60 பொருளாதார நிபுணர்கள் இணைந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது ஏன்?

முதியோருக்கான ஓய்வூதியத்தையும், பெண்களுக்கான மகப்பேறு உதவித்தொகையும் மத்திய அரசு உயர்த்தித்தர வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு 60 பொருளாதார நிபுணர்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.

எதிர்வரும் பட்ஜெட்டில் இந்த இரண்டுக்கும் அவசர முக்கியத்துவம் தர வேண்டும் என அபிஜித் சிங் (ஸ்டாக்ஹோம் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்), ஆதித்ய பட்டாச்சார்ஜீ (டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்), அஜித் ரனாடே (ஆதித்ய பிர்லா நிறுவனம்), அசோக் கோட்வால்(பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம்) , ஜீன் ட்ரீஸ் (டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்), ஜெயதி கோஷ் (ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்) உள்ளிட்ட 60 நிபுணர்கள் இக்கடிதத்தை இணைந்து அனுப்பியுள்ளனர்.

''மத்திய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், முதியோருக்கு ஓய்வூதியமாக கடந்த 2006-ம் ஆண்டு முதல் மத்திய அரசு தனது பங்கீடாக 200 ரூபாயை வழங்கி வருகிறது. இது மிகவும் குறைவானது. இத்திட்டம் மிகவும் நல்ல திட்டம், சிந்தாமல் சிதறாமல் பயனாளிகளுக்கு பலன் போய்ச்சேரும் திட்டம். சமூகத்தின் ஏழை மக்கள் பயன் பெறுவது.

மத்திய அரசு உடனடியாக தனது பங்கீட்டினை குறைந்தபட்சம் 500 ரூபாயாக உயர்த்த வேண்டும். தற்போது 2.4 கோடி பேர் ஓய்வூதியம் பெற்றுவரும் நிலையில், மத்திய அரசு கூடுதலாக 8,640 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டியிருக்கும். அதே போல விதவைகளுக்கான ஓய்வூதியத்துக்கான பங்களிப்பும் ரூ.300லிருந்து குறைந்தது மாதத்திற்கு 500 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும். '' என கூறியுள்ளனர். இதனால் அரசுக்கு ரூ.1,680 கோடி கூடுதல் செலவாகும்.

பெண்களுக்கான மகப்பேறு உதவித்தொகையையும் உயர்த்திதர வேண்டும் என்ற கோரிக்கையையும் இக்கடிதத்தில் வைத்துள்ளனர்.

''தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன் படி, மகப்பேறு காலத்தில் 6000 ரூபாய் உதவிக்தொகைபெற அனைத்து இந்திய பெண்களுக்கும் சட்ட உரிமை உள்ளது. ஆனால், கடந்த மூன்று வருடங்களாக மத்திய அரசு இதற்காக எதையும் செய்யவில்லை. மகப்பேறு உதவித்தொகைகள் விரைவில் வழங்கப்படும் என 2016 டிசம்பர் 31-ம் தேதி பிரதமர் மோதி அறிவித்தார்.

ஓராண்டு கழிந்த பிறகும், இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்ற புதிய திட்டம், இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.

இந்த திட்டத்திற்காக 2017-18 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 2,700 கோடியானது, தேவைப்படும் நிதியில் மூன்றில் ஒரு பங்கே உள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தை மீறும் விதமாக, புதிய திட்டம் மகப்பேறு உதவித்தொகையை ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தைக்கு மட்டும் 5,000 ரூபாய் என்பதாகக் குறைத்துள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் விதிமுறைகளின் படி, 2018-19 மத்திய பட்ஜெட் முழு மகப்பேறு உதவித்தொகைக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் பங்களிப்பு செய்யவேண்டும் என்ற விதியின்படி இதற்கு மத்திய அரசு ரூ.8,000 கோடி ஒதுக்கவேண்டியிருக்கும்'' என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றம் நவம்பர் 28, 2001ல் வெளியிட்ட உத்தரவுப்படி ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதிக்குள் மகப்பேறு மற்றும் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளுக்குப் பணம் பட்டுவாடா செய்யும்விதமாக பட்டுவாடா அமைப்புகளை ஒழுங்குபடுத்தவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :