யார் இந்த யோகி ஆதித்யநாத்?

கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து ஐந்தாவது முறையாக யோகி ஆதித்யநாத் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரப் பிரதேசத்தின் மிகப் பிரபலமான அரசியல் தலைவரான யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக வேண்டும் என்பதற்கான ஆதரவு சென்ற ஆண்டு முதலே பரவலாகக் காணப்பட்டது.

இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. கோரக்நாத் ஆலயத்தால் நடத்தப்பட்டுவரும் கல்லூரியின் சில மாணவர்கள், துணி வாங்க கடைக்கு வந்தபோது, கடைக்காரருடன் சச்சரவு ஏற்பட்டு, வார்த்தைகள் தடித்தன. கடைக்காரர் கைத்துப்பாக்கியை எடுத்து மிரட்டினார்.

சம்பவம் நிகழ்ந்த இரண்டு நாட்களுக்கு பிறகு, ஒரு சன்னியாசியின் தலைமையில், கடைக்காரருக்கு எதிராக தீவிரமான போராட்டம் வெடித்ததாக அந்த பகுதியின் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

அந்த சன்னியாசி வேறு யாருமில்லை, யோகி ஆதித்யநாத் தான். இந்த சம்பவத்திற்கு சிறிது காலத்திற்கு முன்பு, அதாவது, 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி தான் "நாத் சம்பிரதாயத்தின்" தலைமை மடமான கோரக்பூர் ஆலயத்தின் தலைமையை ஏற்றுக் கொண்டு, தனது குருவான அவைத்யநாத்திடம் தீக்க்ஷை பெற்றார்.

கோபக் கனல் வீசும் இளைஞராக, கோரக்பூரின் அரசியலில் யோகி ஆதித்யநாத் அதிரடியாக நுழைந்தார்.

கோரக்பூரின் வலிமையான அரசியல் தலைவர்களாக திகழ்ந்த ஹரிஷங்கர் திவாரி மற்றும் வீரேந்திர பிரதாப் ஷாஹியின் பிடி தளர்ந்து வந்த நேரத்தில் யோகி ஆதித்யாநாத்தின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது.

இளைஞர்கள், குறிப்பாக கோரக்பூர் பல்கலைக்கழக மாணவர்கள், "கோபக் கனல் கொண்ட இளைஞரான" ஆதித்ய நாத்தால் ஈர்க்கப்பட்டனர்.

இந்து மகாசபையின் தலைவராகவும் இருந்த ஆதித்யநாத், மஹந்த் திக்விஜயநாத்துடன் இணைந்து பணியாற்றினார்.

தற்போது, "இந்துத்துவாவுடன் இணைத்தே ஆதித்யநாத் பார்க்கப்படுகிறார். தில்லி சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பிகாரிலும் தோல்வியை தழுவிய பாரதீய ஜனதா கட்சி, உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தல் குறித்து கவலைப்பட்டது. எனவே, ஆதித்யநாத்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பது பற்றிய கருத்து வேறுபாடுகள் நிலவிவந்தன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோரக்பூர் ஆலயத்தில் நடைபெற்ற இந்து மகாசபை கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்-இன் மூத்த தலைவர்கள், ஆதித்யநாத்தை முதலமைச்சராக்குவது என்று உறுதிபூண்டனர்.

"1992 ஆம் ஆண்டு ஒருமுறை சரியான பதிலடி கொடுத்தோம், தற்போது மத்தியில் நமது ஆட்சி தான் இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்தாலும், மாயாவதி மற்றும் அகிலேஷின் ஆட்சி அமைந்தால் அயோத்தியில் ராமர் ஆலயம் கட்ட முடியாது. எனவே, நமது இலட்சியம் நிறைவேற வேண்டுமென்றால், ஆதித்யநாத் முதலமைச்சராக வரவேண்டும்," என்று அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

உத்தராகண்ட் மாநிலம், கட்வால் கிராமத்தில் பிறந்த அஜய் சிங் பிஷ்ட், யோகி ஆதித்யநாத் ஆக மாறுவதற்கு முன்னதான அவரது வாழ்க்கை குறித்து அதிக தகவல்கள் இல்லை. ஹேம்வதி நந்தன் பகுகுணா பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்கும் ஆதித்யநாத்தின் குடும்பத்தினர் போக்குவரத்து தொடர்பான தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மிகவும் பிரசித்தி பெற்ற கோரக்பூர் ஆலயம், 52 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மகர சங்கராந்தி அன்று, எல்லா மதத்தையும் சேர்ந்த மக்களும் அங்கு வந்து பொங்கல் படைப்பார்கள். மகந்த் திக்விஜயசிங்கின் காலத்தில், கோரக்நாத் ஆலயம், அரசியலின் முக்கிய மையமாக மாறியது, அவருக்கு பிறகு மஹந்த் அவைத்யநாத் அதை முன்னெடுத்துச் சென்றார்.

மக்களிடையே நேரடியாக தொடர்பு கொள்வது தான் ஆதித்யநாத்தின் சிறப்பம்சம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்