திண்டுக்கல்: தாயின் உடலை அடக்கம் செய்ய பிச்சை எடுத்த சிறுவர்கள்

தாயின் உடலை அடக்கம் செய்ய பிச்சை எடுத்த சிறுவர்கள்

தமிழ்நாட்டின் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், உயிரிழந்த தாயின் உடலை அடக்கம் செய்வதற்காக, மருத்துவமனையிலேயே சிறுவர்கள் பிச்சை எடுத்த சம்பவம், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது மேட்டுப்பட்டி கிராமம். இக்கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு மோகன்ராஜ் (15), வேல்முருகன் (13) காளீஸ்வரி (8) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் காளியப்பன் சில வருடங்களுக்கு முன்பு உயிர் இழந்தார். விஜயா 3 குழந்தைகளை வளர்த்து வந்தார். விஜயாவிற்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் உடல்நிலை மோசமடைந்ததால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் விஜயா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த காணொளி:

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

விஜயாவின் உறவினர்கள் யாரும் மருத்துவமனையில் வந்து பார்க்க வரவில்லை. சிறுவர்களான இரண்டு மகன்கள் மட்டுமே தாயின் உடனிருந்து கவனித்து வந்தனர்;

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இரு தினங்களுக்கு முன்பு விஜயா உயிரிழந்தார். உறவினர்கள் யாரும் வராத நிலையில் தாயின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் சிறுவர்கள் தடுமாறியதாக கூறப்படுகிறது.

தாயின் உடலை அடக்கம் செய்ய பிச்சை எடுத்த சிறுவர்கள்

பின்னர் அரசு மருத்துவமனையில் விஜயா அனுமதிக்கபட்டிருந்த வார்டில் உள்ள பிற நோயாளிகளிடம் சிறுவர்கள் பிச்சை எடுத்தனர். அவர்கள் அளித்த பணத்தை கொண்டு தாயின் உடலை அடக்கம் செய்ய அவர்கள் முயற்சி எடுத்ததாகக் கூறப்படுகிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிறுவர்கள் பிச்சை எடுத்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையின் இணை இயக்குநர் மாலதியிடம் கேட்டபோது, தற்போது சிறுவர்கள் வசித்து வரும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உறவினர்கள் யாரும் இல்லாததால் நாகர்கோவிலில் உள்ள சிறுவர்களது சித்தப்பாவிற்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், அவர் வருவதற்குள் சிறுவர்கள் வார்டில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு வாங்கியுள்ளதாகவும் கூறினார்.

சட்டவிதிகளுக்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு 8 ஆம் தேதி, அதாவது விஜயா உயிரிழந்த அடுத்த நாள் காலை சிறுவர்களது உறவினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் உள்ள மின் தகன மயானத்தில் இலவசமாக இறுதிச் சடங்கு செய்ய மருத்துவமனை நிர்வாகம் உதவி செய்ததாகவும் மாலதி தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: