You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதரீதியான கொடுமைக்குள்ளாகும் இந்திய முஸ்லிம் மாணவர்கள்
- எழுதியவர், கீதா பாண்டே,
- பதவி, பிபிசி செய்தியாளர்
பள்ளிக்கூடங்கள் அல்லது விளையாட்டு மைதானங்கள் ஆகியவை குழந்தைகளை தனிமைப்படுத்தும் அல்லது காயமுற செய்யும் அபாயகரமான இடங்களாககூட இருக்கலாம். ஆனால், குழந்தைகளின் தோற்றம், நிறம், உணவு பழக்கவழக்கங்கள், பெண்கள் மீதான வெறுப்பு, ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதான வெறுப்பு மற்றும் சாதி ஆகியவற்றை பயன்படுத்தி சக குழந்தைகளின் மீது சுமையை ஏற்படுத்துகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் சமீபத்தில் வெளிவந்துள்ள புத்தகம் ஒன்றில், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் முஸ்லிம் எதிர்ப்பு மற்றும் அவர்களின் மதரீதியான அடையாளத்துவத்தின் காரணமாக பெரிய பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
12 நகரங்களில் 145 குடும்பங்களிடம் பேசிய நசியா ஏரம் என்ற எழுத்தாளர், டெல்லியிலுள்ள 25 பெரிய பள்ளிகளில் படிக்கும் 100 குழந்தைகளிடமும் "மதரிங் எ முஸ்லீம்" என்ற தனது புத்தகத்திற்கான ஆய்வு பணியின்போது உரையாடினார். அதில் அவர், ஐந்து வயதான முஸ்லிம் குழந்தைகள்கூட மதரீதியான தாக்குதலுக்கு உள்ளாவதாக கூறுகிறார்.
"இதுபோன்ற பெரிய பள்ளிகளில் இது மாதிரியான விடயங்கள் நடக்குமென்று என் ஆராய்ச்சியின்போது அறிந்தபோது அதிர்ச்சி ஏற்பட்டது" என்று பிபிசியிடம் பேசிய ஏரம் கூறினார்."பாகிஸ்தானி அல்லது பயங்கரவாதி என்று தான் அழைக்கப்படுவதாக ஐந்து மற்றும் ஆறு வயதுக்குட்பட்டோர் கூறினால், அதற்கு எப்படி பதிலளிக்க முடியும். மேலும், இதுகுறித்து பள்ளியிடம் எப்படி புகார் அளிப்பீர்கள்?" என்று அவர் கேட்கிறார்.
"இதில் பெரும்பாலானவை வேடிக்கையாக, சிரிக்கவைப்பதற்காக கூறப்பட்டது. இது பாதிப்பில்லாத வேடிக்கை போல தோன்றலாம். ஆனால், உண்மையில் கொடுமைப்படுத்துதல் மற்றும் சித்திரவதைக்கு உள்ளாக்குகிறது."
தனது புத்தகத்திற்காக இவர் நேர்காணல் செய்த குழந்தைகள் தாங்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்விகளை இவரிடம் பகிர்ந்து கொண்டனர்.
- நீங்கள் முஸ்லிமா? நான் முஸ்லிம்களை வெறுக்கிறேன்.
- உங்களுடைய பெற்றோர் வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கிறார்களா?
- உங்களுடைய தந்தை தாலிபன் இயக்கத்தை சேர்ந்தவரா?
- இவர் ஒரு பாகிஸ்தானி.
- இவர் ஒரு தீவிரவாதி.
- அவரை வெறுப்பேற்றினால் வெடிகுண்டை வெடிக்க செய்துவிடுவார்.
இந்த புத்தகம் வெளியிடப்பட்டதிலிருந்து, பள்ளிகளில் நிலவும் மதரீதியான வெறுப்பு மற்றும் பாரபட்சம் பற்றிய உரையாடல் ஆரம்பித்ததுடன், #MotheringAMuslim என்ற ஹாஸ்டேக் ட்விட்டரில் பெரிதளவில் பேசப்பட்டதுடன் பலர் இது சார்ந்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
"எனது மகள் மைராவை முதல் முறையாக கையிலேந்திய உடனேயே அச்சத்துக்கு உள்ளானேன்" என்று கூறும் ஏரம், முஸ்லிம் என்று எளிதாக கண்டறியக் கூடிய பெயரை தனது குழந்தைக்கு வைக்கும்போது கூட தான் வருத்தத்திற்குள்ளானதாக விவரிக்கிறார்.
இந்தியாவில் கூர்மையான மதப் பிளவுகள் நடைபெற்று கொண்டிருந்த காலம் அது. இந்து தேசியவாத கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி மிகப்பெருமளவில் தேர்தல் பிரசாரத்தை நடத்தியது. இது பிரதமர் நரேந்திர மோடியை அதிகாரத்திற்கு வர உதவியது.
