You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அன்று `பம்பாய்`, இன்று `பத்மாவத்`- மலேசியாவில் திரைப்படங்கள் தடையும், பின்னணியும்
- எழுதியவர், மு.நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
மலேசியத் திரைப்படத் தணிக்கை வாரியம் `பத்மாவத்` திரைப்படத்தை மலேசியாவில் திரையிடத் தடை விதித்திருப்பதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.
மலேசியாவில் உள்ள இஸ்லாமியர்களின் உணர்வுகளை பத்மாவத் திரைப்படம் தூண்டிவிடலாம் என்று அந்நாட்டின் திரைப்படத் தணிக்கை அமைப்பான தேசிய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் தீவிர வலதுசாரி இந்து அமைப்புகள் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய இத்திரைப்படத்தை கடுமையாக எதிர்க்கின்றன.
இத்திரைப்படம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. உச்ச நீதிமன்றம் இத்திரைப்படக் குழுவினருக்கு சாதகமாக உத்தரவிட்ட பின்பும், பா.ஜ.க ஆளும் சில மாநிலங்களில் இத்திரைப்படம் வெளியாகவில்லை. பிற மாநிலங்களில் இத்திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.
இப்படியான சூழலில் மலேசியத் தணிக்கை வாரியம் இப்படத்திற்கு தடை விதித்துள்ளது.
ஏன்... எதனால்?
தற்போதைய வடிவத்தில் இந்த திரைப்படத்தை அனுமதித்தால் அது இஸ்லாமியர்களின் உணர்வைப் புண்படுத்தி சீற்றத்தை ஏற்படுத்தும் என்று மலேசியத் திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் மொஹமத் ஜாபி அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
'ஃப்ரீ மலேசியா டுடே' என்ற மலேசிய நாளிதழிடம் பேசிய அஜீஸ், "இந்தப் படம் மலேசியாவில் பெரும்பான்மையாக வசிக்கும் இஸ்லாமியர்களின் உணர்வைப் புண்படுத்தலாம்." என்று கூறி உள்ளார்.
இஸ்லாமிய சட்டம்
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மலேசியாவை சேர்ந்த எழுத்தாளர் யோகி சந்துரு, " பம்பாய், வாட்டர் போன்ற திரைப்படங்களும் மதக் காரணங்களுக்காக கடுமையான நெருக்கடியை சந்தித்தன. இப்போது வரை அந்த திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகவில்லை. ஆனால், குறுந்தகடுகள் தாராளமாக கிடைக்கின்றன. "
மேலும் பேசிய அவர், "இஸ்லாமிய சட்டம் இங்கு கடுமையாக இருப்பதே திரைப்படங்களுக்குத் தடை விதிக்கக் காரணமாக அமைகிறது. இதனால் அதிக நெருக்கடிக்கு உள்ளானவர் இயக்குநர் யாஸ்மின் அகமத். அவரது `முவால்லாவ்` என்ற மலேசியத் திரைப்படம் 2007ஆம் ஆண்டு மலேசியாவில் தடை விதிக்கப்பட்டது," என்றார்.
பத்மாவத் படம் தடை செய்யப்பட்டிருப்பதற்கான காரணம் பற்றிக் கேட்டபோது, முஸ்லிம் மன்னர் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் படத்தில் வரலாற்றுத் திரிபு இருப்பதாகவும் கருதி அதன் அடிப்படையில் இந்தப் படத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது என்றார் யோகி சந்துரு.
மேல் முறையீடு
இந்தத் தடை உத்தரவுக்கு எதிராக இப்படத்தின் மலேசிய வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ஆண்டென்னா எண்டர்டெயின்மண்ட்ஸ் தணிக்கை வாரியத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், அங்கும் இப்படத்துக்கான தடை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆண்டென்னா எண்டர்டெயின்மண்ட்ஸ் அமைப்பை ஃபேஸ்புக் மூலமாக தொடர்புக் கொண்டு கேட்டபோது, அவர்களும் இத்தடையை உறுதி செய்தனர்.
ஓரின சேர்க்கையை ஊக்குவிப்பதாக கூறி, `பியூட்டி அண்ட் பீஸ்ட்` திரைப்படத்தை கடந்த ஆண்டு தடை செய்தது மலேசிய தணிக்கை வாரியம். பின் நான்கு நிமிட காட்சிகளை நீக்க வேண்டும் என்றது. மேல் முறையீட்டுக்குப் பின், இந்தப்படத்துக்கு எந்த வெட்டுகளும் இல்லாமல், PG 13 சான்றிதழ் கொடுக்கப்பட்டது.
அந்நியத் தன்மை
இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக பத்மாவத் படத்துக்கு சான்றிதழ் மறுத்திருக்கிறது மலேசியா. விஸ்வரூபம், துப்பாக்கி ஆகிய படங்களில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளார்கள் என்று வீதிக்கு வந்து போராடிய அமைப்புகள் எதுவும் பத்மாவத் படத்துக்கு எதிராகத் தமிழகத்தில் போராடியதாகத் தெரியவில்லை.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய திராவிட முன்னேற்ற கழகத்தின் சிறுபான்மை அணியின் துணை பொதுச் செயலாளர், எம். எம். அப்துல்லா, "முதல் காரணம் இது நேரடியான தமிழ்ப் படம் இல்லை; இந்தி படம். மலேசியாவுக்கு இந்திப் படம் நெருக்கமாக இருந்தாலும், தமிழகத்திற்கு என்றுமே அவை அந்நியமாகத் தான் இருந்து இருக்கின்றன. இருந்தும் வருகின்றன. அதுதான் முதல் காரணம்." என்றார்.
மேலும் அவர், "இந்தி படங்கள் மட்டும் அல்ல, அங்குள்ள அரசியலும் இங்கு நமக்கு அந்நியமாகவே இருக்கின்றன. அதனால்தான், பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும், கோத்ரா ரயில் கொளுத்தப்பட்ட போதும், இங்கு பெரிதாக போராட்டங்கள் வெடிக்கவில்லை. வட இந்தியா முழுவதும் வன்முறை சம்பவங்கள் நிலவியபோது, இங்கு அமைதியே நிலவியது. இந்தப் பின்னணியில்தான் `பத்மாவத்` பிரச்னையும் புரிந்துக் கொள்ள வேண்டும்."
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமூன் அன்சாரி, "நாம் எதிர்க்காததற்கு அந்நியமான படம் என்பது காரணமென்றால், வட இந்தியர்கள் எதிர்க்காததற்கு அங்கு ஜனநாயகமான முஸ்லிம் அமைப்புகள் இல்லாமையும், இருக்கின்ற அமைப்புகளும் வலுவற்றதாக இருப்பதும்தான் காரணம்." என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்