ஆட்சியில் தமிழகம் உண்மையில் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறது. உச்சி மலையிலிருந்து, அதல பாதாளத்தை நோக்கி அசுர வேகத்தில் செல்லும் பிரேக் இல்லாத வாகனம் போல சென்று கொண்டிருக்கிறது.

மருத்துவக் கல்வி பயில "நீட் தேர்வு" அவசியம் என மத்திய அரசு வலியுறுத்தியது. விதிவிலக்கு பெறுவோம் என வாய்ச்சவடால் விட்டார், முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி. அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன. ஆனாலும் மத்திய அரசு அசையவில்லை.

மார்ச் மாதத்தில் தமிழக நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தேவையான அளவு கிடைக்கவில்லை. முதல்வர் எடப்பாடி கவலைப்படவில்லை.

விவசாயிகள் எல்லா விதத்திலும் பிரச்சினைகளைச் சந்தித்தனர். விவசாயக் கடனை தீர்க்க வலியுறுத்தி, தில்லி சென்று, மாதக் கணக்கில் போராட்டம் நடத்தினார்கள். தமிழகத்தில் விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் மக்களின் முழு ஆதரவைப் பெற்றது.

பண விநியோக குற்றச்சாட்டு

ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, எல்லாக் கட்சிகளும் களத்தில் குதித்து, தேர்தலுக்கு ஒரிரு நாட்கள் முன் தேர்தல் நிறுத்தப்பட்டது. காரணம், ஆளும் அ.தி.மு.க அமைச்சர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தார்கள் என வருமானவரித்துறை, தேர்தல் ஆணையத்திற்கு புகார் கொடுத்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரூபாய் 89 கோடி வழங்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்தது. இதன் மீது இன்னும் நடவடிக்கை இல்லை.

விஜயபாஸ்கரும் அமைச்சராகத் தொடர்கிறார். அந்தப் பணத்தை வினியோகித்ததாக பட்டியலில் இடம்பெற்ற முதல்வர் பழனிசாமியும் பதவியில் தொடர்கிறார்.

டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி பெண்கள், மாணவர்கள் போராடினார்கள். திருப்பூரை அடுத்த சாமளாபுரத்தில் ஒரு பெண்ணை போலீசார் தாக்கியதில் அவரது காது பாதிக்கப்பட்டது. மாணவர்கள் தாக்கப்பட்டனர், தமிழகமெங்கும். போலீஸ் அராஜக ஆட்டம் போட்டது.

அரசின் 64 துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரும் போராட்டம் துவங்கினர். நீதிமன்றம் தலையிட்ட பிறகு தற்காலிகமாக ஒத்திப் போடப்பட்டது போராட்டம்.

அரசு மருத்துவர்களுக்கான, மருத்துவ மேற்படிப்புக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது மிகப் பெரும் அநியாயம். அரசு மருத்துவர்களின் போராட்டம் நீண்ட நாட்களுக்கு நீடித்தது. சரியான தீர்வில்லை.

நீட் தேர்விற்கு விலக்கு கோரி, அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போராட்டம் எல்லாம் நடத்திய போது, முதல்வரும், மத்திய அமைச்சர்களும், மாநில அமைச்சர்களும் விலக்கு கிடைக்கும் என ஏமாற்றி வந்தனர். நீட் உறுதியானதை தாங்காமல், அப்பாவி மாணவி அனிதா உயிர் விட்டது உச்சக்கட்ட கொடூரம். அனிதாவின் மரணத்திற்கு இந்த அரசுகளே காரணம். நீட் அபாயம் இன்னும் நீடிக்கிறது.

தமிழகம் எங்கும் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்த இயலாமல் பரவியது. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மர்மக் காய்ச்சல் என்று திசை திருப்பிப் பார்த்தார். நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தது தான் மிச்சம்.

ரேஷன் கடையில் விற்கும் சர்க்கரைக்கான மானியத்தை, மத்திய அரசு நிறுத்தி விட்டதென, சர்க்கரை விலையை இரண்டு மடங்காக உயர்த்தியது தமிழக அரசு. மக்கள் கொந்தளித்தனர்.

செவிலியர்கள் ஊதிய உயர்வு, பணி குறித்த கோரிக்கைகளுக்காக போராடினார்கள். வழக்கம் போல் அரசு தூங்கியது. போராட்டம் உச்சத்தை அடைந்தே ஓய்ந்தது.

மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு ஒரு வருடமாகியும், ஒரு இடத்தை தேர்வு செய்து, மத்திய அரசுடன் பேசித் தீர்வு செய்ய இயலாமல் இருக்கிறது எடப்பாடி அரசு.

இயற்கை சூறையாடல்- வளர்ச்சி முடக்கம்

எம்.எல்.ஏக்கள் மணல் குவாரிகள் நடத்தி இயற்கை வளத்தை சூறையாட, நீதிமன்றம் தலையிட்டது. பல குவாரிகள் மூடப்பட்டன. மணல் தட்டுப்பாடு. தாறுமாறான விலையேற்றம். மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலும் முடக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் தேக்கமாகி, வளர்ச்சி தேங்கிவிட்டது.

ஓகிப் புயல் மீட்பு நடவடிக்கையில் அலட்சியம்

ஓகிப் புயல் தாக்கிய நேரத்தில் , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் அலட்சியம் செய்தது எடப்பாடி அரசு. சேதங்கள் ஒருப் புறம். காணாமல் போன குமரி மீனவர்கள் கதி அதோகதியாகிப் போனது. பல குடும்பங்கள் தலைவனை இழந்து தவிக்கின்றன.

ஜெயலலிதா ஆட்சிக் காலம் துவங்கிய மற்றொரு பிரச்சினை இன்னும் நீடிக்கிறது. குட்காப் பொருட்கள் விற்பவர்களிடம் லஞ்சம் பெற்றார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இன்னும் பதவியில் நீடிக்கிறார்கள் அமைச்சரும், அதிகாரிகளும். அரசின் உச்சகட்ட அவமானம் இது.

குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம், ஓய்வூதியப் பிரச்சினைகளைக் களைதல், ஊதியப் பிடித்தப் பணம் வழங்கல் ஆகியவற்றை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் துவங்கியபோது அலட்சியம் காட்டியது அரசு. போராட்டம் வலுப் பெற்று, நீதிமன்றம் தலையிட்டு, தற்காலிக தீர்வு வழங்கி, போராட்டம் தள்ளிப் போடப்பட்டுள்ளது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

போராட்டத்தால் பேருந்து சேவை தடைப்பட்டது போக, இப்போது மக்கள் பேருந்து ஏறா வண்ணம் அரசே நடவடிக்கை எடுத்துவிட்டது. ஆம், 100 % பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்த, மக்களும், மாணவர்களும் முதலில் போராட்டத்தில் குதித்தார்கள். இப்போது அனைத்துக் கட்சிகளும் போராட்டக் களத்தில்.

இது ஒரு வலிமை இல்லா, செயல்திறன் இல்லாத அரசு என்பதை தெரிந்து கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , அரசர் போல நகர்வலம் வருகிறார், ஆய்வு மேற்கொள்கிறார். இது மாநில உரிமைகளுக்கு எதிரானது. இதை எதிர்க்க வேண்டிய ஆளுங்கட்சி கைகட்டி, வாய்பொத்தி நிற்கிறது. தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் தான் கருப்புக் கொடி போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது.

நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள். கவலைப்பட வேண்டிய முதல்வரோ, உல்லாசமாக இருக்கிறார். அரசு பணத்தில், "எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா" என்ற பெயரில் கூட்டம் திரட்டி , உள்கட்சிப் பிரச்சினைக்கு சவால் விட்டுக் கொண்டு திரிகிறார். ஒரு இன்ச் பவுடர் ஏற்றி, திருநீறு தீட்டி, ஓட்டல் முதலாளிப் போல் காட்சி தருகிறார். சமயத்தில் ஜெயலலிதா போல் குட்டிக்கதை சொல்கிறார். தன்னை, ஜெயலலிதாவாகவே நினைத்துக் கொண்டு, அகங்காரமாக, ஆணவமாகப் பேசுகிறார்.

மக்கள் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களை கூவத்தூரில் அடைத்து வைத்து, "அன்பு மழையில்" குளிப்பாட்டி எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப் பட்டார். இப்போதும் அந்த எம்.எல்.ஏக்களை 'அன்பு' மழையில் குளிப்பாட்டி அரசை காப்பதே வேலையாக இருக்கிறது முதல்வருக்கு.

மொத்தத்தில், கடந்த ஓராண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், தமிழகம் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு "கூவத்தூர்" ஆகவும், மக்களுக்கு "நரகம்" ஆகவும் திகழ்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :