You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பல ஆண்களின் உயிரைக் காப்பாற்ற விரைப் புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய மருந்து
ப்ரோஸ்டேட் எனப்படும் விரைப்புற்று நோயால் பாதிக்கப்படும் பல ஆண்களின் உயிரிழப்பைத் தடுத்து, மேலும் பல ஆண்டுகள் வாழ வழி செய்யும் வகையில், புதிய மருந்து ஒன்று சிறந்த பலனைத் தருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ப்ரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மருந்து ஒன்று, முன்னர் எண்ணியதை விட அதிக உயிர்களை காப்பாற்றியிருப்பது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
நீண்டகால ஹார்மோன் சிகிச்சை தொடங்கவிருந்த ப்ரோஸ்டேட் புற்றுநோயாளிகளுக்கு கூடுதல் சிகிச்சையாக வழங்கப்பட்ட அபிரட்டெரோன் மருந்தை சோதனை செய்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
'நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆப் மெடிசின்' சஞ்சிகையில் வெளியான முடிவுகள்படி, அபிரட்டெரோன் அதிக உயிர்களை காப்பாற்ற உதவியுள்ளது.
"ப்ரோஸ்டேட் புற்றுநோய் மருந்து சோதனையில் நான் கண்டுள்ள மிகவும் தலைசிறந்த முடிவுகள் இவை. தொழில்முறை வாழ்க்கையில் ஒரேயொரு முறை கிடைத்திருக்கும் சிறந்த உணர்வு" என்று இந்த ஆய்வை வழிநடத்திய பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் நிக்கோலாஸ் ஜேம்ஸ் தெரிவித்திருக்கிறார்.
"வயதுவந்தோரில் புற்றுநோய்க்கான மருந்து சோதனையில், கணிசமான அளவு மரணங்களை குறைந்திருக்கும் மருந்துகளில் ஒன்று இது" என்று அவர் தெரிவிக்கிறார்.
"அதிகமானோருக்கு பயன்"
ஸைதிகா என்றும் அறியப்படும் அபிரட்டெரோன், புற்றுநோய் செல்களை கொன்றுவிடுகின்ற கீமோதெரபி போல் அல்லாமல், அதிக டெஸ்டோஸ்டிரோன் ப்ரோஸ்டேட் சுரப்பியை சென்றடைவதை தடுத்து, கட்டியின் வளர்ச்சியை இது கட்டுப்படுத்துகிறது.
இந்த மருந்து சோதனை சுமார் இரண்டாயிரம் நோயாளிகளிடம் நடத்தப்பட்டது.
பாதி ஆண்களுக்கு ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறருக்கு ஹார்மோன் மற்றும் அபிரட்டெரோன் சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்த மருந்து சோதனையில் ஈடுபட்ட மொத்தம் ஆயிரத்து 917 நோயாளிகளில், ஹார்மோன் சிகிச்சை மட்டுமே பெற்றவர்களில் 262 பேர் இறந்த நிலையில், ஹார்மோன் மற்றும் அபிரட்டெரோன் சிகிச்சை வழங்கப்பட்டோரில் 184 பேர் தான் இறந்திருந்தனர்.
புற்றுநோய் பரவிய சில மனிதருக்கு சிகிச்சை அளிக்க அபிரட்டெரோன் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எமக்கு கிடைத்துள்ள முடிவுகள் இன்னும் அதிகமானோர் பயன்பெற முடியும் என்பதை காட்டுகிறது" என்று பேராசிரியர் ஜேம்ஸ் தெரிவித்திருக்கிறார்.
ஒவ்வோர் ஆண்டும் ஐக்கிய ராஜ்ஜியத்தில் சுமார் 46 ஆயிரத்து 500 பேருக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இந்த நோயால் சுமார் 11 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.
இந்த ஆய்வின் மூலம் கிடைத்திருக்கிற முடிவுகள் ப்ரோஸ்ரேட் புற்றுநோய்க்கு வழங்கப்படும் சிகிச்சையில் மாற்றங்களை கொண்டு வரலாம். முதலில் எண்ணியதைவிட அதிக ப்ரோஸ்ரேட் புற்றுநோயாளிகள் அபிரட்டெரோன் மூலம் உதவி பெறலாம்" என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் புற்றுநோய் ஆய்வகத்தின் தலைமை செயலதிகாரி சர் ஹர்பால் குமார் கூறியுள்ளார்.
இந்த மருந்து சோதனையின் முடிவுகள் சிக்காகோவில் நடைபெற்ற '2017 ஏஎஸ்சிஒ' ஆண்டுக்கூட்டத்தில் வழங்கப்பட்டு, 'நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆப் மெடிசின்' சஞ்சிகையில் வெளியானது.
அபிரட்டெரோன் சிகிச்சையை இங்கிலாந்திலுள்ள ப்ரோஸ்ரேட் புற்றுநோயாளிகள் மிக விரைவிலேயே பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மார்ச் மாதம் தெரிவிக்கப்பட்டது.
புற்றுநோயை கண்டறிய புதிய வழி
இந்த செய்திகளையும் நீங்கள் விரும்பலாம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்