ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

துருக்கி படையினர் ஏழு பேர் பலி

வடக்கு சிரியா பகுதியில் குர்து போராளிகளுக்கு எதிரான சண்டையில் ஏழு துருக்கி படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

துருக்கி தலைமையில் நடைபெற்று வரும் தாக்குதல்களால் ஆயிரக்கணக்காக மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவை எதிர்க்கும் ரஷ்யா

ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க சிறிய அளவிலான அணு குண்டுகளைத் தயாரிக்கலாம் என்று அமெரிக்க ராணுவம் அந்நாட்டு அரசுக்கு வழங்கியுள்ள ஆலோசனைக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

தங்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் அந்நாடு கூறியுள்ளது.

வடகொரியா ராணுவ அணிவகுப்பு

தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முந்தைய தினத்தன்று மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பை நடத்த செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை வடகொரியா நியாயப்படுத்தியுள்ளது.

வடகொரியா ராணுவம் நிறுவப்பட்டதை அனுசரிக்கும் விதமாக நடத்தப்படும் இந்த அணிவகுப்பு வழக்கமாக ஏப்ரல் மாதம்தான் நடைபெறும்.

சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய போர் விமானம்

ரஷ்யாவுக்கு சொந்தமான சுகோய்-25 ரக போர் விமானம் ஒன்று சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

விமானம் கீழே விழுந்தபோது அதன் விமானி உயிர் தப்பினாலும், தரையில் ஜிஹாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் அவர் கொல்லப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :