பல ஆண்டு தாமதமாக புகார் கொடுத்தால் வழக்கு பதியலாமா? என்ன சொல்கிறது சட்டம்?

    • எழுதியவர், விக்னேஷ்.அ
    • பதவி, பிபிசி

தற்போது 75 வயதாகும் இந்தி நடிகர் ஜிதேந்திராவுக்கு எதிராக சுமார் ஐந்து தசாப்தங்களுக்கு பிறகு அவரது உறவினரான பெண் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ததாக இமாச்சல பிரதேச காவல்துறையிடம் புகார் கூறியுள்ளார்.

அந்த சம்பவம் நடந்தது 1971ஆம் ஆண்டு என்றும் அப்போது தமக்கு வயது 18, ஜிதேந்திராவுக்கு வயது 28 என்றும் அந்தப் பெண் கூறியுள்ளதை நடிகரின் வழக்கறிஞர் மறுத்துள்ளார். ஆனபோதிலும், குற்றம் சாட்டப்படும் சம்பவம் நடந்து இத்தனை ஆண்டுகள் ஆனபின் புகார் தெரிவிக்கலாமா, அவ்வாறு தெரிவிக்கப்படும் புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்குத் தொடுக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

இதுகுறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கியத் தகவல்களை தொகுத்து வழங்குகிறோம்.

  • இந்தியன் லிமிடேஷன் ஆக்ட் எனப்படும் வரைமுறைச் சட்டத்தில் குற்றம் நடந்ததாகப் புகார் தெரிவிக்கவோ, வழக்கு பதிவு செய்யவோ காலவரையறை எதுவும் குறிப்பிடப்படவில்லை.
  • குற்றச் சம்பவம் நடந்து பல நாட்கள் ஆனபின்னரும் ஒருவர் தமக்குத் தீங்கிழைத்தவர் மீது புகார் கூறவில்லையெனில், அவர் அச்செயலை மன்னித்து விட்டதாகவே கருதப்படும். எனவே, ஒருவர் புகார் தெரிவிக்க கால தாமதமானால், அது சட்டப்படி குற்றம் என்பது இத்தனை நாட்களாக அவருக்குத் தெரியாது என்பதையோ, தாமதத்திற்கான காரணத்தையோ குற்றம் சாட்டுபவர் தெளிவுபடுத்துவது நல்லது. அவ்வாறு நிரூபிக்காவிடில், தெரிந்தே தாமதப்படுத்தியதாக கருதப்படும்.
  • அபராதம் மட்டுமே விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்கு ஆறு மாதம், ஓராண்டுக்கும் குறைவான தண்டனைக் காலம் உடைய குற்றங்களுக்கு ஓர் ஆண்டு மற்றும் ஓராண்டில் இருந்து மூன்று ஆண்டுகள் வரை தண்டனைக் காலம் உடைய குற்றங்களுக்கு மூன்று ஆண்டுகள் ஆகியன வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான கால வரம்பு என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 468 கூறுகிறது.
  • குற்றம் நடந்த தேதி அல்லது குற்றம் நடந்தது என்று பாதிக்கப்பட்டவருக்கோ, காவல்துறை அதிகாரிக்கோ தெரிந்த நாள் முதல் அந்த காலவரம்பு கணக்கிடப்படும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 469 கூறுகிறது.
  • ஒரு வேளை அந்தக் குற்றம் செய்தது யார் என்று பாதிக்கப்பட்டவருக்கு தெரியாவிட்டால் அது யார் என்று பாதிக்கப்பட்டவருக்கோ, காவல்துறை அதிகாரிக்கோ தெரிந்த நாள் முதல் அந்த காலவரம்பு கணக்கிடப்படும் என்றும் பிரிவு 469 கூறுகிறது.

தண்டனைக் காலம் மூன்றாண்டாக இருந்தால் என்ன நடைமுறை?

பெரும்பாலும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனைக் காலம் உள்ள குற்றங்களுக்கு, தாமதமாக புகார் கொடுத்தாலும் அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது, எனினும் அந்த இடைப்பட்ட காலத்தில் புகார் பதிவு செய்வதில் இருந்து தொடர்ச்சியான அச்சுறுத்தல் இருந்திருக்க வேண்டும் என்று கூறினார் பிபிசி தமிழிடம் பேசிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பெனோ பென்சிகர்.

மிகவும் தாமதமாக அளிக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. அதன் காரணம் அப்புகாரில் தீய நோக்கங்கள் இருக்கக்கூடும். இத்தகைய நேரங்களில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்கு, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21இல் வழங்கப்பட்டுள்ள தனிமனித வாழ்க்கை மற்றும் சுதந்திரத்துக்கான உரிமைகளும் கணக்கில் கொள்ளப்படும் என்று கூறினார் பெனோ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :