என் தந்தையின் மரணத்தில் சந்தேகம் இல்லை: மறைந்த நீதிபதி லோயாவின் மகன்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் சொராபுதீன் என்கவுன்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த லோயாவின் மகன் அனுஜ் லோயா, ''என் தந்தையின் மரணத்தைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை'' என கூறினார்.

தங்கள் குடும்பம் நிறைய பிரச்சனையில் உள்ளது என்றும் அதில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும் அனுஜ் கூறினார்.

''எந்த விசாரணையும் எங்களுக்குத் தேவையில்லை.'' எனவும் அனுஜ் தெரிவித்தார்.

தனது தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கடிதம் எழுதியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ''அப்போது நான் உணர்ச்சி குழப்பத்தில் இருந்தேன். அப்போது எனக்குச் சந்தேகங்கள் இருந்தது. ஆனால் இப்போது இல்லை'' எனக் கூறினார்

''எனது தந்தையின் மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்குமாறு நீதிபதி மோஹித் ஷாவிடம் கேட்டுக்கொண்டேன். எனக்கோ அல்லது எனது குடும்பத்துக்கோ ஏதேனும் நடந்தால் இந்த சதியில் தொடர்புடைய மோஹித் ஷாவும் மற்றவர்களுமே பொறுப்பு'' என அனுஜ் எழுதியாக கூறப்படும் கடிதம் கேரவன் பத்திரிகையில் வெளியான செய்தியில் இடம்பெற்றது. கடிதம் எழுதியதை இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது அனுஜ் மறுக்கவில்லை.

கேரவன் செய்தி வெளியாகி ஒரு வாரமான நிலையில், ''தந்தையின் மரணம் குறித்து எந்த சந்தேகமோ அல்லது புகாரோ இல்லை'' என அனுஜ் கூறியுள்ளார்.

சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த லோயா, குஜராத்தில் நடந்த சோரபுதீன் என்கவுன்டர் வழக்கை இறப்பதற்கு முன்பு விசாரித்துக்கொண்டிருந்தார். இந்த வழக்கில் மற்றவர்களுடன் பாஜக தலைவர் அமித்ஷாவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

2014 டிசம்பர் 1-ம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நீதிபதி லோயா மரணமடைந்தார்.

பிறகு இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அமித்ஷாவும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

முன்பு, லோயா குடும்பத்தினரிடம் பேசியதன் அடிப்படையில் கேரவன் பத்திரிகை செய்தி வெளியிட்டது. லோயா மரணமத்தில் மர்மம் இருப்பதாக அதில் அவரது உறவினர்கள் கூறியிருந்தனர்.

லோயா மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் முன்பு கூறியது குறித்து அனுஜிடம் கேட்டபோது, '' தற்போது அவர்களுக்கும் எந்த சந்தேகமும் இல்லை'' என கூறினார்.

இந்த கேரவன் செய்தி வெளியான பிறகு, நீதிபதி லோயா மரணம் தொடர்பாக விசாரணை நடந்த வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி ஏபி ஷா கூறியிருந்தார்.

லோயா மர்ம மரண வழக்கை வெள்ளிக்கிழமையன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இது மிக முக்கியப் பிரச்சினை என கருத்து தெரிவித்திருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :