You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புற்றுநோய் தினம்: தயக்கத்தைப் போக்கும் தலைமுடி தானம்
- எழுதியவர், மரிய மைக்கேல்
- பதவி, பிபிசி தமிழ்
இன்று உலக புற்றுநோய் தினம். உயிர்க்கொல்லி நோயாக இருக்கும், புற்றுநோய் பற்றிய விழி்ப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக இது கடைபிடிக்கப்படுகிறது.
புற்றுநோயாளிகளுக்கு பல்வேறு வகைகளில் உதவ முடியும். அதில் ஒன்றுதான் தலைமுடி தானம்.
சென்னை அடையாறிலுள்ள புற்றுநோய் மையத்தில் சைக்கோ ஆன்காலஜி மற்றும் ஆர்டிசிடி துறையிலுள்ள மருத்துவர் சுரேந்திரன் வீரய்யா தலைமுடி தானத்தை ஒருங்கிணைத்து புற்றுநோயாளிகளுக்கு உதவி வருகிறார்.
தலைமுடியை தானமாக பெற்று உதவி வருவது பற்றி அவரிடம் கேட்டோம். புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும்போது, முடி உதிர்வது இயல்பாக இருக்கும். குறிப்பாக, கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும்போது முடி அதிகமாகவே உதிர்ந்துவிடும்.
அப்போது அந்த நோயாளிகள் சமூகத்திலுள்ளோரை சந்திக்க தயங்குவார்கள். மன உளைச்சல் அதிகரிக்கிறது. இதனை கையாள எண்ணி, தலைமுடியை கொண்டு "விக்" செய்து கொடுத்தால் இந்தப் பிரச்சனையில் இருந்து எளிதாக வெளியே வரலாமே என்று இந்த முயற்சியை ஆரம்பித்தாக தெரிவிக்கிறார் மருத்துவர் சுரேந்திரன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் டபிள்யூ.சி.சி பெண்கள் கல்லூரியின் ஒரு துறை மாணவியர் தங்களின் தலைமுடியை தானம் செய்தனர். அந்த முயற்சியில் இருந்து புற்றுநோயாளிகளுக்கு உதவும் இந்த முயற்சி அனைவருக்கும் தெரிய தொடங்கியது என்று அவர் கூறினார்.
அவ்வாறு தானம் செய்யப்படும் தலைமுடியை அப்படியே பயன்படுத்த முடியாது. அதனை குறிப்பிட்ட வழிமுறையில் பக்குவப்படுத்தி விக் செய்ய வேண்டும். அதற்கு செலவு அதிகமாகிறது.
இதற்கு உதவி செய்ய செரியன் பவுண்டேன் ராஸ் கேர் இன்டர் நேஷனல் குழுவினர் உதவ முன்வந்ததாகவும், இதற்கு தேவைப்பட்ட நிதி ஆதரவுக்கு கிரீன் டிரென்ட்ஸ் மற்றும் டபிள்யூசிசி கல்லூரி உதவியதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிக அளவில் தலைமுடி தானமாகக் கிடைத்தாலும், அதை விக்-காக மாற்றுவது பெரும் சவாலாக உள்ளதாக மருத்துவர் தெரிவித்தார். இந்தியாவில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களும் இந்த விக்கைப் பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கான விலை 20 ஆயிரம் ரூபாய். இவ்வளவு தொகை கொடுத்து விக் வாங்குவது ஏழை நோயாளிகளுக்கு சுலபமல்ல.
வெளிநாட்டில் இருந்து தலைமுடி தானம்
துபாயில் உள்ள பிரினி மேத்யூ என்பவர் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவர். அவர் துபாயில் இருந்து தலைமுடியை பெருமளவு திரட்டி அதிகமாக அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார் என்று சுந்தர்ராஜன் குறிப்பிட்டார்.
ஒரு புற்றுநோயாளி தன்னுடைய சிகிச்சையை முடித்துவிட்டு, 6 மாதங்கள் வரை அந்த விக்-கை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் பின்னர் அவர்களுக்கு முடி தானாக வளர ஆரம்பித்துவிடும். பிறகு விக் தேவைப்படாது.
எனவே, அதனை எங்களிடம் கொடுத்து விடுவர். அதனை மீண்டும் சீரமைத்து அடுத்த நோயாளிக்கு வழங்கி வருகிறோம். இதனை இலவசமாக செய்து வருகிறோம். ரூ.20,000 வழங்க முடியாத ஏழைகளுக்கு இந்த சேவையை வழங்கி வருகிறோம் என்று அவர் கூறினார்.
தன்னுடைய சொந்த முடியை வெட்டி இவ்வாறு தானமாக வழங்கியவர்களிடமும் பேசினோம்.
தொலைக்காட்சியில் வந்த விளம்பரத்தை பார்த்து தலைமுடியை தானம் செய்ய தொடங்கியதாக குறிப்பிடுகிறார் சென்னையை சேர்ந்த இல்லதரசி வி.சிந்து.
ஸ்டைலுக்காக முடி வளர்க்க தொடங்கி, பின்னர், புற்றுநோய்க்கு தலைமுடி தானம் செய்வதை அறிய வந்து, இவ்வாறு தானம் செய்ய தொடங்கியதாக கூறுகிறார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற 32 வயதான சபரி ராஜகோபாலன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :