You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புற்றுநோயைக் கண்டறிய நவீன பிரா
மெக்ஸிகோவில் உள்ள பதின்ம வயதினர் ஒருவர், மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் பிராவைக் கண்டுபிடித்துள்ளார்.
ஆனால், அவ்வாறு பிராவின் மூலம் புற்றுநோயைக் கண்டறிவது சாத்தியமா?
முடியும் என்றால் எப்படி ?
பிராவை உருவாக்கியுள்ள 18 வயதுடைய ஜூலியன் ரியோஸ் கன்டு, மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளைக் கண்டறியும் ஆரம்ப கால எச்சரிக்கை அமைப்புமுறையாக இது இருக்கும் என்கிறார்.
ஜூலியன் மற்றும் அவருடைய மூன்று நண்பர்கள் இணைந்து கூட்டாக நிறுவனம் ஒன்றை உருவாக்கினார்கள். அந்நிறுவனத்தின் தயாரிப்பு தான் ஈவா பிரா. தற்போது, முன்மாதிரி சோதனை நிலையில் உள்ளது.
ஆனால், பிராவை சோதிப்பதற்கு போதுமான நிதியை ஜூலியன் குழுவினர் திரட்டியுள்ளனர்.
மேலும், இந்த வாரம் நடைபெற்ற உலகளாவிய மாணவ தொழில் முனைவர் விருதுகள் நிகழ்வில் முதல் பரிசை இவர்கள் வென்றுள்ளனர்.
உலகம் முழுவதும் வந்திருந்த இளம் தொழில் முனைவர்களை ஜூலியன் குழுவினரின் நிறுவனமான ஹிகியா டெக்னாலாஜிஸ் முந்தி , இந்த யோசனையை அமல்படுத்த 20,000 டாலர்கள் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புற்று நோயை கண்டறியும் இந்த பிரா எவ்வாறு வேலை செய்கிறது ?
அதிகரித்த ரத்த ஓட்டம் காரணமாக புற்று நோய் கட்டிகள் தோலை வேறு ஓர் வெப்பநிலைக்கு கொண்டு செல்கின்றன. ஈவா பிராவில் உள்ள பயோ சென்சார்கள் வெப்ப நிலைகளை அளவீடு செய்வது மட்டுமின்றி, செயலிக்குள் அதனை பதிவு செய்து மாற்றங்கள் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பயன்பாட்டாளரை அது எச்சரிக்கிறது.
இந்த பிராவை அணியும் பெண்கள் துல்லியமான முடிவுகளை பெற ஒரு வாரத்திற்கு சுமார் 60 முதல் 90 நிமிடங்கள் வரை இதனை அணிய வேண்டும்.
புற்று நோயை கண்டறியும் இந்த பிரா உண்மையில் வேலை செய்யுமா?
இந்த பிரா இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. இன்னும் முழுமையாக சோதிக்கப்படவில்லை. மேலும், புற்று நோயை இந்த பிரவால் கண்டறிய முடியும் என்று புற்று நோய் வல்லுநர்கள் இதனை பரிந்துரை செய்வதற்குமுன் மருத்துவ ரீதியிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பிபிசியிடம் பேசிய பிரிட்டனில் உள்ள புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த அன்னா பெர்மன், அதிகரித்த ரத்த ஓட்டத்தை வைத்து புற்றுநோயை கண்டுபிடித்துவிடலாம் என்பது நம்பகமான அறிகுறி அல்ல என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த பிராவின் மூலம் கட்டிகளை கண்டறிவது நம்பகமான வழி என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. நல்ல தரமான விஞ்ஞான சோதனைகளில் உட்படுத்தப்படாத ஓர் தொழில்நுட்பத்தை பெண்கள் பயன்படுத்துவது என்பது நல்ல யோசனை அல்ல என்றார் அவர்.
மார்பக புற்றுநோயை தற்போது கண்டறிவதற்கான வழிமுறைகள் என்னென்ன ?
ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி அவரவர்கள் தத்தம் உடல்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் :
மார்பு அல்லது அக்குள் பகுதிகள் கட்டிகள்
மார்பகத்தின் அளவு, வடிவம் அல்லது உணர்வில் ஓர் மாற்றம்
மார்பகத்தின் முலைக்காம்பு பகுதியில் திரவம் வடிதல் (தாய்ப்பால் அல்ல )
மார்பில் வலி ஏற்படுதல்
ஜூலியன் எதற்காக இந்த பிராவைக் கண்டுப்பிடித்தார் ?
இந்த திட்டத்தை கையில் எடுக்க ஜூலியனுக்கு ஓர் தனிப்பட்ட காரணம் இருந்தது. அவருக்கு 13 வயதான போது, மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அவரது தாய் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படாததால் ஏறக்குறைய இறக்கும் நிலைக்கே வந்துவிட்டார்.
அவரிடம் கண்டறியப்பட்ட கட்டிகள் புற்றுநோயை வரவழைக்கும் தன்மையற்றது என்று மருத்துவர் கூறியிருந்தார். ஆனால் அவர் தவறாக கூறிவிட்டார். ஆறு மாதங்கள் கழித்து, இரண்டாவது முறையாக மாமோகிராபி என்ற மார்பக புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது அவை புற்றுநோய் கட்டிகளாக மாறியிருந்தன. பின்னர் இறுதியில் அவருடைய இரு மார்பகங்களும் அகற்றப்பட்டன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்