You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்து சமய அறநிலையைத் துறைக்கு எதிரான பிரசாரம் ஏன்?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தையடுத்து இந்து சமய அறநிலைய ஆட்சித் துறைக்கு எதிரான கருத்துகளை ஒரு பிரிவினர் சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பதிவுசெய்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 2ஆம் தேதியன்று இரவு சுமார் 10 மணியளவில் மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுர வாசலை ஒட்டியுள்ள கடை ஒன்றில் திடீரெனத் தீ பிடித்தது. இந்த தீ விபத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாயின. வசந்தராயர் மண்டபம் இடிந்து விழுந்தது.
அறநிலையத் துறை எதிராக திரும்பிய கண்டனங்கள்
தீ அணைக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தபோதே கோவில் முன்பாகக் கூடிய இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அறநிலையத் துறை கோவிலைவிட்டு வெளியேற வேண்டுமெனக் குரல் எழுப்பினர். "பாரத் மாதா கீ ஜே" என்ற கோஷங்களையும் எழுப்பினர்.
இதற்கு அடுத்த நாள், கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராக சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. முகநூலில் அறமில்லாத துறை என்ற பெயரில் பக்கங்கள் துவக்கப்பட்டு, அறநிலையத் துறைக்கு எதிரான கருத்துகள் பதியப்பட்டன.
இதற்கிடையில் கோவிலில் தீயால் பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்க்க வந்த பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, அறநிலையத் துறையின் வசமுள்ள கோவில்கள் குரங்கு கையில் சிக்கிய பூமாலையைப் போல இருக்கிறது என்று விமர்சனம் செய்தார்.
இதற்கிடையில் திங்கட்கிழமையன்று சில நாளிதழ்களில், இந்து அறநிலையத் துறை கோவிலை மிக மோசமாகப் பராமரித்த காரணத்தால்தான் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதாக புகார் தெரிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அரசுக்கு அறிக்கை கொடுத்ததாக சில நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின.
ஆனால், அப்படி ஓர் அறிக்கையை மாவட்ட ஆட்சியர் அளிக்கவில்லையென மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
கோயில்களை மடாதிபதிகள் வசம் கொண்டு செல்லும் முயற்சி
"தமிழ்நாட்டில் கோவிலும் கோவில் சொத்துகளும் நீண்ட காலமாகவே பொதுச்சொத்துக்கள்தான். ஆபிரஹாமிய மதங்களைப்போல இந்து மதம் அமைப்பு ரீதியான மதம் அல்ல. இந்து சமய அறநிலையத் துறை போன்ற அமைப்புகள்தான் அதை அமைப்பு ரீதியான மதமாக்குகின்றன. தமிழகத்தில் புராதன காலத்திலிருந்தே கோவில்கள் மீது அரசுக்கு கட்டுப்பாடு உண்டு. வட நாட்டில் இருப்பதைபோல மடாதிபதிகள் வசம் கோவில்களை கொண்டுசெல்ல முயல்கிறார்கள். இந்து அமைப்புகளின் அந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்க வேண்டும்" என்கிறார் தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஆழி செந்தில்நாதன்.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 17 சமண சமய கோவில்கள் உட்பட தற்போது ஒட்டுமொத்தமாக 38 ஆயிரத்து 635 கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்கள், மடங்களுக்குச் சொந்தமாக சுமார் 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றையும் அறநிலையத் துறையே பராமரிக்கிறது.
அறங்காவலர்களை நியமித்து அரசு நிர்வகிப்பது
"எல்லாவற்றையும் அரசு, மையப்படுத்தப்பட்ட ஒரு நிர்வாகத்தின் கீழே வைத்திருக்க நினைப்பது தவறு. இவ்வளவு கோவில்களை எதற்காக அரசு நிர்வகிக்க வேண்டும்? அவற்றை உள்ளூர் மட்டத்தில் அறங்காவலர்களை நியமித்து அரசு நிர்வகிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் மக்கள் தங்களுக்கு உள்ள குறைகளைச் சொல்ல முடியும். தற்போதுள்ள செயல் அலுவலர்களிடம் பேசக்கூட முடிவதில்லை" என்கிறார் பதிப்பாளரும் எழுத்தாளருமான பத்ரி சேஷாத்ரி.
கோயில்களை பராமரிக்கும் வரலாறு
தமிழ்நாட்டில் கோவில்களை அரசு கட்டுப்படுத்துவது நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. கிழக்கிந்திய நிறுவனம் சென்னை பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலகட்டத்திலேயே, 1817ல் முதன் முதலில் மெட்ராஸ் நிலைக் கொடைகள் மற்றும் வாரிசுஇன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் உருவாக்கப்பட்டு, கோவில்களின் மீது சிறிய அளவில் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா வந்தபோது 1863ல் இதற்கென மற்றொரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு, தமிழகத்தில் நீதிக் கட்சியின் ஆட்சி நடைபெற்றபோது மெட்ராஸ் இந்து சமய அறக்கொடைச் சட்டம் 1927ல் நிறைவேற்றப்பட்டது.
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1951ல் ஒரு சட்டமும் அதை மேம்படுத்தி 1959ல் ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட்டது. தற்போது 1959ஆம் வருட அறநிலையத் துறை சட்டங்களின்படியே இந்துக் கோவில்கள் நிர்வகிக்கப்பட்டுவருகின்றன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்