You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிவப்பு நிலா - ஊதா நிலா என்ன வித்தியாசம் இரண்டுக்கும்?
இன்று தோன்றக்கூடிய சந்திர கிரகணம் சுமார் 151 ஆண்டுகளுக்கு பிறகு வரவுள்ள காரணத்தாலும், மேலும் சில காரணங்களாலும் சிறப்புவாய்ந்த சந்திர கிரகணம் என பிபிசி தமிழிடம் பேசிய தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழிலநுட்ப மையத்தின் இணை இயக்குனர் முனைவர் சவுந்திரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். அது குறித்த ஐந்து தகவல்கள் இங்கே.
1. இன்று மாலை தோன்றவுள்ளது முழு சந்திர கிரகணம். இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த கிரகணம் தெரியும். இந்திய நேரப்படி மாலை 5.18க்கு துவங்கி இரவு 8.41 வரை இந்த கிரகணம் தெரியும். உலகம் முழுவதும் இந்த நேரங்களில் எந்தெந்த நாட்டுக்கு இரவு நேரமோ அந்தெந்த நாடுகளில் எல்லாம் இந்த கிரகணத்தை பார்க்கலாம்.
2. நீல நிலா தினம் என சொல்லப்படும் தினத்தில் இந்த கிரகணம் தோன்றுகிறது. ஒரு மாதத்தில் இரண்டாவது முறை பௌர்ணமி வருவதை ’புளூ மூன்’ என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். நீல நிலா தினம் என சொல்லப்படும் தினத்தில் சந்திர கிரகணம் நிகழ்வது சற்று அரிதானது. இதற்கு முன்னதாக 1866 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி நீல நிலா தினத்தில் முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. அதற்கு பிறகு 151 ஆண்டுகள் கழித்து இன்றைய தினத்தில்தான் இப்படியொரு நிகழ்வு நடைபெறவுள்ளது. இதற்கு பிறகு 2028 டிசம்பர் 31 ஆம் தேதி இதே போன்ற நிகழ்வு நடைபெறும்.
3. தொலைநோக்கி கொண்டு மட்டுமே பார்க்க வேண்டுமென்ற அவசியம் இல்லை வெறும் கண்களிலும் பார்க்கலாம். சந்திர கிரகணத்தின் போது நிலவின் சுற்றுவட்டார பகுதிகள் ஆரஞ்சு அல்லது செஞ்சிவப்பு நிறத்தில் மாறுவதை பார்க்கலாம். முழு கிரகணம் நடக்கும்போது இந்த நிறமாற்றம் ஏற்படும். எந்த நேரத்தில் இந்த நிறமாற்றங்கள் தோன்றும் என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது. ஆகவே இன்றைய தினம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
4. '' பௌர்ணமி சமயங்களில் உடலுக்கு எப்படி பாதிப்பு கிடையாதோ அதே போல் சந்திர கிரகணத்தாலும் உடலுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. வழக்கமாக பௌர்ணமியின்போது கடல் அலை சற்று அதிகமாக இருப்பது போலவே இன்றைய சந்திர கிரகணத்தின்போதும் கடல் அலை சீற்றம் சற்று அதிகமாக இருக்கும். இதனால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை'' என்றார் சவுந்திரராஜ பெருமாள்.
5. இன்று புவிக்கு அருகில் நிலவு இருப்பதால் சற்று பெரிதாகவும் சற்று கூடுதல் பிரகாசத்துடன் தெரியும். இப்படிப்பட்ட தினத்தில் முழு சந்திர கிரகணம் நிகழ்வது கூடுதல் சிறப்பு எனச் சொல்லப்படுகிறது. இன்று சூப்பர் மூன் தினம் என சொல்லமுடியாது. எனினும் புவிக்கு கிட்டத்தட்ட மிக அருகில் நிலவு வரும் தினத்திலும், நீல நிலா தினத்திலும், முழு சந்திர கிரகணம் நடைபெறுவதாலும், குளிர் காலத்தில் இத்தகைய அரிய நிகழ்வு நடப்பதாலும் அதிக மேக மூட்டங்கள் இன்றி தெளிவாக பார்க்க முடியும்.
நீல நிலா (BLUE MOON) என்றால் நிலா நீல நிறத்தில் தோன்றும் என்று அர்த்தமல்ல. சந்திர கிரகணத்தின் போது மாசு காரணமாக வளி மணடலத்தில் அதிக துகள்கள் இருந்தால் சூரிய வெளிச்சத்தை அது சிதறடித்துவிடும். அப்போது சிவப்பு நிறக்கூறு அதிகமாக இருக்கும் அவை நிலவில் விழுவதால் நிலவு சற்று ஆழமான சிவப்பு நிறத்தில் தோன்றும். ஆகவே அதனை சிவப்பு நிலா (RED MOON) என அழைக்கிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்