You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பட்ஜெட்: பொருளாதார சரிவை ஒப்புக்கொள்கிறதா மோதி அரசு?
- எழுதியவர், விக்னேஷ். அ
- பதவி, பிபிசி தமிழ்
நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இந்த ஆட்சியின் கடைசி நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 2019 பிப்ரவரியில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தேர்தலுக்கு பிறகு பொறுப்பேற்கும் அரசு 2019-20ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்.
அதையொட்டி நடப்பு நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கையையும் (Economic Survey 2017-18), தற்போதைய சூழ்நிலை பகுப்பாய்வு மற்றும் கொள்கைகள் குறித்த அறிக்கையையும் (State of the Economy: An Analytical Overview and Outlook for Policy) மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆவணங்கள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன்பு வெளியிடப்படுவது வழக்கம்தான் என்றாலும், தொடரும் பொருளாதாரச் சரிவு, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு அவை கூடுதல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளதோடு, இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை பாரதிய ஜனதாவின் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியின் முன்னோட்டமாக இருக்கும் என்பதால் கூடுதல் கவனத்தையும் பெற்றுள்ளன.
மேற்கண்ட அறிக்கைகளில் மத்திய அரசு கூறியுள்ள விவரங்கள், அவற்றின் நேர்மறை மற்றும் எதிர்மறையான செய்திகள் உள்ளிட்டவை குறித்து பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான ஜோதி சிவஞானம் மற்றும் தமிழக அரசின் வருவாய் செயலர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ,எஸ் அதிகாரி தனவேல் ஆகியோருடன் பிபிசி தமிழ் பேசியது.
பொருளாதார ஆய்வறிக்கையின் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் மற்றும் அவற்றுக்கு வல்லுநர்கள் கூறிய கருத்துகள் ஆகியவற்றை தொகுத்தளிக்கிறோம்.
1. ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்ட பிறகு வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
தனவேல்: பணமதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்டபோதே முறை சாராத் துறையில் இருப்பவர்கள் அதிக அளவு வரி செலுத்துவோர் வரம்புக்குள் வருவார்கள் என்று மத்திய அரசு கூறியது. அந்த எண்ணிக்கை 18 லட்சம் என்ற அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறியுள்ளது நேர்மறையான ஒன்றுதான். ஆனால், அதன் முழுப் பலன் அதிகரித்துள்ளதா என்பதை அறிய இன்னும் ஆறு மாத காலமாவது தேவை. வரி வருவாயும் அதிகரிக்கும் என்பது எதிர்பார்ப்பு. ஜி.எஸ்.டி-க்கு பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஓரளவு உண்மைதான்.
ஜோதி சிவஞானம்: வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் வரி வருவாய் அதிகரித்துள்ளதா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்ட பிறகு ஒட்டுமொத்த வரி வருவாயில் மாதந்தோறும் சுமார் 10,000 கோடி ரூபாய் குறைந்துள்ளது.
2. வேளாண்மை அல்லாத, முறைப்படுத்தப்பட்ட தொழில்களில் பணியாற்றுபவர்களின் ஊதியம் அதிகரித்துள்ளது.
தனவேல்: 1991இல் கொண்டுவரப்பட்ட உலகமயம், தனியார்மயம், தாராளமயம் ஆகிய கொள்கைகளைத்தான் வெவ்வேறு விதங்களில் காங்கிரஸ், பாஜக அரசுகள் அமல்படுத்திவருகின்றன. வேளாண்மை, சிறுதொழில் ஆகியவற்றில் உள்ள எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை.
ஜோதி சிவஞானம்: முறைப்படுத்தப்படாத தொழிலில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டதை இந்த அரசு ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், அரசு மறுத்தாலும் பணமதிப்பு நீக்கம் உள்ளிட்டவற்றால் உண்டான பாதிப்புகள் தொடர்ந்து ஊடகங்களில் வந்தது.
3. இந்தியாவின் ஏற்றுமதி விகிதம் வலுவாகவும், பிறநாடுகளை விடவும் அதிக சமத்துவத்துடனும் உள்ளது.
தனவேல்: ஒரு சதவிகித பெருநிறுவனங்கள் 38% ஏற்றுமதியில் பங்கு வகிப்பதாக இந்த அறிக்கையில் அரசே ஒப்புக்கொண்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் 40% வேலைவாய்ப்பு கொடுக்கின்றன. நவீன நிறுவனங்கள் எந்திரமயமாக்கலால் ஆட்குறைப்புதான் செய்து வருகின்றன. இப்போதுதான் இந்தியா ஏற்றுமதியில் முன்னேறி வருகிறது. சேவைத் துறையை நீக்கிவிட்டுப் பார்த்தல் இந்தியாவின் ஏற்றுமதி அளவு குறைவுதான்.
சர்வதேச அளவில் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும், தனியார் முதலீட்டை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை வங்கிகளை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. எனினும் பாமர மக்கள் சார்ந்த வேளாண்துறை குறித்த திட்டங்கள் பற்றிய தெளிவான வாசகங்கள் இந்த அறிக்கையில் இல்லை.
ஜோதி சிவஞானம்: முதலீடு உச்சபட்சமாக இருந்த 2007-08 காலகட்டத்தில் இந்திய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வாணிப விகிதம் 50% அளவுக்கு இருந்தது. அதில் சுமார் 10% தற்போது குறைந்துள்ளது.
4. சேமிப்பை அதிகரிப்பதைவிட, முதலீட்டை அதிகரிப்பதன்மூலமே மீண்டும் வளர்ச்சியைத் தூண்ட முடியும்.
தனவேல்: பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார வளர்ச்சி சரிந்ததை இந்த அறிக்கை மூலம் ஒப்புக்கொண்டுள்ளனர். எனினும், அனைவருக்குமான வளர்ச்சி குறித்த பெரும் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. நான்காண்டு காலம் தேக்க நிலை இருந்தது இந்த அறிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், அதிக மக்கள் சார்ந்துள்ள வேளாண்மை மற்றும் சிறுதொழில் ஆகியவற்றில் நேரடியாக முதலீடுகளை அதிகப்படுத்துவோம் என்பனவற்றை வெளிப்படையாகக் கூறும் வாசகங்கள் எதுவும் இந்த அறிக்கையில் இல்லை.
ஜோதி சிவஞானம்: 2007-08இல் முதலீட்டு விகிதம் உச்சபட்சமானது. அப்போது முதலீட்டு விகிதம் உள்நாட்டு உற்பத்தியில் 36% வரை இருந்தது. தற்போது இருக்கும் 29%தான் வழக்கமானது என்கின்றனர். நாம் முன்பு இருந்த உச்ச அளவை அடைய விரும்பாமல், சரிந்ததை வழக்கமான அளவு என்று கூறக்கூடாது. முதலீட்டைப் பெறுவதில் பிற நாடுகளை விட அதிக அளவில் நாம் இருக்கிறோம் என்று திருப்திப்படக்கூடாது. முதலீடு இல்லாமல் எவ்வாறு பொருளாதாரம் சீரடையும், அதை எவ்வாறு செய்யப்போகிறோம் என்று கூறாமல், எதிர்பார்ப்புகளை மட்டும் அரசு கூறுகிறது. வளர்ச்சி குறைவதை முதலீடுகள் மூலமே தடுக்க முடியும்.
5. பருவநிலை மாற்றம் வேளாண் துறையை மோசமாக பாதிக்கிறது.
தனவேல்: வேளாண்துறை நல்ல பருவ மழை உள்ள காலங்களைத் தவிர மற்ற காலங்களில் நல்ல நிலையில் இல்லை. பருவநிலை குறித்த காரணத்தைக் கூறுவது என்பது அறிவு ஜீவிகள் பாமர மக்களை பயமுறுத்த கூறுவதே. வேளாண் உற்பத்தி அதிகரித்து வந்தாலும், வேளாண்தொழிலில் உள்ளவர்களின் வருமானம் அதிகரிக்கவில்லை. எம்.எஸ்.சாமிநாதன் கமிட்டி உள்ளிட்டவற்றில் வலியுறுத்தப்பட்டுள்ளதைப்போல வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு உற்பத்திச் செலவை விட கூடுதலாக 50%-ஆவது வழங்க வேண்டும் என்பன போன்றவற்றுக்கான உத்தரவாதம் எதுவும் இந்த அறிக்கையில் தெளிவாக இல்லை.
ஜோதி சிவஞானம்: கடந்த பல பத்தாண்டுகளாக நீர்ப் பாசனத்திற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1%கூட செலவிடப்படுவதில்லை. தண்ணீர் இல்லாமல் பல பிரச்சினைகள் உண்டாகியுள்ளன. விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது. அவை அனைத்துக்கும் பருவநிலை மாற்றத்தை காரணம் காட்டக்கூடாது.
மற்ற விடயங்கள் பற்றி என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்?
"கடந்த 2014இல் குறையும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்போம் என்றும், அதிகரிக்கும் பணவீக்கத்தை குறைப்போம் என்றும் உறுதி அளித்தனர். ஆனால், பொருளாதாரம் மேலும் சரிந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவிக்காலம் முடிந்தபோது வளர்ச்சிவிகிதம் 4.9%ஆக இருந்தது. கணக்கிடும் முறையை மாற்றி இவர்கள் அத்துடன் 2.2%-ஐ கூட்டி 7.1% என்றனர். தற்போதைய 6.5%-ஐ பழைய முறையுடன் ஒப்பிட்டால் 4.3% மட்டுமே. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக்காலத்தில் இருந்தததை விடவும் குறைவு," என்கிறார் ஜோதி சிவஞானம்.
"இந்தியாவில் 40 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக்காலத்தில் ரங்கராஜன் கமிட்டி கூறியது. இப்போது திட்டக் குழு கலைக்கப்பட்டதால் இப்போது அதுவும் கணக்கிடப்படுவதில்லை," என்கிறார் அவர்.
"இந்த அரசு பதவிக்கு வரும் முன்பு பொதுச் செலவின் விகிதம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.5%-14%ஆக இருந்தது இப்போது மேலும் குறைந்துள்ளது. அரசு தற்போது தனது பங்கை விலக்கிக்கொள்வது மேலும் பொருளாதாரத்தை கீழே கொண்டுபோகும்," என்று எச்சரிக்கிறார் ஜோதி சிவஞானம்.
"அனைவறையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது இன்னும் ஏட்டளவில்தான் உள்ளது," என்றும், கூட்டுறவு நிறுவனங்கள் நலிவடைந்துவரும் சூழலில், ஏற்கனவே தனியார் வங்கிகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ள நிலையில் இந்த மாற்றங்கள், ஏற்கனவே வாய்ப்பும் வசதியும் உள்ளவர்களுக்கே சாதகமாக அமையும்," என்றும் வங்கிகளை இணைக்கும் மற்றும் வங்கித் துறையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் குறித்து கூறியுள்ளார் தனவேல்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்