இந்து தேசியவாத உணர்வின் எழுச்சி மற்றும் சில தொலைக்காட்சிகள் முஸ்லிம்களை "படையெடுப்பாளர்கள் என்றும் தேசிய விரோதிகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தல்" என்றும் வர்ணிக்கின்ற ஒரு திரிந்த கதைகளை பரப்பின.
"2014 ஆம் ஆண்டிலிருந்து, ஒரு முஸ்லிமாக எனது அடையாளமாக என்னுடைய முகம் உள்ளதுடன் என் மற்ற அடையாளங்கள் இதற்கு இரண்டாம் நிலையாக மாறிவிட்டன" என்று ஏரம் கூறுகிறார்.
விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள், வகுப்பறைகள் மற்றும் பள்ளிப் பேருந்துகள் உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம் குழந்தைகள் தனிமையில் ஒரு மூலையில் தள்ளப்படுவதுடன் பாகிஸ்தானி என்றும் ஐஎஸ், பாக்தாதி மற்றும் தீவிரவாதி என்றும் அழைக்கப்படுவதாக" அவர் மேலும் கூறுகிறார்.
அப்புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள கீழ்க்காணும் கதைகள் விறுவிறுப்பான வாசிப்பை அளிக்கிறது:
ஒரு ஐந்து வயதுப் பெண் குழந்தை,"முஸ்லிம்கள் வந்து எங்களை கொன்றுவிடுவார்கள்" என்று பயமுறுத்தப்படுகிறார். இதில் முரண்பாடு என்னவென்றால் அவருக்கு தானே ஒரு முஸ்லிம் என்பது தெரியாது.
ஐரோப்பாவில் ஒரு பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு அவமானமாகவும் கோபமாகவும் உணரும் ஒரு 10 வயது சிறுவன், ஒரு வகுப்பு தோழனை "நீ என்ன செய்தாய்?" என்று சத்தமாக கேட்கிறார்.
ஒரு 17 வயதான சிறுவன் பயங்கரவாதி அழைக்கப்படுகிறார். அவ்வாறு அழைத்த சிறுவனின் தாயாரை அழைக்கப்பட்ட சிறுவனின் தாயார் தொடர்பு கொண்டு கேட்டபோது, "உங்கள் மகன் என் குழந்தையை குண்டானவன் என்று அழைத்தார்" என்று கூறினாராம்.
இதுபோன்ற சூழ்நிலையை அமெரிக்காவில் மாணவர்கள் எதிர்கொள்வதற்கு "டிரம்ப் விளைவே" காரணமென்று தெரிவிக்கப்படும் நிலையில், இந்தியாவிலுள்ள மாணவர்கள் சந்திக்கும் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரணம் "மோடி விளைவு" என்று அழைக்கலாமா?
மதரீதியான கொடுமைகள் தங்களது வளாகங்களில் நடைபெற்று வருவதை பள்ளிகள் மறுக்கின்றன.
இதுபோன்ற விடயங்களை மற்றவர்களிடம் கொண்டு செல்வதை குழந்தைகள் தவிர்ப்பதாலும் மற்றும் சீரற்ற சம்பவங்கள் என்று எண்ணி பெற்றோர்கள் அவற்றை கண்டுக்கொள்ளாமல் இருப்பதாலும் பெரும்பாலான சம்பவங்கள் பதிவேற்றப்படாமல் இருக்கின்றன.
பல முஸ்லிம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எல்லா நேரங்களிலும் சிறந்த நடத்தையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சுய-தணிக்கையையும் பழக்கிக்கொள்ள வேண்டுமென்றும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
வாதிடாதீர்கள், வெடிகுண்டுகள் அல்லது துப்பாக்கிகள் சார்ந்த கணினி விளையாட்டுகளில் கவனம் செலுத்தாதே, விமான நிலையத்தில் நகைச்சுவை செய்யாதே, வெளியே போகும் போது பாரம்பரிய உடைகளை அணிய வேண்டாம் போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மதரீதியான கொடுமைகளுக்கு எச்சரிக்கை மணியை எழுப்பும் இதுபோன்ற விடயங்களை எதிர்கொள்வதற்குரிய முன்னெடுப்புகளை பெற்றோர்களும், பள்ளிகளும் எடுக்க வேண்டும் என்று ஏரம் கூறுகிறார்.
"இதுபோன்ற பிரச்சனையொன்று நிலவுகிறது என்பதை ஏற்றுக்கொள்வதே இதிலுள்ள முதற்படி. பிறகு அதுசார்ந்த உரையாடலை மேற்கொள்ள வேண்டும். பிரதிவாதத்தை எழுப்புவது பலனளிக்கப்போவதில்லை" என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்