You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
40 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி தற்போது புகார் அளிக்கமுடியுமா?
"என்னை தவறாக நடத்துகிறார்கள் என்றோ, பெரியவர்களிடம் அதுபற்றி புகார் சொல்லவேண்டும் என்றோ எனக்கு தெரியவில்லை. ஆனால், இப்படி பாதிக்கப்பட்ட பெண் நான் மட்டும் இல்லை"
"நான் சிறுமியாக இருக்கும்போது என் சகோதரியின் கணவர் என்னிடம் பாலியல்ரீதியாக தவறாக நடந்துக்கொண்டார்" என்பதை சொல்வது 53 வயது பூர்ணிமா கோவிந்தராஜுலு.
"ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, இருளில் இருந்து திடுக்கிட்டு எழச்செய்யும் அவரின் சீண்டல்கள். நான் பயத்தில் உறைந்து போயிருப்பேன்."
பூர்ணிமா change.org என்ற வலைதளத்தில் தனது அனுபவத்தை பதிவிட்டிருப்பதோடு அதை மனுவாகவும் அவர் கொடுத்துள்ளார்.
"வெட்கத்தாலும், பயத்தாலும் என்னுடைய பால்ய காலங்கள் கழிந்தன, இந்தக் கொடுமை 13 வயது வரை தொடர்ந்தது" என்று வருந்துகிறார் பூர்ணிமா.
"வளர்ந்த பிறகுதான் எனக்கு என்ன நடந்தது, நான் தவறாக நடத்தப்பட்டிருக்கிறேன் என்பதை புரிந்துக்கொண்டேன். நான் மட்டுமே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவள் இல்லை என்பதை நாளடைவில் தெரிந்துக் கொண்டபோது அது அதிர்ச்சியாக இருந்தது" என்று மேலும் கூறினார்.
பாலியல் வன்கொடுமை
முதலில் இதுபற்றி அச்சத்துடன் வெளியே யாரிடமும் பேசாமல் பேசாமடந்தையாக இருந்த பூர்ணிமா, பல ஆண்டுகள் கழித்து ஒரு உணர்ச்சிப்பூர்வமான தருணத்தில் இதை வெளியிட்டுவிட்டார். குடும்பத்தில் மற்றொருவரும் இதே போன்ற பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது அப்போதுதான் தெரியவந்திருக்கிறது.
அவரையும் தன்னுடைய சகோதரியின் கணவர்தான் தவறாக அணுகியிருக்கிறார் என்று தெரிந்து கொண்டதும் அதிர்ச்சியடைந்தார் பூர்ணிமா. வேறு சிறுமிகளையும் இதேபோல் அந்த உறவினரே தவறாக நடத்தியிருப்பாரோ என்று அவருக்கு சந்தேகம் எழுந்தது.
எனவே, தன்னிடம் தவறாக நடந்துக் கொண்ட உறவினரின் மீது புகார் அளிக்க முடிவு செய்தார் பூர்ணிமா.
காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற பூர்ணிமாவுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. சிறுவயதில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு பல ஆண்டுகள் கழித்து தற்போது புகாரளிக்க முடியுமா? அதை காவல்துறை ஏற்றுக் கொள்ளலாமா? சட்டத்தின்கீழ் அதற்கு வழியில்லை என்பதால் புகாரை போலிசார் பதிவு செய்யவில்லை.
தவறிழைத்த நபருக்கு தண்டனை பெற்றுத் தர முடியாமல் போனது பூர்ணிமாவுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. தன்னைப் போன்றே பிற சிறுமிகளும் பாதிக்கப்படுவதை தடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் தொடர்ந்தது.
வலைதளத்தை உருவாக்க காரணம் என்ன?
change.org என்ற பெயரில் வலைதளம் ஒன்றைத் தொடங்கிய பூர்ணிமா தன்னுடைய அனுபவத்தை அதை எழுதினார். அந்த சமயத்தில் ஏமாற்றத்துடனும் ஏதும் செய்ய இயலா கையறு நிலையில் இருந்த்தாக அவர் குறிப்பிடுகிறார். ஆனால் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள பூர்ணிமா தயாராக இல்லை.
இந்த விவகாரத்தை அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்ல விரும்பினார். குழந்தைகள் தாங்கள் சந்திக்கும் பாலியல் துஷ்பிரயோகம் பற்றி புகார் அளிக்க வேண்டும், ஆனால் உண்மையில் அவ்வாறு நடப்பதில்லை என்று பூர்ணிமா கூறுகிறார்.
"என்னை தவறாக நடத்துகிறார்கள் என்றோ, பெரியவர்களிடம் அதுபற்றி புகார் சொல்லவேண்டும் என்றோ எனக்கு தெரியவில்லை. ஆனால் இப்படி பாதிக்கப்பட்ட பெண் நான் மட்டும் இல்லை" என்று சொல்கிறார் பூர்ணிமா.
"தங்களது குழந்தை பருவத்தில் பாலியல் துஷ்பிரயோகங்களை எதிர்கொண்ட அனைத்து பெண்களின் சார்பில்" தான் இதுபோன்ற முன்முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக பூர்ணிமா கூறுகிறார்.
