You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்யாவுக்கு எதிராக அணு குண்டு செய்யலாம்: அமெரிக்க ராணுவம் ஆலோசனை
ரஷ்யா அணு ஆயுத்தங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க சிறிய அளவிலான அணுகுண்டுகளைத் தயாரிக்கலாம் என்று அமெரிக்க ராணுவம் அந்நாட்டு அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது மிகவும் மோதல் போக்கான நடவடிக்கை என்று கூறியுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாரோவ், மிகுந்த ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது அமெரிக்காவிடம் உள்ள அணு ஆயுதங்கள் அளவில் மிகவும் பெரியவை என்பதால் அவற்றைப் பயன்படுத்துவதை அமெரிக்கா தவிர்க்கும் என்று ரஷ்யா எண்ணக்கூடும் என்றும், அதனால் அமெரிக்காவின் வசம் உள்ள அணு ஆயுதங்கள் மூலம் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது என்றும் அமெரிக்க ராணுவம் கருதுகிறது.
சிறிய அளவிலான ஆயுதங்கள் ரஷ்யாவை அச்சுறுத்தும் என்று அமெரிக்க ராணுவம் முன்மொழிந்துள்ளது.
இந்த ஆலோசனை அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள நியூக்கிளியர் போஸ்சர் ரெவ்யூ (Nuclear Posture Review) எனும் அணு ஆயுத நிலை மறு ஆய்வு குறித்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த ஆவணம் பதிப்பிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், அமெரிக்கா போர்வெறியில் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
தங்கள் நாட்டைப் பாதுகாக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
அமெரிக்காவின் திட்டம் என்ன?
அமெரிக்காவின் இத்திட்டம் ரஷ்யாவை மட்டும் நோக்கியதல்ல. பழையதாகிவரும் தனது ஆயுதக் கையிருப்பு பற்றி மட்டுமல்லாமல், சீனா, வடகொரியா, இரான் ஆகிய நாடுகளிடமிருந்து வரக்கூடிய சாத்தியக்கூறுகள் மிகுந்த அச்சுறுத்தல் குறித்தும் அமெரிக்கா கவலையடைந்துள்ளது.
ஆனால், ரஷ்யாவைப் பற்றித்தான் முக்கியக் கவலை கொண்டுள்ளது. 20 கிலோடன்-ஐ விட குறைவான வெடிக்கும் திறன் உடைய அணு ஆயுதங்கள் தயாரிக்க அமெரிக்க ராணுவம் ஆலோசனை வழங்கியுள்ளது.
"குறைவான அளவில் இருந்தாலும், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை ரஷ்யாவுக்கு உணர்த்துவதே நமது உத்தி," என்று பென்டகனின் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வசம் அதிக அளவில் உள்ள அணு ஆயுதங்களை அதிகரிக்கச் செய்யாமல், ஏற்கனவே இருக்கும் அணு ஆயுதங்களை மறு வடிவமைப்பு செய்யலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் மீறுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவிடம் உள்ள அணு ஆயுதங்கள்
நிலத்தில் இருந்து ஏவக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகள், கடலில் இருந்தும், விமானம் மூலமாகவும் வீசக்கூடிய அணு ஆயுதங்கள் ஆகியன அமெரிக்காவிடம் உள்ளன. பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது அவை நவீனமயப்படுத்தப்பட்டன.
கடலுக்கு அடியில் இருந்து செலுத்தக்கூடிய அணு ஆயுதங்களின் சேதம் உண்டாக்கும் திறனை குறைக்கும் திட்டம் ஒன்றும் முன்மொழியப்பட்டுள்ளது.
அணு ஆயுதத்தை இலக்கை நோக்கி செலுத்தியபின்னர் ஏவப்பட்ட கப்பலுக்கே திரும்பி வரும் ஏவுகணைகளையும் அமெரிக்கா வடிவமைத்து வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :