You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வராதது ஏன்?'
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதற்கு காரணம், 'மத்திய-மாநில அரசுகள் தங்கள் வரியைக் குறைக்க மறுப்பதா? சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வா?' என்று வாதம் விவாதம் பகுதியில் பிபிசி நேயர்களிடம் கேட்டு இருந்தோம்.
அதற்கு அவர்கள் அளித்த கருத்துகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.
"நடுவணரசு மாநிலங்களின் வரி வருமானங்களை "ஒரே நாடு ஒரே வரி" என்று நள்ளிரவில் நாட்டுப்பற்றைப் பற்றவைத்து பிடித்துக்கொண்டதால், வேறு வழியின்றி (பெட்ரோல் டீசல்) வரியைக் குறைத்தால் வருமானத்தை விட நேரிடும் என விடாப்பிடியாய் மாநில அரசுகள் தங்களது நிலைப்பாட்டில் மாற்றமின்றி செயல்படுகிறது. நடுவண் அரசோ, உள்நாட்டில் உற்பத்தியாகும் பெட்ரோலிய பொருட்களை உள்நாட்டுத் தேவைக்கு பயன்படுத்தாமல் ஏற்றுமதி செய்தும், இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து இருந்தாலும் மானியங்களை எண்ணெய் நிறுவனங்களுக்கு வாரி வழங்கி விலை நிர்ணய உரிமையை அவர்களிடமே விட்டுவிட்டு மக்களிடம் வரி சதுரங்க வேட்டை விளையாடுகிறது." என்கிறார் பிபிசி நேயர் சக்தி சரவணன்.
சரோஜா பாலசுப்பிரமணியன் சொல்கிறார், "மற்ற நாடுகளை விட, நம் நாட்டில் டீசல், பெட்ரோல் விலை மிக அதிகம். ஐம்பது பெர்சன்ட் வரிக்கே போய் விடுகிறது. டீசல் பெட்ரோலை ஜிஎஸ்டி க்கு கீழ் கொண்டு வந்தால், பாதி விலை குறையும். டீசல் பெட்ரோலை விலை குறைந்தால் விலை வாசி குறையும். இந்திய பொருளாதாரம் மேம்படும். மத்திய மாநில அரசுகள் மனது வைக்க வேண்டும்."
"தினம் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி கொள்ளலாம் என்று தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது தான் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம் பெட்ரோலிய நிறுவனங்களை அரசு வழி நடத்தினால் மட்டுமே விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியும் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் விலை மிகவும் குறைய வாய்ப்புள்ளது" என்பது புலிவலம் பாட்ஷாவின் கருத்து.
நிச்சயமாக மத்திய மாநில அரசுகளின் வரி விகித உயர்வுதான் காரணம்,மக்கள்மீது கவனம் கிடையாது பெட்ரோலிய தொழில் அதிபர்கள் கண் அசைவில் இயங்கும் அரசாகவே உள்ளது என்கிறார் வேம்பார் குணசேகரன்.
ஹனீஃப், "இந்த விலை ஏற்றம் மத்திய அரசு வரியை குறைக்காமல் இருப்பது." என்கிறார்.
ஜான் பீட்டர் ஞானபிரகாசம், "கடை கோடி சாமானியன் வரை வசூலிக்கும் வரி பணத்தில் பெரும் பகுதி அரசின் செலவுகள் மற்றும் சம்பளம் இவற்றில் அரசு செலவிடுவது தான் காரணம்."
சூரிய பிரகாஷ், "வரியை குறைக்க மறுப்பதாலும், உற்பத்தி வரியை கூட்டியதாலும், தனியார் முதலைகளுக்கு தாரைவார்த்தாலும், மந்திரிகளுக்கு ஒசியில் வழங்குவதாலும், ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வராததாலும், ஏழை எளிய/நடுத்தர மக்கள் உயர்ந்து விடக்கூடாது, பயன் பெற கூடாது, என்ற முன்னால்/இந்நாள் அரசுகளின் கொள்கை அடிப்படையிலும்தான் இந்த பெட்ரோலிய விலைவாசி உயர்வுகள்." என்கிறார்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்