You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உ.பி: என்கவுண்டர்களின் இலக்கு முஸ்லிம்களும் தலித்துகளுமா?
- எழுதியவர், முகம்மது ஷாஹித்
- பதவி, பிபிசி நிருபர்
பத்து மாதங்களில் 1,100க்கும் அதிகமான போலிஸ் என்கவுண்டர்கள். அதில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது திரைப்படக் கதையல்ல, உண்மை சம்பவங்கள்.
மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலம் தற்போது என்கவுண்டர் செய்யும் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்திருக்கிறது. அண்மையில் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அதை சட்டசபையில் உறுதிபடுத்தினார். மாநிலத்தில் குற்றங்களை கட்டுப்படுத்தும் வரையில் போலிஸின் என்கவுண்டர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்று அவர் உறுதியாக சொன்னார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட 1200 என்கவுண்டர்களில், பொதுமக்களுக்கும், நாட்டின் நலனுக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடிய 40 குற்றவாளிகள் கொல்லப்பட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
மறுபுறம், என்கவுண்டர் விவகாரத்தில் ஆளும்கட்சியான பாரதிய ஜனதா கட்சி மீது எதிர்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு எல்லா விதத்திலும் தோல்வியடைந்து விட்டதாகவும், அதன் குறைபாடுகளை பூசி மறைப்பதற்காக என்கவுண்டர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் கட்சித் தலைவர்களின் செயல்பாடு, அரசியலமைப்பை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக சமாஜ்வாதி கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி, பிபிசிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார். மேலும், மாநிலத்தின் 22 கோடி மக்கள் அரசாங்கத்தின் இலக்காக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ராஜேந்திர செளத்ரி இவ்வாறு கூறுகிறார், "விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர், இளைஞர்களுக்கோ வேலைவாய்புகள் இல்லை, நீதி கேட்டு லக்னோவுக்கு வரும் மக்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது."
மதுராவில் ஜனவரி 18ஆம் தேதியன்று நடந்த என்கவுண்டரில் ஒரு குழந்தை மீது தோட்டா பாய்ந்து அது பரிதாபமாக இறந்து போனது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி நொய்டாவில் நடத்தப்பட்ட ஒரு என்கவுண்டரில் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். அதன் பிறகு, மாநில அரசின் என்கவுண்டர்களின் இலக்கு சிறுபான்மை சமூகத்தினர் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ளன.
இதுபற்றி பேசும் ராஜேந்திர செளத்ரி, என்கவுண்டரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர், மேலும் பழி வாங்கும் எண்ணமும் நிறைவேற்றப்படுகின்றன என்று கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில், "மக்களை தேர்ந்தெடுத்து தண்டிக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் விவசாயிகளே அரசின் இலக்கு. என்கவுண்டர்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்." என்றார்.
இந்நிலையில், எதிர்கட்சியினரின் இந்தக் குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவை என்று கூறி அவற்றை புறந்தள்ளுகிறது ஆளும் பாரதிய ஜனதா கட்சி. . குற்றவாளிகளுக்கு அனுதாபம் காட்டவேண்டும் என்று சொல்வது துரதிஷ்டவசமானது, அது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
பிபிசியிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் ஊடக பொறுப்பாளர் ஹரிஷ்சந்திர ஸ்ரீவாஸ்தவ், "அகிலேஷ் யாதவின் ஆட்சிக் காலத்தில், உத்தரப் பிரதேசத்தில் குழப்பம் நிலவியது. கத்திகளையும் ஆயுதங்களையும் ஏந்தியவர்கள் அச்சமின்றி வீதிகளில் வெளிப்படையாக சுற்றித் திரிந்தார்கள். எளியவர்களின் நிலங்களையும், உடமைகளையும் ஆணவக்காரர்கள் ஆக்கிரமித்தனர்." என்று தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைத்து என்கவுண்டர் நடத்தப்படுகிறது என்ற எதிர்கட்சியின் குற்றச்சாட்டு, சமாஜ்வாதி கட்சியின் சாதி அரசியலை காட்டுவதாக கூறும் ஹரிஷ்சந்திர ஸ்ரீவாஸ்தவ், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை, பகுத்தறிவுக்கு புறம்பானவை, அடிப்படை ஆதாரங்கள் இல்லாதவை என மறுக்கிறார்.
மதுராவில் நடந்த என்கவுண்டரில் ஒரு குழந்தை இறந்துபோனதை பற்றி விளக்கமளிக்கும் அவர், அந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மூன்று போலிஸார் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
என்கவுண்டரில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே குறி வைக்கப்படுகிறார்களா?
என்கவுண்டரை அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைக்கு அரசு பயன்படுத்துகிறதா? குறிப்பிட்ட சிலர் இலக்கு வைக்கப்படுகிறார்களா? உத்தரப் பிரதேச மாநில காவல்துறை முன்னாள் ஐஜி மற்றும் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.ஆர். தாராபுரியிடம் பிபிசி நிருபர் இந்த கேள்விகளை முன்வைத்தார். என்கவுண்டர்களில் பெரும்பாலானவை மாநில அரசின் ஆதரவுடன் நடத்தப்படுவதாகவும், என்கவுண்டர்களில் 90% போலியானவை என்றும் அவர் பதிலளித்தார்.
அவர் கூறுகிறார், "அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் என்கவுண்டர்களில், ஆளும் கட்சிக்கு எதிரானவர்களும் பயனில்லாதவர்களும், அவர்களால் ஒடுக்க விரும்பும் பிரிவினரும் இலக்காக இருப்பார்கள். உத்தரப்பிரதேச மாநில அரசு என்கவுண்டர் தொடர்பாக ஒரு புள்ளிவிவரம் வெளியிட வேண்டும். அதில் என்கவுண்டர்களில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காலில் சுடப்பட்டவர்கள் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று பிரித்து காண்பித்தால் உண்மை வெட்ட வெளிச்சமாகிவிடும்."
"எனக்கு தெரிந்த வரையில் என்கவுண்டர்களில் பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டோர் அதிக அளவில் இருப்பார்கள். உயர் சாதிகளை சேர்ந்தவர்கள் இருக்கமாட்டார்கள். என்கவுண்டர்களில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சென்று சந்தித்த பத்திரிகையாளர் ஒருவர் என்னிடம் கூறினார். காலில் சுடப்பட்ட சிலருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. முஸ்லிம்களைத் தவிர, தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுமே அவர்களின் இலக்கு." என்கிறார் எஸ்.ஆர். தாராபுரி.
அதிகரித்து வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் ஆயுதமாக என்கவுண்டர் பயன்படுத்தப்படுகிறது. பிபிசிக்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேச முன்னாள் டிஜிபி பிரகாஷ் சிங், "குற்றவாளிகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தவறுகளை செய்யும்போதோ, போலிஸ் மீது தாக்குதல் நடத்தும்போதோ, அவர்களுக்கு துப்பாக்கி தோட்டாவால் தான் பதிலளிக்க வேண்டியிருக்கிறது" என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "குற்றத்தை முடிவு கட்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஆயிரம் என்கவுண்டர்களில் 30 முதல் 35 குற்றவாளிகள் கொல்லப்பட்டார்கள் என்றால், அதுவொன்றும் மிகப்பெரிய எண்ணிக்கை இல்லை, அனைத்து என்கவுண்டர்களும் போலி என்று சொல்வது தவறு" என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் அதிகரித்துவரும் குற்றங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக இருப்பதால் இங்கு குற்றங்களின், குற்றவாளிகளின் அளவும் அதிகமாக உள்ளது என்கிறார் பிரகாஷ் சிங்.
சிறையில் இருக்க வேண்டிய ஒரு மாஃபியா கும்பல் தலைவன் சட்டசபைக்கு வந்து அமைச்சரை சந்தித்து விட்டு செல்லும் புகைப்படம் நீண்ட காலத்திற்கு முன்பு வெளியான கதையை அவர் நினைவுகூர்கிறார்.
குற்றவாளிகளுக்கும் மனிதஉரிமைகள் உள்ளதா?
என்கவுண்டர் நடவடிக்கைகளின்போது மனித உரிமைகள் பற்றிய விவாதங்களும் எழுவதை பார்க்கிறோம். உத்தரப் பிரதேசத்தில் நடந்த என்கவுண்டரை அடுத்து, மாநில அரசு இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.
மனித உரிமை மீறல் குறித்து பிரகாஷ் சிங் கூறுகையில், "அதிகரித்துவரும் குற்றங்களை சமாளிக்க, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. மனித உரிமைகள் என்பது இயல்பான சூழலுக்கு பொருந்தும். ஆனால் ஒரு குற்றவாளி பிறரை துப்பாக்கியால் சுடும்போது, அவனுடைய மனித உரிமைகள் முடிவுக்கு வருகிறது. ஒருவர் மற்றொருவருக்கு தீங்கு செய்யும்போது, கொலை செய்யும்போது அவரது மனித உரிமையை பாதுகாக்கிறேன் என்று சொல்லி கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. ஒருவருடைய உரிமையும், சுதந்திரமும் அடுத்தவரின் உரிமையையும் சுதந்திரத்தையும் பாதிக்காமல் இருப்பதை பொறுத்தே முடிவு செய்யப்படும். தவறு நடக்கும்போது அதனை கட்டுப்படுத்தும் அதிகாரம் காவல்துறைக்கு இருக்கிறது." என்றார்.
குற்றவாளிகளின் மனித உரிமைகள் பற்றி பேசும்போது, "குற்றவாளி கைது செய்யப்பட்டால், அவர் நிரபராதி என்று நிரூபிக்கப்படாவிட்டாலும், அவர் நிராயுதபாணியாக இருக்கும்போது, தாக்கப்படக்கூடாது என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அவர் தாக்கப்பட்டால் அது மனித உரிமைகள் மீறலாக கருதப்படலாம்." என்கிறார் அவர்.
தற்காப்புக்காக துப்பாக்கியை பயன்படுத்துவதை எஸ்.ஆர்.தாரபுரி ஒத்துக்கொள்கிறார். ஆனால் என்கவுண்டர் நடத்தப்படும்போது என்ன செய்ய முடியும் என்று அவர் எதிர்கேள்வி எழுப்புகிறார்.
மேலும், "நான் காவல் துறையில்தான் இருக்கிறேன், 90% அதிகமான என்கவுண்டர்கள் போலியானவை என்று நான் கருதுகிறேன். உண்மையான என்கவுண்டர்கள் அரிதாகவே இருப்பதாக நம்புகிறேன். என்கவுண்டவர்கள் பெரும்பாலும், திட்டமிடப்படுகிறது அல்லது மாநில அரசின் விருப்பத்திற்கு ஏற்பவே நடைபெறுகின்றன" என்று அவர் கூறுகிறார்.
என்கவுண்டர்கள் மூலம் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படுமா? இந்தக் கேள்விக்கு பதிலளித்த பிரகாஷ் சிங்கும், தாரபுரியும், இல்லை என்று உறுதியாக சொல்கிறார்கள். குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டுமெனில், காவல்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என அவர்கள் நம்புகின்றனர்.
தாராபுரி கூறுகையில், "காவல்துறை பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. போலிசாரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதைத்தவிர வி.ஐ.பி பாதுகாப்பு, தேர்வுகளுக்கு, தேர்தலுக்கு பாதுகாவல் பணி என்று அவர்கள், உண்மையான காவல்துறைப் பணிகளில் இருந்து மடை திருப்பப்படுகிறார்கள். இதனால்தான் குற்றங்களை கட்டுப்படுத்துவது கடினமானதாக இருக்கிறது" என்கிறார்.
இந்தியாவில் என்கவுண்டர் என்ற சொல் புதிதானதல்ல. இது நீண்ட வரலாற்றை கொண்டது. சொராபுதீன் ஷேக், இஷ்ரத் ஜஹான், ஹாஷிம்பூரா என்கவுண்டர் ஆகிய பல என்கவுண்டர் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் நடந்த என்கவுண்டரில் எவ்வளவு உண்மை இருக்கிறது, அதில் கிடைத்த பலன் என்ன? எதிர்காலத்திலும் இதுபோன்ற நடவடிக்கைகளும் தொடருமா என்ற கேள்வியே இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்