"இத்தனை ஆண்டுகளாக பேசாமடந்தையாக இருந்தாலும், உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்த நான் இன்று வெளிப்படையாக பேசத் தொடங்கிவிட்டேன். ஆனால் எத்தனை எத்தனை பெண்கள் வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள் குமைந்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?" என்று கேட்கிறார் பூர்ணிமா.
தனது மனுவை அரசு பரிசீலிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் பூர்ணிமா, இதுபற்றி அரசு சட்டங்களை இயற்றவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். சிறுவயதில் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களை வயது வந்தவர்ளும் பதிவு செய்யலாம் என்று சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
சட்டம் என்ன சொல்கிறது?
பாலியல் வன்முறை மற்றும் பாலியல் சுரண்டல்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக அரசு, 2012-ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தை (Protection of Children from Sexual Offences Act (POCSO Act)) கொண்டுவந்தது.
இந்த சட்டத்தின்படி ஒன்று முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமைகள் பற்றி புகார் அளிக்கமுடியும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் போக்சோ சட்டத்தின்கீழ் புகார் அளிக்கமுடியாது.
இந்த சட்டத்தின்படி குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கும் அது தொடர்பான புகார்களை கண்காணிக்கும் பொறுப்பு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையத்திடம் (NCPCR) ஒப்படைக்கப்பட்டது.
பொதுவாக உடலுறவை மட்டுமே பாலியல் துன்புறுத்தலுடன் தொடர்புபடுத்திப் பார்க்கின்றனர். ஆனால் அது சரியல்ல. 2012ஆம் ஆண்டின், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்படி, குழந்தைகளை பாலியல் ரீதியாக தொடுவது, துன்புறுத்துவது, சீண்டுவது, அவர்கள் முன் ஆபாசமாக நடந்துக்கொள்வது, ஆபாசப் படங்களை காட்டுவது, ஆபாசமாக பேசுவது உட்பட பல செயல்கள் குற்றங்கள்.
இதுபோன்ற பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் தொடர்பாக புகார் அளிப்பது, அதை நிரூபிப்பது போன்றவை வழக்கமான புகார்களில் இருந்து சில விதங்களில் மாறுபட்ட முறையில் கையாளவேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது. ஏனெனில் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டதை நிரூபிப்பது மிகப் பெரிய சவால் ஆகும்.
குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது அவர்களின் மழலையையும், குழந்தைத்தன்மையையும் மாசுபடுத்தி, மாறா வடுக்களாக மனதில் பதிந்துவிடுகிறது.
சிறுவயதில் நடைபெற்ற பாலியல் கொடுமை தொடர்பாக பெரியவர்களான பின் புகாரளிப்பது சட்டத்தை தவறாக பயன்படுத்துவது என்ற பொருளை கொடுக்கிறதா?
இந்த கேள்வியை குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையத்தின் (NCPCR) தலைவர் ஸ்துதி கக்கட் முன் வைத்தோம்.
பாலியல் ரீதியான துன்புறுத்தல் என்ன என்பது சிறுவயதில் அவர்களுக்கு தெளிவாக தெரியாது. அப்போது அவர்கள் சொல்வதை பெரியவர்களால் பகுத்து அறிந்து அதற்கேற்ற நடவடிக்கை எடுக்கமுடியும்.
ஆனால் பெரியவர்களாகி விவரம் தெரிந்த பிறகு பாலியல் ரீதியான கொடுமைகள் துன்புறுத்தல்கள் பற்றிய அறிவு ஏற்பட்ட பிறகு, சிறுவயது நிகழ்ச்சிகள் பற்றி புகார் அளிக்கும்போது அது தவறாகவும் இருக்கலாம்.
காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்கும் நடவடிக்கைகளாக புகார் மாறிவிடக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று ஸ்துதி விரும்பினாலும், அது தங்கள் எல்லைக்கு உட்பட்டதில்லை என்று அவர் கூறுகிறார்.
தன்னை பூர்ணிமா சந்தித்ததாக சொல்லும் ஸ்துதி, சட்டத்தின்படி 18 வயதை தாண்டிவிட்ட அவருக்கு தன்னால் உதவி செய்யமுடியவில்லை என்று சொல்கிறார்.
அரசின் கருத்து என்ன?
பூர்ணிமாவின் மனுவிற்கு பதிலளித்த மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, பூர்ணிமாவின் உணர்வுகளை மதிப்பதாக கூறியிருக்கிறார்.
தனது அமைச்சகம் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரமுடியுமா என்பதை பூர்ணிமாவின் மனு எழுப்பியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
பால்ய காலத்தில் எதிர்கொண்ட பாலியல் தாக்குதல் குறித்து புகார் அளிப்பதற்கான அதிகபட்ட வயது வரம்பை நீக்கலாம் என்று சட்டத் திருத்தம் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி தனது பதில் கடித்த்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையத்திற்கு (NCPCR) கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேனகா காந்தியின் இந்த முயற்சிக்கு காங்கிரஸின் சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் செய்தியில் பூர்ணிமாவின் செய்தியை மறுபதிவிட்டு அவர் ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்